6.5 லட்சம் வரியை குறைக்க கோரிய ரஜினிக்கு ஐகோர்ட்டு கண்டனம்
1 min read
High court condemns Rajini for demanding Rs 6.5 lakh tax cut
14/10/2020
ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி விதித்த 6.5 லட்சம் சொத்துவரியை குறைக்கக்கோரி வழக்கு தொடர்ந்த ரஜினிகாந்துக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
ரூ.6.5 லட்சம் வரி
சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்துக்கு சொத்து வரியாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியது உள்ளது. நிலுவையில் உள்ள இந்தப் பணத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்த், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடைசியாக கடந்த பிப்ரவரி 14-ந் தேதி சொத்துவரி செலுத்தியுள்ளோம். சொத்து வரிகளை வழக்கமாக செலுத்தி வருகிறோம். கொரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய – மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபத்தை யாருக்கும் வாடகைக்கு விடவில்லை. கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கியுள்ளோம்.
அக்டோபர் 15-ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் 2 சதவித அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது. மண்டபம் காலியாக இருந்ததால் மாநகராட்சி சட்டப்படி பாதி வரியை திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளதால் அதன்படி நிர்ணயிக்க கோரி மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை சொத்து வரி மீது அபராதம் மற்றும் வட்டியை வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ரஜினியின் வழக்கறிஞர் “பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.
நீதிபதி கண்டனம்
அதை ஏற்க மறுத்த நீதிபதி, “செப்டம்பர் 23-ந் தேதி கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29-ந் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பீர்களா?” என கேள்வி எழுப்பினார்
“மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா? நடவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றவில்லையா? நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த வழக்கை கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாக நீதிபதி எச்சரித்தார்.
நீதிபதி கண்டனத்தை அடுத்து, அபராதம் விதிக்க வேண்டாம், வழக்கை திரும்பப் பெறுகிறோம் என ரஜினி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தள்ளுபடி
இதனையடுத்து வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
தள்ளுபடி
இந்நிலையில், வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக ரஜினியின் வாபஸ் மெமோவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்தார்.
வலைதளத்தில்..
இந்த வழக்கு பற்றிய செய்தி வலைதளத்தில் வந்தது. பலர் நெட்டிசன்கள் ரஜினிக்கு வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளனர். கோடி கணக்கில் சம்பவாதிக்கும் அவரால் இந்த கொரோனா காலத்தில் ஆறரை லட்சம் வரியை கட்ட அவரால் முடியாதா? என்றும்,இந்த வரியையே கட்ட முடியாதவர் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறாரோ? என்றும் விமரித்துள்ளனர்.