April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தனியார் பள்ளிகள் முழு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- ஐகோர்ட் எச்சரிக்கை

1 min read

31/7/2020

Action if private schools charge full fees- HiCourt warning

சென்னை: தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. பல பள்ளிகளில் முழு கட்டணத்தையும் கட்டவேண்டும் என்று கூறுவதால் பெற்றோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், நடப்பு கல்வி ஆண்டிற்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படாததால், சென்ற ஆண்டு வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில், தமிழகம் முழுதுமுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் 2020 – 2021 ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்த்தில் 40 சதவீத தொகையை ஆகஸ்ட் 31 க்குள் வசூலித்து கொள்ளலாம் எனவும்,மீதமுள்ள 35 சதவீத தொகையை பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்குள் வசூலித்துக்கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, பள்ளிகள் முழு கட்டணத்தையும் மாணவர்களிடம் இருந்து வசூலிப்பதாக, தமிழக அரசு சார்பாக அரசு வக்கீல் அன்னலட்சுமி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையிட்டார். இதைக் கேட்ட நீதிபதி, எந்தெந்த பள்ளிகள் கட்டணம் வசூலிக்கிறது என்று ஆகஸ்ட் 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.