May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

திக்குத் தெரியாத காட்டில் / சிவகாசி முத்துமணி

1 min read

Thidai- Tikku- Tamil Ilakkiyam by Sivakasi Muthumani

25/11/2020

(திக்கு…திசை பற்றிய விளக்கம்)

திக்கு என்ற சொல் திசையையும், திசை என்ற சொல் திக்கையும் குறிக்கிறது என்பது அனைவரும் அறிவோம். ஆனால் இவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் வேறுபாடு ஏதேனும் உள்ளதா? என்று சிந்தித்தால் குழப்பம்தான் நேரிடுகிறது.
இவ்விரண்டு சொற்களும் இன்றும் மொழிப் பயன்பாட்டில் இருக்கின்றன.
பொதுவாகக் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு பக்கங்களையும் (directions) அறிமுகம் செய்யும்போது, திசைகள் என்ற சொல்லைத்தான் நம் ஆசிரியர் பயன்படுத்தினர்.
திசைகள் நான்கு மிகச் சரியாக 90 பாகை(டிகிரி) வேறுபாட்டில் அமையும் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு. கிழக்கு நோக்கி நின்று கொண்டு வலக்கையை நீட்டினால் தெற்குத்திசை. இடக்கையை நீட்டினால், வடக்குத்திசை, பின்புறம் இருப்பது மேற்குத் திசை என்று சிறுவயதில் சொல்லித் தருவார்கள்.
பிறகு இவை ஒவ்வொன்றிற்கும் இடையில் ஒவ்வொரு திசையைக் கற்பித்தார்கள். தென் திசைக்கும் மேல் திசைக்கும் இடையில் உள்ளது தென்மேற்கு திசை. வடதிசைக்கும் கீழ்த் திசைக்கும் இடையில் உள்ளது வடகிழக்கு. தமிழில் மேற்கு என்பதை மேல் என்றும் கிழக்கு என்பதை கீழ் என்றும் சொல்வது வழக்கு. அதைப்போல தென், வட என்பதும் பயன்படும் மேற்குத் திசையில் உள்ள நாடுகளை மேல்திசை நாடுகள் என சொல்லி அதையும் சுருக்கி மேல் நாடுகள், மேலை நாடுகள் என்று சொல்லுகிறோம் அல்லவா?. மேற்கிலிருந்து வீசும் காற்று மேல் காற்று. என் வீட்டிற்கு மேற்குப்புறம் இருக்கும் வீடு மேல்வீடு (நெல்லை மாவட்டம்)
இப்படி படிக்கும் போதும் பேசும் போதும் வந்து சேராத , திக்கு எனும் சொல், எதையாவது ஒன்றை அழகாகச் சொல்ல வேண்டும் எழுத வேண்டும் என்றால், அல்லது கவிதை எழுத வேண்டும் என்றால் மட்டும் ஓடி வந்து நான் இருக்கிறேன் என்று சொல்லி நிற்கும். உடனே திக்கு என்பதைப் பயன்படுத்தி விடுவோம் .
தமிழின் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும். உன் பெயர் எண்திக்கும் சென்று திகழட்டும், என்று பாராட்டும் போது, திசையை விட்டுவிட்டு திக்கு என்று பயன்படுத்திக் கொள்வோம்.

தமிழ் மொழியின் புகழ் எட்டுத் திசையும் பரவியிருந்த போதும் அதைச் சொல்ல வந்த,மனோன்மணியம் சுந்தரனார் தமிழ் திக்கெட்டும் புகழ் பரப்பிய மொழி என்று சொல்லவில்லை. எத்திக்கும் என்ற சொல்லை அவர் பயன்படுத்தவில்லை.’ எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே’ என்றுதான் சொல்கிறார்.

வழி தெரியாத காட்டுக்குள் ஒருவர் சிக்கிக்கொண்டால் திக்குத் தெரியாத காட்டில் சிக்கிக் கொண்டேன் என்று சொல்வார்கள். திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி அலைந்தேனே என்று ஒரு பாடல் கூட உண்டு. அப்படியானால் திக்கு என்னும் சொல்லுக்கு வேறு சில பொருள்களும் இருக்கின்றன.
அமரர் ராஜாஜி எழுதிய ஒரு புதினத்தின் பெயர்,பெயர் திக்கற்ற பார்வதி. சூழ்நிலையால் கற்பிழந்த பெண் வாழ்க்கைக் கதையது. அதையே திசையற்ற பார்வதி என்று சொன்னால் ஏதோ பொருள் குழப்பம் ஏற்படும்.

காட்டுக்குள் சிக்கிக்கொண்டு இங்குமங்கும் அசைய முடியாமல் திசையும் தெரியாமல்தவிக்கும் நிலைதான் திக்குத் தெரியாத நிலை. வாழ்க்கையில் என்ன செய்வதென்று முடிவு செய்ய முடியாமல் வேறு வழியில்லாத நிலையில் இருக்கும் அந்தப்பெண்ணைத் திக்கற்ற பார்வதி..கதியற்ற, ஆதரவற்ற. புகலிடம் இல்லாமல், உதவி செய்ய வழிகாட்ட ஆள் இல்லாத நிலையில், எந்த முடிவும் எடுக்க முடியாமல், யாருடைய ஆலோசனையையும் கேட்க முடியாமல், இல்லாமல் இருக்கும் நிலையில் அவள் திக்கற்ற பார்வதி.
ஏனென்றால் திக்கு எனும் சொல்லுக்கு, ஆதரவு என்னும் பொருளும் இருக்கிறது. திக்கு எனும் சொல் புகலிடம் என்ற பொருளையும் தருகிறது. திக்குமுக்காடிப் போனான் என்று சொல்லும் இடத்தில் மூச்சுத் தடுமாறிப் போனான் என்பதைக் குறிக்கிறது . திக்கித் திணறுகிறான். திக்கித் திக்கிப் பேசினான் என்றால், திணறுதலைக் குறிக்கிறது.

 ஆனால் திசை என்ற சொல் வேறு எதனையும் குறிக்காமல் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு தென்மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு வடகிழக்கு என்ற பக்கங்களை மட்டுமே குறிப்பதாக இருக்கிறது கிழக்குத்திக்கு என்று சொல்ல ஒருபோதும் முடியாது.
   அஷ்டதிக்கஜங்கள் என்று கிருஷ்ணதேவராயருக்கு ஆலோசனை சொல்லும் அமைச்சர்  குழு ஒன்று இருந்தது. அஷ்டதிக்கஜங்கள் என்றால் எட்டுத் திசை யானைகள். அஷ்டதிக்கஜங்களை இராவணன் போரிட்டு வென்றான்.

அட்டாதிக்கு பாலகர்கள் என்பார்கள். திசைக்கு ஒருவரான எட்டுத் திசைகளுக்கும் காவல் தெய்வங்கள் இப்பெயரில் வழங்கப்படுகின்றன.
திக்குவிஜயம் அக்கால மன்னர்கள் பயணம் செய்வார்கள் எல்லாத் திசைகளிலும் சென்று அங்குள்ள மன்னர்களை வெற்றி பெற்று அவர்கள் நாட்டை உடமையாக்கி விடுவார்கள். இப்படியெல்லாம் பார்க்கிறபோது திக்கு என்பது தமிழ்ச்சொல்லா? என்று ஒரு கேள்வி ஏற்படுகிறது.
மேலும் திசை உண்மையான தமிழ்ச் சொல்லோ எனத் தோன்றுகிறது.
கம்பராமாயணத்தில் மூக்கறுபட்ட சூர்ப்பனகை, அண்ணனை நோக்கி புலம்புவதாக அமைக்கப்பட்ட கம்பன் பாடலில், ராவணனின் வீரத்தைச் சத்தமாகச் சொல்லும் சூர்ப்ப நகை *திசை யானை விசை கலங்கச்
செரு செய்து மருப்பொசித்த ராவணோ” என்று அண்ணனை அழைக்கிறாள்.
பலம்வாய்ந்த எட்டுத்திசை யானைகளோடும் எதிர்நின்று நேருக்கு நேர் போரிட்டு அவற்றின் தந்தங்களை ஒடித்து வெற்றிகொண்ட ராவணா…. என்று புலம்புகிறாள்.
இங்கு கம்பன் எட்டு திசைகளையும் குறிப்பதற்கு யானை என்ற சொல்லோடு திசை என்ற சொல்லைத்தான் சேர்த்திருக்கிறார்.
கம்பனில் வீடணன் புலம்புவதாக வரும்
போர் மகளை, எனத் தொடங்கும் பாடலில்
திசையானைப் பணை இறுத்த
பணைத்த மார்பால்? என்றுவரும்.
கம்பன்
திசையானையைக் குறிக்க
திக்கயம் என்ற சொல்லையும் இன்னொரு இடத்தில் பயன்படுத்தியுள்ளான். பாசம் படலத்தில் இந்திரசித்து தன்தந்தையிடம்
திக்கய வலியும் மேல்நாள் திரிபுரம் தீயச்செற்ற என்று பேசுவான்.
இராம பாணம் இராவணனது
மார்பைத்துளைத்துச் சென்றதைச்
சொல்லும் போது ஏனைத் திக்கோடும் உலகனைத்தும்என்பான் கம்பன்.
உறங்கும் இந்திரசித்தின் வீரப்பொலவை வியந்து அனுமன்
முக்கண் நோக்கினன் முதல் மகன்
அறுவகை முகமும்திக்கு நோக்கியபுயங்களும் என்பான்.

பாரதியும்சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்பான்.
கம்பன் திக்கு என்று வரும்போது கஜம் என்ற வடசொல்லையும், திசை எனச் சொல்லும்போது யானை என்ற தமிழ்ச் சொல்லையும் பயன்படுத்தியிருப்பது நமக்கு ஒரு தெளிவைத் தருகிறது.

திசை என்பது தமிழ். திக்கு என்பது தமிழ்ச் சொலன்று.

திக்கு எனும் சொல் சமயமெனும் ஒரு பொருளையும் உணர்த்துகிறது என்பர் அறிஞர். தெளிவாகச் சொல்லப்போனால் டைரக்சன் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல்லாகத் திசை என்பது தான் இருக்கிறது. திக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களைக் குறிக்கிறது. அவற்றுள் ஒன்று திசை என்று கொள்ளலாம்.

முத்துமணி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.