May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகர் அஜித் பெயரை தவறாக பயன்படுத்தி ஆதாயம்; பரபரப்பு அறிக்கை

1 min read

Gain by misusing the name of actor Ajith

17-9-2020

தங்களது ஆதாயத்திற்காக சிலர் நடிகர் அஜித் பெயரை பயன்படுத்துகிறார்கள் அவர்களிடம் கவனமாக இருங்கள் என நடிகர் அஜித் குமார் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார்.

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித் குமார் படாடோபத்தை விரும்பாதவர். தனது ரசிகர்களை மிகவும் கட்டுக்கோப்போடு வைத்திருப்பவர். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பவர்.
சினிமா தவிர்த்து வெளியிடங்களில் அவ்வளவாக தலைகாட்டாதவர். சினிமா நிகழ்வுகளோ, ஏன் தன் பட விழாக்களில் கூட அதிகமாக பங்கேற்க மாட்டார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தனது பெயரை பயன்படுத்த ரசிகர் மன்றங்கள் காரணமாக இருப்பதை உணர்ந்த அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்து அறிக்கை வெளியிட்டார். அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அஜித் ரசிகர்கள் ஒருசிலர் பாரதீய ஜனதாவில் இணைந்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து அதற்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டு கட்சிகளிடையே தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என அஜித் கேட்டுக் கொண்டார்.

அறிக்கை

இந்த நிலையில் தனது பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவதாக கூறி அஜித் சார்பில் அவரது வக்கில் பரத் என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது :-

நான் அஜித் குமாரின் அதிகாரப்பூர்வ சட்ட ஆலோசகர். அவர் சார்பில் இந்த அறிக்கையை வெளியிடுகிறோம். சமீபகாலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிக்காரர்(அஜித்) சார்பாகவோ அல்லது அவரது பிரதிநிதி போலவோ அவரின் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளன.
அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா மட்டுமே அவரின் சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி. தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்தத் தகவலை சுரேஷ் சந்திராவிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். இதை மீறி இத்தகைய நபர்களிடம், தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாகத் தொடர்பிலிருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொதுமக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது..

காரணம் என்ன?

சமீபத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் அஜித் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அஜித் ஏஜிஎஸ் இடையே திரைப்படம் ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் செய்திகள் வெளியானது. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் மறுத்து செய்தி வெளியிட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியை அடுத்து அஜித் இவ்வாறாக அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.