April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

குழு, குழுமம்.. என்ன வேறுபாடு?-சொல்லாக்கம்- சிவகாசி முத்துமணி

1 min read

Tamil ilakkiyam- Sivakasi Muthumani

26-12-2020
அதானி குழுமம்,அம்பானி குழுமம் செய்தித்தாள்களில்… தொலைக்காட்சிகளில் இத்தொடர்கள் அடிக்கடி வந்து பரபரப்பூட்டும்… அதென்ன குழுமம்? குழுமம் என்றால் என்ன? ஒருவேளை குடும்பம் என்பதைப் பிழையாக எழுதி விட்டார்களோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.தமிழ்ச் சொல்லாக்கத்தை நோக்கும் போது, குழு குழுமம் இவ்விரண்டு சொற்களும் குறிக்கும் பொருளில் வேறுபாடு ஏதேனும் உண்டா? அல்லது இரு சொற்களும் ஒரே பொருள் குறித்தனவா? என்ற ஐயம் பலருக்கும் ஏற்படுகிறது.மாணவன் ஒருவன் மேற்கண்ட ஐயத்தை என்னிடம் கேட்டான். இவ்வாறு ஏற்படும் ஐயம் இயல்புதானே.

மதி என்றால் நிலவு. அச்சொல்லுடன் ‘அம்’ என்னும் விகுதியைச் சேர்க்க வரும் மதியம் என்ற சொல்லும் நிலவையே குறிக்கும். சங்கு என்பதைச் சங்கம் என்றும் சொல்லலாம். அவை இரண்டும் ஒரே பொருளைத்தான் குறிக்கும். ‘சங்கு முழங்கியது’ என்றும் கூறலாம். அல்லது ‘சங்கம் முழங்கிற்று’, (எடுத்த சங்கம் எக்காளம்) என்றும் கூறலாம். இவ்வாறே முரசு என்பதும் முரசம் என்பதும் ஒரே பொருளைக் குறிக்கின்றன. முரசு முழங்கியது, முரசம் முழங்கியது. (முரசு முழங்கும் என்பது மரபு. இடி முழங்கும், சிங்கம் முழங்கும், முரசு முழங்கும். முழங்கு முரசு, தானை… நம் இலக்கியக் கூற்று. சங்கே முழங்கு… பாரதிதாசன். )இச்சொற்கள் இரண்டு வகையில் ஒரே பொருளில் வழங்கி வருவதைப் போலவே குழு குழுமம் என்னும் சொற்களும் ஒரே பொருளைக் குறிக்கும் என்று கருதக் கூடும்.

உலகு எனினும் உலகம் எனினும் ஒன்றே. உரு என்னும் சொல்லை அம் சேர்த்து உருவம் என்று சொல்வோம் தனிமம்(element) என்பது அறிவியலில் ஒற்றைப் பொருள்.(தங்கம் ஒரு தனிமம், பாதரசம் ஒரு தனிமம். திண்மம், நீர்மம் வாயு என மூன்று நிலைகளிலும் காணப்படும்) அதைத் தனிமம் என்று கூறுவது போல், குழுவைக் குழுமம் என்று சொல்வதில் தவறில்லை. தனிமம், கனிமம், சேர்மம் என்ற சொற்களை ஒப்பு நோக்கலாம். 
 கனிவளம் என்ற தலைப்பில்தான் நம் அறிவியல் பாடங்கள் கனிமம் பற்றிப் பேசும். இரும்பு, தங்கம், வெள்ளி பெட்ரோல் பாதரசம் இப்படி எல்லாவற்றையும் சேர்த்துக் கனிவளம் என்று கூறுவோம். பாதரசம் ஒரு கனிமம் வெள்ளி ஒரு கனிமம் என்று எழுதுவோம் பேசுவோம். ஏனென்றால் அவற்றை வெறுமனே கனி என்னும் சொல், அது தாதுப் பொருளைக் குறிக்கிறதா? அல்லது பழத்தைக்(fruits) குறிக்கிறதா? என்ற மயக்கம் ஏற்பட்டு விடும். இந்த வேறுபாடு உணர்த்த வேண்டும், என்பதால் கனிமம் என்று கூறுகிறோம்.

  மதி என்றால் நிலவு. "மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்" என்று அப்பர் பாடுவார். மதியம் என்ற சொல் நிலவை மட்டுமே அப்போது குறித்தது. இப்போது மதியம் என்றால் பிற்பகல் என்று பொருளில் நாம் பயன்படுத்தி வருகிறோம்.அல்லது நண்பகல் என்ற பொருளில் பயன்படுத்தி வருகிறோம்(இன்று நான் மதிய உணவு உண்ணவில்லை) ஆதலால் நிலவை மதி ஆக்கிவிட்டோம். புன்கு- புன்கம், கமுகு- கமுகம், வடிவு- வடிவம். (வட்ட வடிவில் அல்லது வட்ட வடிவத்தில் எப்படியும் எழுதலாம். )    உரிமம்... ஓட்டுநர் உரிமம். இச்சொற்களும் நம் புரிந்துகொள்ளலுக்கு மேலும் உதவக்கூடும்.

வட்டம் என்னும் சொல் கூட வட்டு என்னும் சொல்லில் இருந்துதான் பிறக்கும். இரும்பால் செய்யப்பட்ட வட்டமான ஒரு பொருளை(disk) வைத்து விளையாடும் விளையாட்டு வட்டாட்டம் (வட்டு+ஆட்டம்)என்றுதான் அழைக்கப்படுகிறது. இன்று கூட வட்டு எறிதல் என்று ஒரு விளையாட்டு நடத்தப்படுகிறது. இரும்பாலான வட்டமான ஒரு பொருளைத் தூக்கி வீசுவது. தூக்கி வீசினால், எவ்வளவு தொலைவைச் சென்றடைகிறது என்பதைக் கொண்டு தனி நபர் திறனை அளவிடுவது.

சங்ககாலத்தில் நெல்லிக்காயை கொண்டு விளையாடும் விளையாட்டு நெல்லி வட்டு எனப்பட்டது. எல்லா விளையாட்டுகளிலும் நெல்லிக்காயை வட்டாகப் பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர். இயல்பாகவே உருண்டையான வடிவத்தில் இருக்கும் நெல்லிக்காயை வெட்டி வட்டமாக மாற்றிக்கொண்டோ? ஆறு பக்கங்கள் உள்ளதாக வெட்டிக் கொண்டோ வட்டாகப் பயன்படுத்தியுள்ளனர் கட்டத்திற்குள் வட்டு வைத்து விளையாடுவது ஈட்டுவட்டு எனப்பட்டது. அதுவே பின்னாளில் சூதாட்டம் ஆனது. சூதுவட்டு, நீச்சல் வட்டு, நீர்வட்டு என்பவை யாவும் வட்டமான காய்கள் கொண்டு விளையாடப்பட்ட விளையாட்டுகள். தாயம் போன்ற விளையாட்டுகளில் உருட்டப்படும் ஆறு பக்கங்கள் கொண்ட, ஆங்கிலத்தில் Dice எனப்படும் பொருள்தான் நம்முடைய வட்டு. வட்டு உருட்டி விளையாடுவதால் அந்த விளையாட்டுகளுக்கும்(சூது, நீச்சல், நீர், ஈட்டு) வட்டு என்றே பெயர் வந்தது

இன்றும் குறிப்பாக நெல்லை மாவட்டச் சிற்றூர்களில், உணவை உண்ண பயன்படுத்தும் வட்டமான வடிவத்தில் உள்ள தட்டின் (Plate ) பெயர் வட்டில். தேனி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்களில் இது சற்று மாற்றம் பெற்று வட்டி என்று வழங்கப்படுகிறது. ஊரைச் சார்ந்த நண்பர்கள் சிலர் பெரிய வடிவத்திலான சோறு பரிமாறி உண்ணும் தட்டை பெரிய வட்டி என்றும், பொரியல், துவையல் போன்ற கூடுகளை வைத்து உண்ண உதவும் சிறிய வடிவிலான தட்டுகளை சிறிய வட்டி என்றும் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்

‘அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்’
என்பது குறள்.

 நூல்களைக் கற்று நிரம்பிய அறிவு இல்லாமல் ஒருவன், கற்றோர் கூடியுள்ள அவையில் சென்றுஎதையாவது பேச நினைப்பது, எல்லைகளை வகுத்துக் கொள்ளாமல் வட்டு ஆடியது போல, போல அதாவது கட்டம் போடாமல் சொக்கட்டான் ஆடியது போன்ற ஒரு செயல். கட்டம் போடாமல் சொக்கட்டான் காயை உருட்டினால்.. வெற்றி பெற முடியுமா? அதைப்போல அறிவைத் தரும் நூல்களை ஊன்றிக் கற்காமல் கற்றவர் அவையில் பேசித் தலை நிமிர முடியுமா? கற்றோரை வெற்றி காண முடியுமா? வட்டு உருட்டி விளையாடும் எந்த விளையாட்டிலும் முதலில் எல்லைக்கோடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும்

சாந்து என்னும் சொல் சாந்தம் என்னும் சொல் சந்தனம் என்னும் சொல் மூன்றும் ஒரே பொருளைத் தருகிறது?. சாந்து பூசுதல் என்பது சந்தனத்தை அரைத்துப் பெண்கள் தங்கள் மார்பில் பூசிக்கொள்ளும் தொழிலைக் குறிக்கும். பிறகு சந்தனம் இல்லாத, வேறு வண்ணங்களைக் குழைத்துப் பூசும் வழக்கம் ஏற்பட்டது.பொட்டுக்குச் சாந்துப் பொட்டு என்று பெயர் வந்தது. சந்தன மார்பு என்றே சொல்வார்கள்.அதன்பிறகு குங்குமமும் சேர்த்து எழுதும் பழக்கம் ஏற்பட்டது. சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே. மங்கலப் பெண்கள் தங்கள் உடலில் ஐந்து இடங்களில் சந்தனம் குங்குமம் அணிந்து கொள்வர். கணவனைப் பிரிந்த பெண்கள் மார்பில் சந்தனம் குங்குமம் அணிவதில்லை.(கொங்கை இரண்டினில் குங்குமம் எழுதிடாள். கோவலனைப் பிரிந்த கண்ணகி .. சிலப்பதிகாரம்)

பிறமொழிச் சொல்லாகிய கர்மா என்பதோடு அம் சேர்த்து, கர்மம் என்றும் வர்மா என்பதோடு அம் சேர்த்து வர்மம் என்றும் சொல்வது தமிழ் மரபு. கர்மா என்பதை கர்மம் என்று சொல்லும்போது தமிழ் மரபு மீறுதல் என்பதால் கன்மம் என்று சொன்னோம். கர்ணன் இன்னும் சொல்லைக் கன்னன்(வர்ணம் வர்ணம்).. என்று மாற்றிச் சொல்வதைப்போல…
மீண்டும் குழு, குழுமத்திற்கு வருவோம்… குழு என்று சொன்னாலும் குழுமம் என்று சொன்னாலும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் ஏற்பட்டு விடப்போவதில்லை. அப்படித் தவறு ஒன்றும் நேர்ந்து விடாது என்று சொல்லலாம். ஆனாலும் சற்றுக் கூர்மையாக நோக்கினால் குழு, குழுமம் என்னும் இரு சொற்களுக்கு ஒரு சிறிய வேறுபாட்டை மட்டும் கூறமுடியும்.

ஏதாவது ஒரு நோக்கத்தில் ஒன்றாகக் கூடுவது குழு.. அல்லது அமைக்கப்படுவது.. புலவர் குழு, ஆசிரியர் குழு, தமிழ் விரும்பிகள் குழு, புலன்வழி தமிழ் ஆய்வுக் குழு, மாணவர் குழு, வணிகக்குழு, இப்படி மனித உறுப்பினர்களால் ஆனது. ஆய்வுக் குழு, விற்பனைக்குழு, விசாரணைக் குழு... இப்படி... சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்வை வெறுத்தவர் குழு என்று கூட ஒரு குழுவின் பதாகையை பட்டிமன்றம் பேசச் சென்ற போது,ஓர் ஊரில் ஒருமுறை கண்டு வியப்படைய நேர்ந்தது. 

  பள்ளி வகுப்புகளில் கூட மாணவர்களை பல்வேறு குழுக்களாகப் பிரிப்பதும் உண்டு. பின்னர் அணி என்று பெயர் மாற்றம் பெற்றது. மகளிர் சுய உதவிக் குழு, தென்றல் பட்டிமன்றக்குழு, இந்தியாவின் அரசியல் அமைப்பு குழு..... இப்படி எந்த குழுவாக இருந்தாலும் அது ஒற்றை நோக்கத்தில் செயல்படும் உறுப்பினர் அடங்கியவை அமைப்பு என்பது தெளிவாக தெரிகிறது.அரசியல் கட்சிகளில் ஆட்சிக்குழு செயற்குழு பொதுக்குழு ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இப்படி பல குழுக்கள் இருக்கலாம் கரகம் சிலம்பம் காவடி ஒயிலாட்டம் மயிலாட்டம் மாடாட்டம் இப்படி அனைத்தையும் சேர்த்து நடத்தும் ஒரு கூட்டத்தைக் கிராமியக் கலைக் குழு என்று சொல்லுவோம் என்று சொன்னால் மனிதர்களின் கூட்டம் என்று கொள்ளலாம் மனிதர்கள் கூடி ஒரே நோக்கத்தில் இயங்குவது..... இப்படி எங்கு பார்த்தாலும் பெரிய குழுக்கள் சிறு சிறு குழுக்கள்.

 ஆனால் குழுமம் என்பது குழு என்பதிலிருந்து சற்றே வேறுபட்டது எனத் தோன்றுகிறது ... சான்று ஒன்று சொன்னால் இன்னும் எளிதில் விளங்கும்.. சன் தொலைக்காட்சி என்பது செயற்கைக்கோள் மூலம் தொலைக்காட்சி ஊடகங்களை (இந்தியாவின் பல்வேறு மொழிகளில்) நடத்தி வரும் அமைப்பு. சன் பிக்சர்ஸ் என்பது திரைப் படங்களை தயாரிக்கும் ஓர் அமைப்பு. சன் நெக்ஸ்ட் என்பது இணையம் வழியாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் ஒருவகை அமைப்பு. இவை அனைத்தும் வேறுபட்ட பல  தொழில்களைச் செய்வன. ஆனால் இவையாவும் ஒரே தலைமையின்கீழ் இயங்கி வருவதால் இவற்றைச் சேர்த்து சன் குழுமம் என்று சொல்கிறோம் அல்லவா?... இவ்வாறு ஒரே பெயரில், பல்வேறு தொழில்களைச் செய்யும் ஒருவருக்கு அல்லது ஓர் அமைப்புக்கு சொந்தமானச் நிறுவனங்களை ஒன்றிணைத்து சொல்லும்போது குழுமம் என்று சொல்லுகிறோம்.

வேறு வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், அவை யாவும் ஒரே தலைமையின் கீழ் வரும் போது, அல்லது ஒரேளராக இருக்கும்போது,  அவற்றைத் தொழில் குழுமம் என்று சொல்வார்கள்.. டாட்டா தொழில் குழுமம்...( Tata group of industries.). என்று கூறுவோம். Tata என்று ஒரே பெயரில் இயங்கி வரும்ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், விற்பனை நிலையங்கள், நிறுவனங்கள் அனைத்தையும் சேர்த்துக் குறிக்கும்.

 பல்வேறு கல்வி நிலையங்கள், எடுத்துக்காட்டாக,அன்பு என்னும் பெயரில் ஒருவர், தொழில்நுட்பக் கல்லூரி, கலைக்கல்லூரி, அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பள்ளிகள், செவிலியர் பயிற்சிப் பள்ளி, மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி... இப்படி எல்லாவற்றையும் சேர்த்து நடத்திவருகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவற்றை எல்லாம் சேர்த்துக் குறிக்கும் வகையில்,' அன்பு கல்விக் குழுமம்'என்று பெயரிட்டு அழைப்போம்.. (Anbu group of education institutions.)

விகடன் என்பது ஒரே பெயர். இப்பெயரில் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், சுட்டி விகடன், விகடன் பேப்பர், எனப் பல இதழ்கள் வாரந்தோறும், மாதந்தோறும், மாதமிருமுறை வெளிவரும் இவற்றையும் ஒன்றிணைத்து விகடன் பத்திரிகைக் குழுமம் என்று அழைக்கலாம்.

கூகுள் குழுமம் பல்வேறு நிறுவனங்களை தன்னிடத்தில் அடக்கியது..( group of companies) விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இதயம் நல்லெண்ணெய் பற்றி அனைவரும் அறிவோம். இதயம் நல்லெண்ணெய், மந்த்ரா கடலை எண்ணெய், உற்பத்தி செய்வதோடு ராசாத்தி நைட்டீஸ் என்ற பெயரில் பெண்கள் ஆடை டாட்ஸ் அப்பளம், இவற்றோடு இன்னும் பல்வேறு தொழில்களைச் செய்கிற இந்த இந்த நிறுவனங்களை நடத்தி வருவது இதயம் தொழில் குடும்பம் என்று சொல்ல வேண்டும்.(Udayan group of industries)

பொள்ளாச்சியில் சரக்கு போக்குவரத்து சக்தி மசாலா பத்திரிகை இன்னும் ஏராளமான தொழில்களை மேற்கொண்டுவரும் நிறுவனங்களை ஒன்று சேர்த்து சொல்லும்போது சக்தி தொழில் குடுமம்(Shakthi groups) என்று சொல்வோம்.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் இருந்து குழுமம் என்ற சொல் பல்வேறு குழுக்களை ஒன்று அடக்கியது. குழுக்களின் சேர்க்கை, நிறுவனங்களின் சேர்க்கை என்றும் பொருள் தருகிறது, குழுமம் என்பது பல்வேறு நிறுவனங்களை தன்னகத்தே கொண்டு செயல்பட்டு வரும் ஓர் அமைப்பு என்று கொள்ளலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.