May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

சினிமா உருவான வரலாறு / நாகராஜன்

1 min read

History of Cinema / Nagarajan

17-9-2020

சினிமாவின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. ஆரம்பத்தில் சலனப்படத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் லூமியர் சகோதரர்கள். இவர்களது தந்தை ஆன்டோனியோ லூமியர் லியோன் நகரத்தின் சிறந்த ஓவியர். அப்பொழுது பிரபலமாகிக் கொண்டிருந்த புகைப்படத்தயாரிப்புக்கு அவர் வந்து சேர்ந்திருந்தார்.

புகைப்படச் சுருள்

அவரின் பிள்ளைகள் அகஸ்டஸ் மற்றும் லூயிஸ் தொழில்நுட்ப பாடம் படித்துவிட்டு அவருக்கு தொழிலில் உதவ வந்தார்கள்

புகைப்படச்சுருளை வேகமாக டெவலப் செய்ய உதவும் உலர் தட்டை பதினேழு வயதில் லூயிஸ் உருவாக்கியது பெருத்த திருப்பமாக அமைந்தது. கோடிக்கணக்கான தட்டுக்களை தயாரித்து வருமானம் அள்ளினார்கள்.

ஆன்டோனியோ எடிசன் அவர்கள் உருவாக்கியிருந்த கைனடோஸ்கோப் திரையிடலுக்குப் போயிருந்தார். அதில் ஒரு ஓட்டை வழியாக காட்சியைப் பார்க்க வேண்டும். ஆர்வம் மேலிட தன் மகன்களிடம் திரும்பி வந்தவர் அதே போல ஒரு படத்தை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிற வகையில் உருவாக்க வேண்டும் என்றார்.

எடிசனின் கைனடோஸ்கோப்பில் பிரேம்கள் அதிகம் என்பதால் சத்தம் அதிகமாக உண்டானது. கேமிராவும் பெரிது. அதில் வெவ்வேறு கருவிகள் தனித்து இயக்கப்பட்டதால் காட்சியும் தெளிவாக அமையவில்லை. காஸ்ட்லியாக வேறு இருந்தது.
ஒரே ஒருவர் மட்டுமே ஒரு சமயத்தில் பார்க்க முடியும். எல்லாக் கருவிகளையும் ஒரே இடத்துக்குள் இணைத்து லூமியர் சகோதரர்கள் சாதித்தார்கள். பிரேம்களின் எண்ணிக்கையை பன்னிரண்டு முதல் பதினாறு வரை குறைத்து இரைச்சலை பெருமளவில் நீக்கினார்கள் . இடம்விட்டு இடம் கொண்டு போவது சுலபமாக இருந்தது.

முதல் படம்

இதனை அடுத்து முதல் சலனப்படம் 1895 இல் Cinématographe என்கிற கருவியின் மூலம் ப்ராஜக்ட் செய்யப்பட்டு மக்களுக்கு கிராண்ட் கேப் என்கிற இடத்தில் பாரீஸில் காட்டப்பட்டது. லூமியர் ஆலையை விட்டு மக்கள் வெளியேறுவது தான் உலகின் முதல் சலனப்படம் !

பல்வேறு காட்சிகளை சிறு சிறு படங்களாக எடுத்தார்கள். ஆனால்,தாங்கள் புதிய ஒரு புரட்சியை துவங்கி வைத்திருக்கிறோம் என்று அவர்கள் எண்ணவில்லை. மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு காட்சிகளை காண்பித்தார்கள் .
ஐரோப்பா மற்றும் ஆசியக்கண்டம் என்று அவர்கள் பயணம் செய்து தங்களின் படங்களை திரையிட்டுக் காண்பித்தார்கள். ப்ரூசல்ஸ், லண்டன், நியூ யார்க் நகரங்களில் நான்கே மாதத்தில் படம் திரையிட அரங்குகளைத் திறந்தார்கள். சலனப்படங்களை திரையில் அவர்கள் காண்பித்த உத்வேகத்தில் பலர் படமெடுக்க கிளம்பினார்கள்.

உலகம் முழுக்க இருந்து காட்சிகளை படம்பிடித்துக் கொண்டு வர 1896 ஆம் ஆண்டிலேயே பலருக்கு பயிற்சி தந்து அனுப்பினார்கள். அப்படி பிடிக்கப்பட்ட காட்சிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது.
தொடர்வண்டியின் வருகை, கடுமையாக உழைக்கும் கொல்லன், குழந்தைக்கு உணவூட்டுவது, அணிவகுப்பு செய்யும் வீரர்கள்,தோட்டக்காரர் மீது தண்ணீர் பாய்ச்சி குறும்பு செய்யும் சிறுவன் அப்படிக்காட்டப்பட்ட சில காட்சிகள்

உலகின் முதல் டாக்குமெண்டரிக்களும் அவர்கள் எடுத்ததே.
லியான் நகரத்து தீயணைப்புத் துறைக்காக ஒரு நான்கு படம் எடுத்துக்கொடுத்தார்கள். வண்ணப் புகைப்படங்கள் உருவாக்கம், ஆட்டோ க்ரோம் தொழில்நுட்ப உருவாக்கம், மக்களுக்கு பயன்படும் மருத்துவ ஆய்வுகள் ஆகியவற்றிலும் லூமியர் சகோதரர்கள் அவர்கள் ஈடுபட்டார்கள்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.