June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

‘இரா’ இன்சியல் போடலாமா?/ சொல்லாராய்சி/ சிவகாசி முத்துமணி

1 min read

Can ‘Ira’ initial be put? / Sollaraisi / Sivakasi Muthumani

15/1/2021

என் பெயர் ராஜலட்சுமி. என் அப்பா பெயர் ராமலிங்கம். என் இன்சியல் என்ன? இப்படி ஒரு கேள்வி.. காதில் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது.


“இதிலென்ன ஐயம் வந்து தொலைத்தது உனக்கு?. ராமசாமி மகள்தானே நீ?. அப்படியானால்,
ரா. ராஜலட்சுமிதானே!!! உன் பெயர்…?”
“இல்லை ஐயா, ரா.. போடுவதற்குப் பதிலாக, இரா போடலாமா?” என்று அடுத்த கேள்வி வந்ததும்தான் எனக்குப் படபடப்பு அடங்கியது.
போடலாம் என்று சொன்னதும் இரண்டு இடத்திலும் இரா போடலாமா? என்ற கேள்வி வந்தது. அதாவது, இரா.இராஜலட்சுமி… என்று எழுதலாமா? அல்லது இரா.ராஜலட்சுமி என்று எழுத வேண்டுமா? கம்பராமாயணம் என்று எழுதும்போது இ என்னும் எழுத்தை விட்டு விடுகிறோமே அது ஏன்?
ரகரம் மொழி முதல் எழுத்தன்று.(எந்த எந்த எழுத்துகள் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரலாம். எந்த எந்த எழுத்துகள் சொல்லின் கடைசியில் இடம்பெறலாம் என்பதெல்லாம் பற்றி நீண்ட இலக்கணம் தமிழில் உண்டு) எச்சொல்லிலும் முதலில் ரகரம் இடம்பெறக்கூடாது. அப்படி இடம் பெற்றால் அது தமிழ்ச் சொல்லாக இருக்க முடியாது. ர…முதல் ரௌ.. வரை (ரகரம் புணர்ந்த உயிர் மெய் 12) எவையும் தமிழில் சொல்லின் முதலில் இடம்பெறா.

இதோ…..(மொழி முதல் எழுத்துக்கள் அல்ல)
ரகம்,
ராகம்,
ரிதம்,
ரீகம்,
ருசி,
ரூபம்,
ரொக்கம்,
ரோகம்….
மேற்கண்ட சொற்கள், அல்லது இவற்றைப் போன்ற சொற்கள் எவையும் தமிழ்ச் சொற்கள் அல்ல. நாம் வேறு வழியில்லாமல் அவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது… (அதாவது மொழிமுதல் எழுத்தல்லாத ஒன்றை ஏற்றுக்கொள்ளும்போது) நம் மரபுப்படி.. எழுத்து ஒன்றை, அச்சொல்லுக்கு முதலில் சேர்த்து, நம் இலக்கண மரபுக்கு அச்சொற்களை உள்ளாக்குகிறோம். அவ்வாறு அச்சொற்களுடன் சேர்க்கப்படும் எழுத்தினால், அச்சொல்லின் ஒலிப்பு(உச்சரிப்பு) மாறிவிடக்கூடாது. அததற்காகத்தான், அச்சொற்களோடு ஒத்திசைக்கவல்ல உயிரெழுத்துகளை மட்டும் அங்கே பயன்படுத்துகிறோம். அச்சொல்லைப் படிக்கின்ற போது அங்கே இடப்பட்ட உயிரெழுத்தை ஒத்திசைக்க வேண்டுமே தவிர, தனியாக உயிர் ஒலி தோன்ற உச்சரிக்கக் கூடாது.(அதாவது சேர்த்துப் படிக்கக் கூடாது. அதை அமைதியாக விட்டுவிட வேண்டும். ஆங்கிலத்தில் சில எழுத்துகளை silent என்று சொல்வார்களே அதைப் போல(Tsunami,Knife, Psychology இச்சொற்களில் முதல் எழுத்துக்களை ஒலிப்பதில்லை) இச்சொற்களில் இவ்வெழுத்துகளை ஒலிக்காமல் விட்டுவிடவேண்டும். (மீண்டும் ஒரு முறை இந்த நினைவுறுத்தப்படுகிறது. இவை தமிழ்ச் சொற்கள் அல்ல. இச்சொற்கள் உணர்த்தும் பொருள் தரும், வேறு தூய தமிழ்ச்சொற்கள் உள்ளன. ஆனாலும் இச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும் போது மட்டும்தான் இந்த மாற்றங்கள். அப்படியே ஏற்றுக்கொள்வது வழு)

இதிலும் ஒழுங்கு முறை சிலவற்றைத் தெளிவாக்கி, வைத்திருக்கிறோம்.. இவ்வகையைச் சார்ந்த குற்றெழுத்தில் தொடங்கும் சொற்களுடன் எந்த எழுத்தைச் சேர்ப்பது‌. நெடில் முதலாய்க் கொண்டு தொடங்கும் சொற்களுடன் எந்த எழுத்தைச் சேர்ப்பது என்றும், வரையறுத்து வைத்திருக்கிறோம். இதுபோன்று இன்னும் சில நுணுக்கமான வேறுபாடுகளும் உண்டு. அவற்றிற்கு ஏற்றபடி இந்த உயிரெழுத்துகள் அச்சொற்களின் முன்பு சேர்க்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக

ர… என்று தொடங்கும் சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல.( ரதம், ரம்பம், ரசம், ரத்தம்) பெரும்பாலும் தமிழ் மரபிற்கு ஏற்றபடி மாற்றம் பெறுவதற்காக அகரத்தை முதலெழுத்தாகப் பெற்றுவரும். அதை நன்றாக விளங்கிக் கொள்ள, பின் வரும் சான்றுகளை உற்றுப்பாருங்கள்.
ரங்கன்…..‌…… அரங்கன்.

ரங்கராஜன்.. .அரங்கராஜன்.

ரங்கநாயகம்..அரங்கநாயகம்.

ரங்கசாமி… ….அரங்கசாமி

ரங்கநாயகி…..அரங்கநாயகி

இவற்றில் அகரத்தை உச்சரிக்கக் கூடாது. ஆனால் நம்மில் பலர் அதையும் சேர்த்து உச்சரிப்பது அதாவது ஒலிப்பது வழக்கமாக இருக்கிறது.

ரம்பை என்பதுதான் பெயர்ச்சொல். அதன் முன்னால் அகரம் சேர்த்து அரம்பை என்று எழுதினாலும் அப்பெயரை ரம்பை என்றுதான் வாசிக்க வேண்டும். ரங்கசாமி என்பதுதான் அரங்கசாமி என்று மாற்றப்பட்டிருக்கிறது. (அரங்கம் என்னும் சொல் வேறு என்றறிக) ரங்கநாதன் என்னும் பெயரை அரங்கநாதன் என்றுதான் எழுத வேண்டும்.

இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அதைப்பற்றித் தெளிவு பெற பின்வரும் பெயர்ச்சொற்களைக் கூர்ந்து கவனிப்போம். இச்சொற்களும் ர என்னும் எழுத்து கொண்டு தொடங்குகின்றன.

ரவி.
ரகு
ரமா.
ரதி….

மேலே சொன்னபடி, இச்சொற்களுக்கு முன்னும் அகரம் சேர்த்தால், பெருமளவில் பொருள் மாறுபடாது. ஆயினும், உயிரையும் சேர்த்து வாசிக்க நேர்ந்தால் அப்போது பெரிய அளவில் ஒலி மாறுபாடு ஏற்பட்டுவிடும்.. இச்சொற்களை… ஒரு முறை உயிர் சேர்த்தும் அடுத்த முறை உயிர் சேர்க்காமலும் வாய்விட்டு வாசித்துப் பார்ப்போம்.

அரவி
அரதி
அரமா

அரதி

என்று படிக்கிறபோது!!! மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.. தீராத நகைச்சுவையை உண்டாக்கிவிடும். அரபியா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கத் தோன்றும் அல்லவா?அதைவிட அச்சொற்களின் பொருள் புரியாமல் போய்விடும் என்பது உணரப்படவேண்டியது. எனவே இப்பெயர்ச் சொற்களுக்கு முன் அகரத்திற்குப் பதிலாக இகரம் சேர்ப்பது வழக்கம். ஆனால் இங்கும் உயிரை ஓங்கி அழுத்தி உச்சரித்து விடக்கூடாது. சற்றுக் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

இரத்தம்..
இரமா…
இரதி…
இரகசியம்…
இரகசியா..
இரஷ்யா..
இரபேல்..
இரத்தினம்..
இரங்கூன்…

மேற்கண்டசொற்களையும் இகரம் சேர்த்து வாய்விட்டு உச்சரித்தால் பொருத்தமானதாகத் தோன்றாது. உச்சரிக்கக் கூடாது. ஒருவேளை உயிர் எழுத்தாகிய உகரத்தைச் சேர்த்து உச்சரித்தாலும் அகரம் சேர்த்து உச்சரிப்பது போல் மிகுந்த வேடிக்கை தராது என்று நம்பலாம்.

இதிலும் இன்னொரு சிக்கல் இருக்கிறது. ரவி எனும் பெயர் முன்பு அகரமோ.. இகரமோ சேர்க்க இயலவில்லை….
இரவி… என்று எழுதும்போது ‘பேய்…’ என்னும் பொருள் தந்து குழப்பிவிடும். அரவி என்று எழுதினால் வேடிக்கையாக இருக்கும். இன்று வரை ரவி என்பதற்கு முன் ஏதாவது எழுத்தைச் சேர்க்கவா? வேண்டாமா? என்று குழப்பம்தான் நீடித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு இந்த வகைச் சொற்களை எப்போதும், பொருளும் ஒலிப்பும் குழப்பம் தராத வகையில் பயன்படுத்த வேண்டும். இதுதான் அறியப்பட வேண்டி செய்தி.

ரா எனத் தொடங்கும் பெயர்ச்சொற்களுக்கு (ராணி) முன் இகரம் சேர்ப்பது உண்டு. சான்றாகப் பின்வரும் சொற்களைப் பார்ப்போம்

ராஜ்யம்………. இராஜ்யம்
ராகம்………….இராகம்
ராஜா……………இராஜா
ராதை……………இராதை
ராணுவம்.. …..இராணுவம்
ராமன்.. ……….இராமன்
ராவணன்.. ….இராவணன்
ராகவன்.. …….இராகவன்
ராஜேஸ்வரி.. இராஜேஸ்வரி
ராஜராஜன்.. ..இராஜராஜன்
ராமசாமி.. ……இராமசாமி
ராயர்.. …………..இராயர்
ராஜகோபால்…இராஜகோபால்
ராசிபலன்.. ……இராசிபலன்
ராஜாஜி.. ………இராஜாஜி
ராத்திரி… ………இராத்திரி
ராட்டினம்.. ….‌..‌‌.இராட்டினம்
ராஜபாளையம்.இராஜபாளையம்
இப்படி நாம் பயன்படுத்தி வருகிறோம்.

ரி.. என்னும் எழுத்தில் தொடங்கும் பெயர்களுக்கு முன்.. இகரம் சேர்ப்பது உண்டு.

ரிக் வேதம்…இரிக் .. வேதம் என்று எழுதப்பட்டு பிறகு அதுவும் சரியில்லை என்று கருதி, இருக்கு வேதம் அல்லது இருக்கு ஆரணம், இருக்கு மறை என்று எழுதப்பட்டது. ஏனெனில் ககர ஒற்று(க்) சொல்லின் இறுதியில் வராது.

ரீங்காரம்… இரீங்காரம்…
ரீட்டா..இரீட்டா

ரு..ரூ.. எனத் தொடங்கும் பெயர்களுக்கு முன்… உகரம் சேர்க்கப்பட்டது.
ருஷ்யா.. உருசியா
ருக்குமணி.. உருக்குமணி
(இச்சொல்லின் பொருள் மாற்றம் ஏற்பட வாய்ப்பு மிகுதியாய் உண்டு. உருக்குதல்…)

ரூபாய்……… உரூபாய்
ரூபா…….‌..‌…..உரூபா
ரூபம்…………. உரூபம்
ரூபவதி………உரூபவதி

இவற்றைப் போன்று..ரோ.. என்னும் எழுத்திற்கு முன்பாக..உகரம்.. வந்தது.

ரோமம்… ….‌.உரோமம்
ரோமாபுரி… உரோமாபுரி
ரோஜாப்பூ.. உரோஜாப்பூ
ரோகம்.. ……உரோகம்

மேலும்..லகரம்…(ல என்னும் எழுத்து வரிசை) மொழி முதலில் வராது என்பதால் இதைப் போலவே அதற்கும் சில ஒழுங்கு முறைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
லட்சுமணன்…..‌இலட்சுமணன்… என எழுதப்பட்டு பிறகு தமிழ் மரபுக்கு ஏற்ப இலக்குவன் என்று மாறியது. இலக்குவன் என்பதில், இ என்னும் எழுத்தை உச்சரிக்கக் கூடாது. இலக்குவன் என்றே சொல்ல வேண்டும்.
ராம லக்குவர்…இராம இலக்குவர். ‌
லட்சணம்………. இலட்சணம்
லோகம்…………. உலோகம்.

லங்கை…… இலங்கை.. இதையும் நாம் தவறாகவே இலங்கை என்ற பேச்சுவழக்கில் சொல்லுகிறோம். உண்மையில் அந்நாட்டின் பெயர் லங்கை. லங்காதகனம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இன்றும் ஆங்கிலத்தில் (Srilanga) என்பதே அந்நாட்டின் பெயர். (இ…. Silent) என்பதறிக.

லட்சியம்… இலட்சியம்
லண்டன்.. .இலண்டன்
லட்டு….‌…… இலட்டு
லட்சுமி.. ….இலட்சுமி (இலக்குமி)
லட்சினை..இலட்சினை
லாபம்…….. இலாபம்
லாடம்………இலாடம்.
இவ்வாறு தமிழ் மரபுக்கு மாற்றப்பட்டு வழங்கப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக இன்னொரு செய்தியையும் குறிப்பிட்டாக வேண்டும். தம்பி ஒருவர்.. “என் பெயர் பாலமுருகன் . என் தந்தையார் பெயர் ராமசாமி. அவர் தன்னுடைய பெயரை இராமசாமி என்றுதான் எழுதுவார்.
நான் என் தலைப்பெழுத்தையும்.(initial). சேர்த்து என் பெயரை எப்படி எழுதுவது?
ரா. பாலமுருகன் என்று எழுதுவதா?
அல்லது இரா. பாலமுருகன் என்று எழுதுவதா? சொல்லுங்கள் ஐயா.”
என்று கேட்டார்….இரா. என்று எழுதுகிற போது பொருள் மாறுபாடு ஏற்படுகிறது.
இரா.. என்பது வெறும் எழுத்தாக நிற்காமல் சொல்லாக மாறிவிடுகிறது. இரா.. என்பது இரவையும் குறிக்கும்.(இராப்பகல் இராப் பொழுது) இல்லாத… என்னும் பொருள் தரும்.குறிப்பாகக் இனிமேல் இருக்காது என்று எதிர்காலம் குறித்து.(இரான்) நிற்கும். (பசி இரா,நோய் இரா).விரும்பினால் இராம. பாலமுருகன் என்று எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறினேன். தந்தையார் பெயர் தானே முன்னால் நிற்கிறது.
வெளிநாட்டினர் தந்தை பெயரை முழுமையாகப் போட்டுக் கொள்வது வழக்கம். கந்தசாமி முத்துமணி என்பது தான் என் பெயர். சுருக்கமாக, க. முத்துமணி என்று எழுதுகிறேன் அவ்வளவுதான்.

எது இராமாயணம்? சொல்லவா? அதாவது இராமாயணக் கதையைச் சுருக்கிச் சொல்லவா?
இராவணன், இராவணனை, இராவணன் ஆக்கிய கதை. இப்படி ஒரு சொல் விளையாட்டு தமிழில் அவ்வப்போது விளையாடுவதுண்டு. இரா என்னும் சொல்லின் பொருள் நன்றாக விளங்கிக் கொள்வதற்காக, இதை இங்கே குறிப்பிடுகிறேன். இதற்கான விளக்கம்..

இரா வ(ண்)ணன்… கருப்பு நிறத்தவன். அதாவது கரிய செம்மல் இராமன்.
இராவணனை… (அதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் அதாவது) இராவணனை.
இராவணன்.. இரா.. ..வணன் (இல்லாத வண்ணன்….இல்லாதவாறு அழித்து விடுதல்) முதலில் இராவணன் இருந்தான். இராமனால் இல்லாமல் போனான்.
கருப்பு நிறத்து இராமன் இராவணனை இராவணனாகச்(கொன்றுவிடுதல்) இல்லாமல் செய்த கதை ராமாயணம்.

சிலர் தங்களுடைய தலைப்பு எழுத்தை தந்தையின் பெயர் தொடக்கத்தில் உள்ள மூன்று எழுத்துகளைச் சேர்த்து எழுதுவதும் உண்டு. இந்தவகைக் குழப்பங்களை அகற்றுவதற்காக… அந்த ஏற்பாடு

இராம. கண்ணப்பன் (தந்தையின் பெயர் இராமசுப்பு என்ற இருக்கலாம். இராமன் சென்றிருக்கலாம் இராமையா என்ற இருக்கலாம்)
இராஜ. கண்ணப்பன்.
இரண்டு எழுத்துகளில்… தலைப்பு எழுத்து கொண்டவர் அதிகம்.

இல. கணேசன்…
யகரமும்.. அதைப் போன்றதே.
யந்திரம்..இயந்திரம்.(பொறி என்பதே தமிழ்ச் சொல்,…. அச்சுப்பொறி… பொறியியல்.. பொறியாளர்). இது பின்னாளில் எந்திரம் எனத்தெரிந்து எந்திரன்??!!! என்றெல்லாம் ஆனது மொழிப் பிழை.
இயேசு நாதர்….யேசு நாதர் என்னும் சொற்களின் முன்னால் இகரம் சேர்க்கப்பட்டு இருப்பதைக் காண்க. சிறுவயதில் ஏசு நாதர் என்று எழுதி ஆசிரியரிடம் ஏச்சு வாங்கியது இதனை வருகிறது. இப்போது ஏசு என்பது வழக்கில் இருக்கிறது. அது பிழையானது என்று எண்ணுகிறேன்.
யட்சன்…….இயட்சன்
யாசகம்……இயாசகம்
யோகம்……இயோகம்
யோவான்..இயோவான்
யுகம்…………இயுகம்
யூகம்………..இயூகம்….
இச்சொற்கள் நினைத்தும், இணைத்தும் பார்க்கத் தக்கன. இதுபற்றிய கருத்துகள் தொடர்ந்து வரும் வரை கட்டுரையை நிறுத்திக் கொள்வோம்.
தமிழ்.
-முத்துமணி. சிவகாசி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *