எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீண்டும் கவலைக்கிடம்
1 min readSP Balasubramaniam is worried again
24/9/2020
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென்று அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டது. அவருக்கு’எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அவ்வப்போது கூறிவந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தனது தந்தையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறினார். பின்னர் திரவ உணவு வழங்கப்பட்டு வருவதாக சொன்னார்.
நேற்று முன்தினம் தனது தந்தை குணமாகி வீடு ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
கவலைக்கிடம்
இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.எம்.ஜி.எம்., மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “கடந்த, 24 மணி நேரத்தில்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம்., உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன், தொடர்ந்து சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை தீவிரமாக கவனித்து வருகின்றனர்” என, கூறப்பட்டுள்ளது.
கமல் பேட்டி
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என அறிவிப்பு வெளியாகிய நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிக்கு நடிகர் கமல்ஹாசன் சென்றார். அவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் சரணிடம் சிகிச்சை முறை குறித்து விசாரித்தார்.
பின்னர் அவர் கூறும்போது, “எஸ்.பி.பாலசுப்பிரமணியம். நலமாக இருக்கிறார் என்று கூற முடியாது. உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது” என்றார்.