June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி

1 min read

8.7.2020

Corona kills 4 in one day in Tirunelveli, Thoothukudi and Tenkasi

நெல்லை மாவட்டத்தில் இருவரும், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என நேற்று 4 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நெல்லை அடுத்துள்ள மானூரை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனா பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க எஸ்டிபிஐ கட்சி மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் தன்னார்வ மீட்புக்குழுவினர் மாவட்ட செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் மற்றும் தடுப்பு பயிற்சி பெற்ற குழுவினர் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை மின் மயானத்திற்கு எடுத்துச் சென்று தகனம் செய்தனர்.

நெல்லை தாழையூத்து அருகே தென்கலத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காய்கறி சந்தை அருகேயுள்ள வீட்டில் 63 வயது முதியவர் மகன், பேரன், பேத்திகளோடு வசித்து வந்தார். இந்நிலையில் முதியவருக்கு மட்டுமின்றி அவரது 2 மகன், 2 மகள், ஒரு மருமகன், ஒரு மகளின் 9 வயது பேரன், 8 மாத ஆண் குழந்தை ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. இவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களுடன் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. எனினும் அந்தக் குழந்தையின் தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் குழந்தையை கவனிக்க வழியின்றி தாயுடன் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 63 வயது முதியவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு கூட மகன்களால் செல்ல முடியாத நிலையில் அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நெருங்கிய உறவினர்கள் மூலம் எஸ்டிபிஐ குழுவினருடன் சேர்ந்து உடலை கிறிஸ்தவ மத முறைப்படி கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

தந்தை இறந்ததை கேள்விப்பட்டு வெவ்வேறு வார்டுகளில் சிகிச்சையில் இருக்கும் மகன், மகள், பேரன் மற்றும் மருமகன் ஆகியோர் அவரது உடலைக் கூட பார்க்க முடியாமல் கதறி அழுதது, அந்த வார்டுகளில் இருந்த மற்ற கொரோனா நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியது. இவர்கள் மூவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள்.

தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த 50 வயதான பெண், உடல்நலக்குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதையடுத்து அவரது உடல், உறவினர் ஒப்புதலுடன் மாநகராட்சி மூலமாக நேற்று பிற்பகல் 2 மணியளவில் தூத்துக்குடி மில்லர்புரம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

=

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *