May 27, 2024

Seithi Saral

Tamil News Channel

சிவாஜிகணேசனிடம் வந்த எஸ்.வி.சுப்பையா பஞ்சாயத்து

1 min read

SV Subbaiah Panchayat who came to Shivaji Ganesan

20/10/2020

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிகர் சங்கத்தலைவராக இருந்தார். அவர் நடிகர் எஸ்.வி.சுப்பையா மீது மிகுந்த அன்பு கொண்டவர். அண்ணன் என்றுதான் அழைப்பார். எஸ்.வி.சுப்பையாக அதிகமாக சிவாஜிகணேசன் படங்களில்தான் நடித்தார். எஸ்.வி.சுப்பையாகவுக்காக சிவாஜிகணேசன் காவல்தெய்வம் என்ற படத்தில் பணம் வாங்காமல் கவுரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.
அப்படி அன்பு கொண்ட எஸ்.வி.சுப்பையா பற்றி ஒரு பஞ்சாயத்து சிவாஜியிடம் வந்தது. அது மனோரஞ்சிம் என்ற படத்தில் உருவான பிரச்சினை. அதில் தனக்கு வேண்டியவர் என்பதற்காக சிவாஜி கணேசன் எஸ்.வி.சுப்பையாவுக்கு சாதகமாக பேசவில்லை. நியாத்தின் வழியில்… நின்று பேசினார். இறுதியில் யாருக்கும் நஷ்டம் ஏற்படாத வகையில் ஒரு தீர்ப்பை வழங்கினார். அதுபற்றி எழுத்தாளர் கோ.வி.மணிசேகரன் கூறியதை இங்கே காணலாம்..

“மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம். ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்!

எஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.

4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும்(கோ.வி.மணிசேகரன்) சோதனைதான்!

“ரத்தக்கண்ணீர்” படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்!

10 முறை படம் எடுத்தும் காட்சி “ஓகே” ஆகவில்லை.

நேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். “ஒன் மோர் டேக்” என்றேன்.

“பிரேக்” சொன்ன எஸ்.வி.சுப்பையா

சுப்பையாவோ, “சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே” என்றார்.

நான் விடவில்லை. “அண்ணே! இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்!” என்றேன்.

ஆனால் சுப்பையா, தன் “விக்”கை கழற்றி எறிந்தார். “பிரேக்” என்று கூறிவிட்டார்.

படப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் “பிரேக்” என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.

“மிஸ்டர் சுப்பையா! `பிரேக்’ சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்!” என்றேன்.

சுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறவில்லை.

நான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.

சிவாஜி விசாரணை

அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.

இரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.

பிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, “நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்’ என்று நீங்கள் சொன்னது தவறு” என்றார்.

ஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.

“வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது? தயவு செய்து நடிக்க வாருங்கள்” என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

நான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.

அப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, “சுந்தர்ராஜா! நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே!” என்றார்.

சிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.

சிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

படம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.

மூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.

சிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.

மீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.

அவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.

நான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். “முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா?” என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.

மீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை சுற்றியது.
“கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது” என்று கிருஷ்ணன் – பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.

பட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்? படம் நின்று போனது.

சிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.

மனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது? இதுதான் விதி!”

இவ்வாறு மணிசேகரன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.