அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி பெற்றவர்கள்தான்- அமைச்சர் உறுதி
1 min readOnly those who have passed the examination for the Aryan examination will be eligible- Minister Anbalagan assured
4-9-2020
கல்லூரி செமஸ்டரில் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்கள்தான் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உறுதிபடுத்தி உள்ளார்.
அரியர் தேர்வு
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளைத் தவிர, பிற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என, அரசு அறிவித்தது.
இந்நிலையில், பி.இ., படிப்பில் அரியர் வைத்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க ஏ.ஐ.சி.டி.இ. மறுத்துள்ளதாகவும், இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கூறும்போது, “அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே ஏ.ஐ.சி.டி.இ.,-ன் விதியாக உள்ளது. விதியை மீறினால், பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும்” எனக் கூறினார்.
அமைச்சர் உறுதி
இதனால் அரியர் தேர்வுகளுக்கு பணம் செலுத்தியவர்கள் குழப்பம் அடைந்தனர்.
இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:-
அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து எனக்கு மின்னஞ்சல் எதுவும் வரவில்லை. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும். அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பாவின் கருத்தை ஏ.ஐ.சி.டி.இ.,-ன் கருத்தாக திணிக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.