April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

இரட்டை சொற்கள் 7, 8, 9 (நகை நட்டு, மூஞ்சி முகரை, தானம் தர்மம்

1 min read

Double words in tamil by Muthumani

3-8-2020

நமது தென் தமிழகத்தில் பேச்சு வழக்கில் இரண்டை சொற்களை நாம் பேசுவோம். இதுபற்றி அலசி ஆராய்கிறார் முத்துமணி எம்.ஏ.எம்.பில். அவர்கள். அதன் தொடர்ச்சி…

  1. நகை நட்டு.
    உமக்குக் கழுத்தை நீட்டி அஞ்சு வருஷம் ஆச்சு .எங்க அப்பா போட்டதோடு சரி .ஒரு நகை நட்டு வாங்கிக் கொடுத்தது உண்டா? என்று ஒரு பெண் கணவனிடம் கேட்கும்போது, நகை என்பது புரிகிறது. அது என்ன நட்டு? என்று யோசிக்கும் போது ஒருவேளை இப்படி இருக்கலாமோ என்று தோன்றிற்று.
    தங்கத்தில் பெண்கள் அணிந்து கொள்ளும் அணிகலன்கள் இரண்டு வகையாக இருக்கின்றன.கழுத்தில் அணிந்து கொள்ளும் சங்கிலி அதாவது செயின் கைகளில் அணிந்து கொள்ளும் வளையல்கள் போன்றவற்றை அப்படியே எடுத்து மாட்டிக் கொள்ளலாம் அதாவது அணிந்துகொள்ளலாம். காதில் போடும் காதணிகள் அதாவது கம்மல் மூக்கில் அணிந்துகொள்ளும் மூக்குத்தி போன்றவற்றை அப்படியே எடுத்துப் போட்டுக் கொள்ள முடியாது. அதிலொரு திருகாணி இருக்கும். மிகச் சரியாகப் பொருத்தி, திருகாணியை மிகவும் இறுக்கமாகத் திருகிக் கழண்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அப்படியே எடுத்து கழுத்தில் போட்டுக் கொள்ளும் சங்கிலி கைகளில் அணிந்து கொள்ளும் வளையல்கள் போன்றவற்றை நகை என்ற பெயரிலும்,திருகாணி வைத்து மாட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ள காதணி, மூக்குத்தி, கொலுசு போன்றவற்றை நட்டு என்ற சொல்லாலும் குறிப்பிட்டிருப்பார்கள் என்று கருதத் தோன்றுகிறது. ஆண்கள் அணிந்துகொள்ளும் மோதிரம் நகை என்றும் bracelet எனப்படும் கை வளையலை நட்டு என்றும் குறிப்பிடலாமா?

  1. மூஞ்சி முகரை
    ஏதாவது பேசினா மூஞ்சி முகரைய உடச்சிடுவேன். என்று கோபத்தில் பேசுவார்கள். நமக்கு இருப்பது முகமா? முகரயா ? இதில் ஏகப்பட்ட சந்தேகம். சில பேர் திட்டும்போது முகரக் கட்ட என்று திட்டுவது உண்டு. இன்னும் ஒருபடி மேற்சென்று யோசிக்கும்போது இன்னொரு சொல்லும் தோன்றுகிறது. அது மூஞ்சி.. என் மூஞ்சியில் முழிக்காதே என்று உறவை முடித்துக் கொள்வார்கள்.
    அப்படியானால் முகம், மூஞ்சி, முகரை என்பதற்கான வேறுபாடுகள் என்ன குழப்பம்தான் ஏற்படுகிறது. இது ஒருபுறமிருக்க , மூஞ்சி முகரைக்கு வருவோம். ஒருவருக்கு எதிராக நாம் ஏதோ ஒன்றை செய்து விட்டோம். அவர் மனம் நோகும்படி பேசி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு நாளில் அவரைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. போய் அவரைப் பார்த்து வாருங்கள் என்று மனைவி சொல்லும்போது, எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரைப் பார்ப்பேன் ?என்று சொல்வோம். அப்படியானால் முகம் என்பது நம் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் போது ஏற்படும் மாறுதல்களை உட்படுத்தியது என்றும், மூஞ்சி என்பது இயல்பாக நமக்கு அமைந்தது என்றும் கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால் மூஞ்சி இயல்பானது. அந்த மூஞ்சி பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் போது முகம் ஆகிறது. அப்படியானால் நம்மால் மாற்ற முடியாதது மூஞ்சி. மாற்றிக்கொள்ள முடிவது முகம் அல்லது முகரை….. அவனுக்குக் குரங்கு மூஞ்சி, இவனுக்கு குதிரை மூஞ்சி, என்று ஒப்பிட்டு குறுவார்கள். அதே நேரத்தில் எந்த முகத்தோடு எம்மைக் காண வந்தாய்? என்றும் கேட்பார்கள்.ஒருவனுக்குப் பல முகங்கள் இருக்கலாம். ஆனால் மூஞ்சி ஒன்றுதான் இருக்கும் என்று தோன்றுகிறது. மூஞ்சி ஆண்டவன் படைத்தது. அதை விதவிதமாக மாற்றும் வேலையை மனிதன் செய்யும் போது முகம் ஆகிறது.
  1. தானம் தர்மம்
    தானம் என்றால் கொடுப்பது அனைவருக்கும் தெரியும். இல்லாதவர்க்கு இருப்பவர்கள் எதையெல்லாம் தானம் செய்யலாம் என்று நெறிமுறைகள் உள்ளன. இந்து தர்மத்தில் 32 வகையான தானங்களைக் குறிப்பிடுகிறார்கள். எத்தனை தானங்கள் இருந்தாலும் அன்னதானம் தலை சிறந்தது. அதாவது பசியில் இருப்பவனுக்கு வயிறார உணவளிப்பது. இன்றும் கோவில்களில் நடைபெற்று வருகிறது.
    உணவைக் கொடுத்தால் அன்னதானம். பொன்னைக் கொடுத்தால் சொர்ண தானம். பூமியைக் கொடுத்தால் பூதானம். இப்படியெல்லாம் யாருக்கு எது இல்லையோ எதை கொடுத்தால் அவன் வறுமை நீங்கும் அப்போதைக்கு அவனது தேவை திருமோ அதைக் கொடுப்பது தானம்.
    அப்படியானால் தர்மம் என்பது என்ன? நான் ஒரு நான்கு பேரை அழைத்து அவர்களுக்கு வயிறார உணவளித்து வேண்டிய பொருளையும் கொடுத்து அனுப்பி விட்டால்தானம் கொடுத்து விட்டேன். அதைச் செய்யாமல் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தேன் என்றால் அது தர்மம். நீர் இல்லா ஊரில் ஒரு குளத்தை வெட்டி வைத்தால் அது தர்மம். நீரைக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தால் அது தானம்.
    சுருக்கமாகச் சொன்னால் தானம் என்பது அந்த நேரத்தில் அவர்கள் தேவையை மட்டும் பூர்த்தி செய்வதாக அமையும். தர்மம் என்பது காலாகாலத்துக்கும் நின்று எல்லோருக்கும் நன்மை செய்வதாக இருக்கும். அசோகரின் சாலை ஓரங்களில் மரங்களை நட்டார். அக்பர் குளங்களை வெட்டினார். சோறு போடுவது தானம் அன்னதான சத்திரங்கள் அமைப்பது தர்மம். தண்ணிரைக் கொடுப்பது தானம். குளங்களை வெட்டுவது தர்மம்.
    தானம் பெறுவோர் மட்டும் நலம் பெறுவர். தர்மம் அதற்குப் பின்னும் நின்று அனைவருக்கும் பலன் தரும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.