October 12, 2024

Seithi Saral

Tamil News Channel

இராமருக்கு ஓர் அக்காள் உண்டு தெரியுமா?/சிவகாசி முத்துமணி

1 min read

Do you know that Rama has sister? / Sivakasi Muthumani

8/2/2021

இராமனின் தமக்கை..யார்?

மாமன்னன் தசரதன் கோசலையை மணந்து  மகிழ்ச்சியாக வாழ்ந்தான். இருவரின் இன்ப வாழ்வின் பயனாகக் கோசலை வயிற்றில் வந்து பிறந்தது அழகிய   பெண் மகவு ஒன்று . சாந்தா என்று அன்பு மகளுக்குப் பெயர் சூட்டி, பொன்போல் வளர்த்து வந்தாள் கோசலை. 

 அரசுக் கட்டிலுக்கு வாரிசாக ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று மிகவும் எதிர்பார்த்து காத்திருக்க, பெண் குழந்தை பிறந்து விட்டதே என்று தசரதனுக்கு மனவருத்தம். அதனால் சாந்தாவின் மீது அத்தனை அன்பு ஏற்படவில்லையோ?.. என்னவோ! இதன் காரணமாகக் கணவன்-மனைவிக்குள் சிறு மனப் பூசலும் இருந்து வந்தது.ஆண் வாரிசு வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்த தசரதன்,அதற்காகப் பின்னர் சுமித்திரை ,கைகேயி இருவரையும் மணந்தான். 

'இராம்போதா' என்பவன் ஓர் அரசன். தசரதனுக்கு நண்பன். தசரதனுக்காவது பெண் மகள் ஒருத்தி பிறந்தாள். ஆனால், இராம்போதா பிள்ளைப் பாக்கியம் இல்லாதவன். அவனுக்குப் பிள்ளை பேறு இல்லை என்பது கற்றோர் சொன்ன முடிவு. அவன்," உனக்கு மனைவியர் மூவர் இருக்கின்றனர். ஆதலால் இப்போது இல்லாவிடிலும் எதிர்காலத்தில் பிள்ளைப் பாக்கியம் கட்டாயம் உனக்குண்டு. எனக்குத்தான் அந்தப் பாக்கியமே இல்லை. எனவே என் மீது நீ கொண்ட அன்பால், கேட்கிறேன். உன் மகள் சாந்தாவை எனக்குத் தத்து கொடுத்து விடு". என்று உரிமையோடு தசரதனைக் கேட்டான். குழந்தை இல்லாத ஒருவனுக்குத் தன் குழந்தையைத் தத்துக் கொடுத்தால், இறைவன் தனக்கு ஒரு ஆண்மகனை அருள்வான் என்று நம்பினான் தசரதன். மேலும் நண்பன் கூற்றிலுள்ள உண்மையும் புரிந்ததன் காரணமாக தத்து கொடுக்க இசைந்தான். கோசலை அழுதாள் புரண்டாள்.  கணவன் சொல் மீறக்கூடாது அவன் கொடுத்த வாக்கு மாறக்கூடாது என்று எண்ணி மனதைக் கல்லாக்கிக் கொண்டு சாந்தாவைத் தத்து கொடுக்க உடன்பட்டாள். இவ்வாறு சாந்தா தத்து கொடுக்கப்பட்டாள்

காலம் சென்றது.மூன்று மனைவியர். ஆனாலும் என்ன பயனும் நேரவில்லை. ஆம். மூவருள் எவருக்கும் குழந்தையே பிறக்கவில்லை . தன் குலகுருவான வசிட்டரைத் தஞ்சமடைந்தான் தசரதன். பிள்ளையில்லாத் தன் கலியைச் சொல்லி,தனக்குப் பின் அயோத்தி அரியணை அமர்ந்து ஆட்சி செய்ய வல்ல ஆண் மகவைப் பெற்றெடுக்க, தக்க வழி காட்டியருளுமாறு கேட்டான்.

“தசரதா, வீண் கவலை வேண்டாம். விபாந்தகன் என்ற முனிவருக்கும் ஊர்வசிக்கும் பிறந்த ஒரு பேரழகு கொண்ட மகன் ஒருவன் இருக்கிறான். சகலமும் கற்றறிந்த அவன் பெயர் ரிஷ்யசிருங்கன். பெண்ணாசை காட்டாமல் கண்ணாக அவனை வளர்த்திருக்கிறான் விபாந்தகன். பெண்வாசனையே இல்லாத அந்த ரிஷ்யசிருங்கன் வந்து,உனக்காக புத்திர காமேஷ்டி யாகம் நடத்திக் கொடுத்தால், உனக்கு ஆண்வாரிசு பிறக்க வாய்ப்பு உண்டு. அஞ்சற்க”. என்று ஆசி என்று கூறினார். தசரதனின் மூன்றாவது மனைவியான சுமித்திரைதான் ரிஷ்யசிருங்கர் வந்து யாகம் செய்தால் எல்லாம் நடக்கும் என்று யோசனை சொன்னதாகவும் ஒரு கதை உண்டு.

சாந்தாவைத் தத்தெடுத்துச் சென்ற இராம்போதா,அவளை உயிரை விட பெரிதாக எண்ணி கண்ணும் கருத்துமாக வளர்த்தான். கண் இல்லாதவன் கண்ணொளி பெற்ற மகிழ்ச்சியில் பொழுதையெல்லாம் மகளோடு விளையாடுவதில் கழித்து வந்தான். ஒருநாள் அவனைக் காண முனிவர் ஒருவர் அரண்மனைக்கு வந்து அவனோடு பேச முற்பட்ட நிலையில் பிள்ளைப் பாசத்தால் கட்டுண்டு கிடந்த மன்னன் அவளோடு விளையாடுவதில் ஆர்வம் காட்டியவன், முனிவரைக் கவனிக்காமல் விட்டுவிட கோபத்தோடு அவர் அரண்மனையைவிட்டு நீங்க, அடியாரை அலட்சியம் செய்த பாவத்திற்காக அவன் நாட்டில் மழை பெய்யாமல் போகட்டும் என இந்திரன் சபித்தான். அப்போது பெரியவர்கள் ஆலோசனைப்படி ரிஷ்யசிருங்கரை அழைத்து மாபெரும் யாகம் ஒன்றை நடத்தியபின் அந்நாட்டில் மழை பெய்தது என்பது வரலாறு.

 பருவம் எய்திய அழகு மயில் சாந்தா தன்னைப் பெற்ற தந்தையான தசரதனின் மனக்குறையை அறிந்தாள் அவனது மனக்குறையை மாற்ற எண்ணினாள்.  பெண்ணாசை இல்லாத ரிஷ்யசிருங்கரின் மனதை மாற்றினாள். தன் மீது காதல் வயப்படச் செய்தாள். ரிஷ்ய சிருங்கரை மணந்து கொண்டாள். பின்னர் அவரால் புத்திரகாமேஷ்டி யாகம் எந்தவிதக் குறையும் இல்லாமல்சிறப்பாக நடைபெற்றது. யாகம் சிறப்பாக நடந்தேற எல்லா வேலைகளையும் முன்னின்று செய்தாள் சாந்தா.அந்த யாகத்தின் பயனாக இறையருளால் இணையில்லா கரிய செம்மல் இராமனும் இராமன் தம்பியர் மூவருமாய் நால்வரும் தசரதனின் மூன்று மனைவியர் வயிற்றிலும் வந்து பிள்ளைகளாகப் பிறந்தனர். 

 சாந்தா என்ற ஒரு தமக்கை தங்களுக்கு இருப்பதாக இராமன் உட்பட தசரதனின் பிள்ளைகள் எவரும் அறிந்ததாகச் செய்தி எதுவும் இல்லை. தசரதன் தன் மூத்த மகளைப் பற்றித் தான் பெற்ற ஆண் பிள்ளைகளிடம்  மறைத்ததற்குக் காரணம் என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை.

சாந்தா குறித்த இந்த வரலாறு கம்பராமாயணத்தில் இடம் பெறவில்லை. வேறு சில இராமாயணங்களில் மட்டுமே இச்செய்தி காணப்படுகிறது வால்மீகி இராமாயணத்திலும் இருக்கிறது. நேபாள நாட்டில் உள்ள லலித்பூர் என்னுமிடத்தில் சாந்தாவிற்கும் ரிஷ்ய சிருங்கருக்கும் கோவில் ஒன்று இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து கொடுத்து பிள்ளை பாக்கியம் அருளியதற்கு நன்றிக்கடனாக இருவருக்கும் தசரதன் கட்டிய கோவில் அது என்று கூறப்படுகிறது.

தமிழ் முத்து மணி.

About Author

1 thought on “இராமருக்கு ஓர் அக்காள் உண்டு தெரியுமா?/சிவகாசி முத்துமணி

  1. தெரிந்த இதிகாசத்தில், தெரியாத கதாபாத்திரத்தை மிகத்
    தெளிவாக விளக்கிய விதம்
    மிகவும் அருமை அண்ணா ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.