நீட் தேர்வு முடிவுகள் திருத்தத்துடன் வெளியீடு
1 min readRelease of NEET Exam Results with Amendment
17/10/2020
நீட் தேர்வு முடிவுகள் திருத்தத்துடன் இணையதளத்தில் திருத்தத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு
கொரோனா ஊடரங்கு காரணமாக நீட் தேர்வு தாமதமாக நடந்தது. இதனால் செப்டம்பர் 13 மற்றும் அக்டோபர் 14-ந் தேதிகளில் நீட் தேர்வு நடந்தது.
இந்த தேர்வை நாடு முழுவதும் 13 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 99 ஆயிரத்து 610 பேர் தேர்வு எழுதினர்.
நீட் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ. நேற்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டது. இதில் 7 லட்சத்து 71 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த தேர்வு முடிவுகளில் குளறுபடி உள்ளதாக சர்ச்சை எழுந்தது. சில மாநிலங்களில் தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிகம் பேர் தேர்ச்சி, மாநில தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது போன்ற புகார்கள் கூறப்பட்டன.
வெளியிடப்பட்ட பட்டியலில் தமிழகத்திற்கு கீழே இருந்த 5 மாநிலங்களின் புள்ளிவிவரத்தில் ஏற்பட்ட தவறு சரி செய்யப்பட்டுள்ளது. திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, உத்தரகாண்ட் மாநில தேர்வு பகுப்பாய்வு மாற்றம் செய்யப்பட்டது.
நீட் தேர்வு பகுப்பாய்வு பட்டியலில் மாநிலங்களின் விவரம் இடம் மாறியதால், ஏற்பட்ட பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
திருத்தப்பட்ட பட்டியில்
இதனால் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் திருத்தப்பட்ட பட்டியலை தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் 5வது இடம்
நாட்டிலேயே நீட் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 99,610 மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 57.4 சதவீதம் ஆகும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதால், அந்த மாநிலம், பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
ஜீவித் குமார்
நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ஜீவித்குமார் என்ற மாணவர் 720 – 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசு மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதன்பின் தற்போது பயிற்சி எடுத்து மீண்டும் தேர்வு எழுதி சாதனை படைத்துள்ளார்.
தமிழக அரசின் பயிற்சி மையம்
தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் பயின்று தேர்வு எழுதிய 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மொத்தம் 6,692 பேர் நீட் தேர்வை எதிர் கொண்டனர். அதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 738 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.