April 24, 2024

Seithi Saral

Tamil News Channel

தூக்கத்தின் வேதியியல்..!!

1 min read

தூக்கத்தின் வேதியியல்..!!

The chemistry of sleep

ஒரு உயிரினத்தின் வாழ்வியல் செயலானது ஒரு சுழற்சியாகும். வாழ்வியல் செயல் என்பது உடலில் நிகழும் மாற்றம் (உதாரணமாக பசித்தல்) ஆகும்.

இச்செயலை நிகழ்த்துவதற்கு தேவையான வேதிபொருளானது, உடலில் தானாக சுரக்கிறது. குறிப்பாக ஒரு சில உயிரிச் செயல்முறைகள் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் தொடங்கி முடிவடைகின்றன.

அதாவது, செயல்முறையானது ஒரு நாளைக்குள் முடிந்து மீண்டும் அடுத்த நாள் தொடங்குகிறது. இதனை ’சர்காடியன் ரிதம்’ (circadian rhythm) என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக தூக்கதை கூறலாம். ஆம், எல்லோரும், ஒவ்வொரு நாளும் தூங்கி விழிக்கிறோம் அல்லவா? சரி, நமக்கு ஏன் தூக்கம் வருகிறது? அதுவும் தவறாமல், ஒவ்வொரு நாளும்? இதற்கு காரணம் ஏதேனும் அறிவியல் இருக்குமா? வாருங்கள், இக்கேள்விக்கான பதிலை இக்கட்டுரையில் காண்போம்.

தூக்கம் இன்றியமையாதது

ஆம், தூங்கும் நேரத்தில் உடலானது ஆற்றலை சேமிப்பதோடு, பகல் பொழுதில் சிறப்பாக இயங்குவதற்கும் வழிசெய்கிறது. அதாவது, அறிவாற்றல் திறனை அதிகரிக்கிறது.

சுருங்க சொன்னால், மூளையின் செயல்பாட்டை ஒழுங்கு படுத்துகிறது. எனவே, இயற்கையாகவே, தூக்கம் என்பது உயிரினத்தில் ஒரு வாழ்வியல் செயலாக இருக்கிறது.

தூக்கம் வருவது எப்படி?

இதற்கு காரணம், உடலில் சுரக்கும் ஹார்மோன் (உயிர் வேதிபொருள்); குறிப்பாக, ’மெலடோனின்’என்ற ஹார்மோன்.

மெலடோனின், (எல்லா விலங்குகளின்) மூளையில் இருக்கும் பினியல் சுரப்பியில் (pineal gland) சுரக்கும் ஹார்மோன் ஆகும்.

இது சர்காடியன் ரிதம் எனும் உயிரியல் செயல்முறைகளான முறையான‌ தூக்கம், இரத்த அழுத்தம், பருவகால இனப்பெருக்கம், உள்ளிட்ட எல்லா செயல்களிலும் பங்குகொள்கிறது.

மெலடோனின்

முக்கியத்துவம் வாய்ந்த இந்த மெலடோனின் ஹார்மோனே தூக்கத்தை வரவழைக்கிறது. சாயங்காலத்திலிருந்து இரவு நேரத்திற்கு செல்ல செல்ல, உடலில் மெலடோனின் அளவு படிப்படியாக அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே, நாம் தூக்கத்தை உணருகிறோம்.

நள்ளிரவில் மெலடோனின் அளவு உச்சத்தை அடைவதால், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறோம். இதே போன்று, காலைப் பொழுது வரவர, உடலில் மெலடோனின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, நாம் தூக்கம் கலைந்து விழிக்கிறோம். தூக்கத்தின் வேதியியல் இதுதான்.

ஆக, இரவு நேரத்தில் மெலடோனின் அளவு அதிகரிப்பால் தூக்கம் வருகிறது. ஆனால், இரவு நேரத்தில் மட்டும் மெலடோனின் அளவு அதிகரிப்பது ஏன்? அல்லது பகலில் மெலடோனின் அளவு குறைவது ஏன்?

இரவில் (தூக்கத்தை வரவழைப்பதற்காக), மெலடோனின் அளவு அதிகரிப்பதற்காக நமது உடல் மூளைக்கு செய்தியினை அனுப்புகிறது. இச்செயல் முறை கண்ணிலிருந்து தொடங்குகிறது.

ஆம், பகல் பொழுதில் இருக்கும் வெளிச்சம், நம் கண்ணை அடைந்த உடன், ரெட்டீனாவை (retina) அடைகிறது. ரெட்டீனா என்பது வெளிச்சத்தை உணரும் கண்ணின் உட்புற பகுதி.

வெளிச்சத்தை உணரும் ரெட்டீனா, நேரமானது பகல்பொழுதில் இருக்கிறது என்ற தகவலை மூளையில் உள்ள சுப்ரகியாஸ்மாடிக் நியூக்கிளியஸ் (suprachiasmatic nucleus) எனும் பகுதிக்கு அனுப்புகிறது.

பின்னர் இங்கிருந்து இத்தகவல் தண்டுவட பகுதிக்கு சென்று பின்னர் பினியல் சுரப்பிக்கு செல்கிறது. உடனே, இச்சுரப்பி, மெலடோனின் அளவை குறைத்து விடுகிறது.

மாறாக, இருள் சூளும் பொழுது, வெளிச்சத்தின் அளவு குறைகிறது. இத்தகவலை கண்ணின் மூலம் பெறும் பினியல் சுரப்பி தானாக மெலடோனின் அளவை அதிகரிக்கிறது.

சுருக்கமாக பார்த்தால், வெளிச்சம் இருக்க, மூளையில் உள்ள பினியல் சுரப்பி, மெலடோனின் அளவை குறைத்து விடுகிறது. இதனால் தான், இரவிலும் மின்விள‌க்குகள் ஒளிர்ந்தால் பலருக்கும் தூக்கம் வருவதில்லை.

காரணம், செயற்கை ஒளியை உணரும் கண்ணில் உள்ள ரெட்டீனா, மூளைக்கு தகவலை அனுப்புவதன் மூலம் பினியல் சுரப்பி மெலடோனின் அளவை குறைத்து விடுகிறது!

ஆறறிவுள்ள நாம் இதனை (இரவு காலம் என்பதை) உணர்ந்து செயற்கை மின்விளக்குகளை அணைத்து விடுகிறோம்! இதனால் தூங்க முடிகிறது.

ஆனால், ஆறாம் அறிவு இல்லாத விலங்குகள் என்ன செய்யும்? சூழ்நிலையில் (இரவில்) ஒளிரும் செயற்கை மின்விளக்குகளின் வெளிச்சத்தால் குழப்பப்படும் இரவு நேரத்தில் செயல்படும் விலங்குகள் (ஆந்தை, வெள‌வ்வால், எலி முதலியன) இதனால் பெரிதும் பாதிப்படைக்கின்றன.

சரி, தற்போது, பினியல் சுரப்பியில் சுரக்கும் மெலடோனின், எப்படி உண்டாகிறது என்பதனை பற்றி பார்க்கலாம்.

’டிரிப்டோஃபேன்’ (tryptophan) எனும் அமினோ அமிலத்திலிருந்து (புரதங்களின் அடிப்படை கூறு) மெலடோனின் உண்டாகிறது. உண்மையில் இது பலப்படிகளைக் கொண்டது.

ஆம், முதலில், டிரிப்டோஃபேன் ஹைட்ராகி சிலேஸ் எனும் நொதியால் டிரிப்டோஃபேன், 5-ஹைட்ராக்ஸி டிரிப்டோஃபேனாக மாற்றம் அடைகிறது.

பின்னர் அரோமேட்டிக் அமினோ
அமில டீகார்பாக்ஸிலேஸ் நொதியால், செரடோனின் ஆகவும், பின்னர் அஸிடைல் செரடோனினாகவும் மாற்றம் அடைகிறது.

இறுதியில், ஹைட்ராசி இண்டோல் மெத்தி டிரான்ஸ்ஃபெரேஸ் நொதியால் மெலடோனினாக மாறுகிறது.

சுமார் நான்கு நொதிகளின் உதவியால், டிரிப்டோஃபேன் எனும் அமினோ அமிலம் மெலடோனினாக‌ ஹார்மோனாக மாற்றப்படுகிறது. தூக்கத்தின் வேதியியல் இதுதான்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.