October 12, 2024

Seithi Saral

Tamil News Channel

இராமாயணத்தின் மொழிமாற்றங்கள்/ சிவகாசி முத்துமணி

1 min read

Translation texts of Ramayana / Sivakasi Muthumani

9/2/2021
இராமாயணத்தைப் போல, இராமன் கதையைப் போல வேறு ஏதாவது ஒருவனுடைய கதை இந்தியாவெங்கும், அதையும் கடந்து சென்று சேர்ந்திருக்குமா? என்று கேட்டால், இல்லை என்று துணிந்து சொல்லலாம் .அந்த அளவிற்கு நம்மோடு நம் வாழ்க்கையோடு கதையாக, பாடலாக, நாடகமாக, தெருக்கூத்தாக, சினிமாவாக, பாட்டாக, பழமொழியாக, நாட்டுப்புறப் பாடலாக, விடுகதையாக, பாராயணமாக, மேடைப்பேச்சாக, பட்டிமன்ற விவாதமாக, பள்ளிக் கல்லூரியில் பாடமாக தொலைக்காட்சித் தொடராக, இரண்டறக் கலந்தது இராமாயணம். ஆனாலும் பலருக்கும் பலவிதமான கேள்விகள் இராமாயணம் குறித்து…….

 " இராமாயணம் எப்போது நடந்தது?  அதன் காலம் என்ன?. என்று ஒருவர் கேட்கிறார்."

“சாந்தா என்ற பெயரில் இராமனுக்குச் சகோதரி ஒருவர் இருந்ததாகச் சொல்கின்றனர். அது உண்மையா? அப்படியானால் கம்பராமாயணத்தில் அவர் எந்த எந்த இடங்களில் வருகிறார்?” இப்படி ஒருவர் கேட்கிறார்.

       "சம்பூகன் என்று ஒருவன் இருந்ததாகவும் அவனை இராமன் கொன்று விட்டதாகச் சிலரும், இல்லை அப்படி ஒரு நிகழ்வோ கதைமாந்தரோ கம்பனில் இல்லை என்று ஒரு சாராரும் சொல்ல, அதுபற்றி ஒரு பெரிய தர்க்கமே அவ்வப்போது நடந்து கொண்டிருக்கிறது. அப்படியானால் சம்பூகன் என்பவன் யார்? இராமாயணத்தில் அவன் எந்தக் காண்டத்தில் எந்த இடத்தில் வருகிறான்?" இப்படி ஒருவர் கேட்கிறார்.

 "ஐயா,இராவணன் சீதையைப் பர்ணசாலையோடு சேர்த்துத் தூக்கிச் சென்றதாகவும், இல்லை இல்லை. சீதையைக் கைகளால் தொட்டுத்தான் இராவணன் தூக்கிச் சென்றான் என்றெல்லாம் கேள்விப்படுகிறோம். எது இராமாயணத்தில் உள்ளது? உண்மை என்ன விளக்குங்கள்".என்று சிலர் கேட்கின்றனர். 

“எங்கள் ஆசிரியர் ஒருவர் பாடம் கற்பிக்கும் போது சீதை இராவணனுக்கு மகள் உறவு என்று குறிப்பிட்டார். வியப்பாக இருக்கிறது. மகள் உறவு என்றால் அவன் ஏன் சீதையைக் கவர்ந்து சென்றான்?உண்மைதானா?” இப்படி இராமாயணக் கதை குறித்து ஏராளமான குழப்பம் நம்மில் பலருக்கும் இருக்கத்தான் செய்யும். இந்தக் குழப்பம் விலகிக்கொள்ள….

  இராமாயணம்  இந்தியாவின் தலைசிறந்த இதிகாசம். ஒரு வில் ஒரு சொல் ஒரு இல் என வாழ்ந்த இராமனுடைய கதை. வேறுள பகைமை எல்லாம் மானுடம் வென்றதை விளக்கும் கதை. தன்னை வென்றவன் உலகை வெல்லலாம் என்று மெய்ப்பித்த கதை.

இராமாயணம் நூலாக எழுதப்படும் முன்பே இந்திய மக்களால் நன்கு அறியப்பட்ட கதை. கதை என்று சொல்லலாமா?கதை என்று சொல்வதை விட இந்தியாவில் நடைபெற்ற வரலாறு எனலாம். அதைப் பிற்காலச் சந்ததிகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக இராமாயணம் நூலாக எழுதப்பட்டது. அந்த முயற்சியை முதன்முதலில் மேற்கொண்டவர் வால்மீகி.இராமாயணத்தை முதன் முதலில் முறையான நூலாக செய்யுள் வடிவில் வடமொழியில் இயற்றியவர் வால்மீகி. வால்மீகி அந்நூலுக்கு இட்ட பெயர் 'ராம கதா'. என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

  வால்மீகி எழுதிய ராமாயணமான ராமகதா தவிர, கீழ்க்கண்ட ஆறு இராமாயணங்கள் வேறு வேறு புலவரால் வடமொழியில் இயற்றப்பட்டன.

1அத்யாத்ம ராமாயணம்
2வசிஷ்ட ராமாயணம்
3லகு யோக வசிஸ்டா
4ஆனந்த ராமாயணம்
5அகஸ்திய ராமாயணம்
6அத்புத ராமாயணம்

  இவை அனைத்தும் செய்யுள் வடிவில் அமைந்த நூல்கள். இராமாயணக் கதையை பாமர மக்களும் படித்து அறிந்து கொண்டு பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இராம கதையை  எழுதியவர் துளசிதாசர். அந்நூலின் பெயர். ராம சரித மானஸ். இந்நூல் வால்மீகியின் ராமகதா என்ற நூலை அடித்தளமாகக் கொண்டது. இன்னும் சொல்லப்போனால் ராம கதாவின் விளக்க நூல் என்று இதைச் சொல்லலாம். இந்நூல் கிபி 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

     ஆனால் அதற்கு முன்பே கம்பன் உன்னதத் தமிழால் உயர்ந்தோர் ஏத்தும் சொல் நுட்பத்தால் தனிப்பெரும் நடையில் ஆசிரிய விருத்தத்தில்  கம்பராமாயணத்தைக் காவியமாக 12ஆம் நூற்றாண்டில் எழுதி முடித்துவிட்டான். வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட முதல் இராமாயணம் கம்பனால் எழுதப்பட்ட இராமாவதராம் என்பது நமக்குப் பெருமை. அதன்பின்னரும் தமிழில் சில இராமாயணங்கள் தோன்றின. ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது.. கவிஞர் வாலி கூட அவதார புருஷன் என்ற பெயரில் இராமாயணத்தை எழுதினார். இராசகோபாலாச்சாரி சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் உரைநடையில் எழுதிய ராமாயணம் புகழ்பெற்றது. ராஜாஜியின் உரைநடை ராமாயணம் முழுவதுமாக வான்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது.

 இந்திய மொழிகளில் இராமாயணம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அறிஞரால் ஒருவரால் எழுதப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரி மொழியில்  இராமனின் வரலாறு, ராமாவதார சரிதை என்று இராமாயணம் எழுதப்பட்டது.

 குஜராத்தி மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் துளசிதாசரின் ராமசரிதமானஸை அடியொற்றி துளசி கிருத ராமாயணம் என்னும் நூலை பிரேமானந்த ஸ்வாமி எனும் புகழ்பெற்ற குஜராத்தி கவிஞர் இயற்றினார்.

   மராட்டிய மொழியில் 16 ஆம் நூற்றாண்டில் பவர்த்த ராமாயண எனும் பெயரில் மற்றொரு ராமாயணம் ஏக்நாத் என்பவர் இயற்றினார். மகாராஷ்டிரத்தில் அதற்கு முன்னரே 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டில மொழிபெயர்க்கப்பட்ட

மற்றொரு ராமாயணமும் மராட்டியத்தில் வழங்கி வருகிறது.

 அஸ்ஸாமில் 15 ஆம் நூற்றாண்டில்  மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது கோதா ராமாயணம் என்னும் பெயரில் இராமரின் கதை இயற்றப்பட்டது.

 வங்க மொழியில் 15 ஆம் நூற்றாண்டில் கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட   கிரித்திவாசி ராமாயணம் வங்காளத்தில் புகழுடன் இருக்கிறது.

ஒடிஷாவில், ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் என்ற பெயரில் பலராம்தாஸ் என்னும் அறிஞர் இராமாயணக் கதையை 16 ஆம் நூற்றாண்டில் இயற்றினார் .

தெலுங்கு மொழியில் இராமாயணத்தை இயற்றியவர் இருவர்.ஆந்திராவில் புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு. கவிஞர் மொள்ள என்பவரால் இயற்றப்பட்ட மொள்ள ராமாயணமு என்னும் ராமாயணங்கள்  உள்ளன. கவிஞர் மொள்ள என்பவர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

  கன்னடத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம், 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட குமரா வால்மீகி தொரவ ராமாயணம், மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட ராமசந்திர சரித புராணா எனும் முன்று  ராம கதைகள் வழக்கத்தில் இருக்கின்றன  வருகின்றன. தவிரவும்.. கன்னடத்தில் முத்தண்ணா என்பவர் 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் புகழ் பெற்றவை .

தமிழில் ஒட்டக்கூத்தர் உட்பட வேறு புலவர் பலரும் இராமாயணத்தைத் செய்யுளில் எழுதியுள்ளனர். பிற்காலத்தில் கதை வடிவிலும் உரை வடிவிலும் இராமாயணக் கதையை எழுதியோர் பலர். ஆயினும் கம்பனால் எழுதப்பட்ட இராமாவதாரம் ஒன்றே மிகவும் சிறப்பு பெற்றது என்பதை அறிவோம்.

மலையாளத்தில் எழுத்தச்சன் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு என்னும் பெயரில் எழுதிய இராமாயணம் கேரளாவில் பிரபலமான இராமகதையாகக் கருதிப் போற்றப்ப்படுகிறது.

நேபாளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி
பெற்றவை.

கோவாவில் 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால் கொங்கணியில் ராம கதை இயற்றப்பட்டதாகவும் ராமாயணமு என்னும் அந்நூலின்எனும் கைப்பிரதிகள் போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் என்னும் பெயரில் இராமனின் கதை எழுதப்பட்டது.

 இவை மட்டும்தானா?இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி, ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் இராமாயணங்கள்  இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் அந்த அந்தப் பகுதியில் வாழும் மக்களால் நன்கு அறியப்பட்ட இராமகதை நூல்கள்.

இந்தியா தவிர அயல்நாடுகள் சிலவற்றிலும் இராமகதை இன்றளவும் சொல்லப்பட்டு வருகிறது. நூல்களாக இயற்றப்பட்டுள்ளன.கம்போடியா நாட்டில் ரீம்கர் என்னும் இராமகதைநூல் உள்ளது.

தாய்லாந்தில் ராமாகீய்ன்
லாவோஸில் பிரலாக் பிரலாம் என்னும் பெயரிலும் பர்மாவில் யம ஸாட்டாவ் என்னும் பெயரிலும்
மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா என்னும் பெயரிலும் இராமாயண நூல்கள் உள்ளன.

   இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம் என்னும் நூல் இருக்கிறது.பிலிப்பைன்ஸ் நாட்டில் ராஜா மகாந்திரி என்னும் பெயரிலும் இராமாயணக் கதை சொல்லப்படுகிறது.

இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா என்னும் இராமாயணம் இருக்கிறது.
ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் பெயரில் இராமாயண நூல் வழக்கத்தில் இருக்கிறது.

 ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ என்னும் பெயரில் இராமாயண நூல் இருக்கிறது.

சீனா, திபெத் மற்றும் தென்மேற்கு சீனாவில் லங்கா சிப் ஹார் என்னும் இராமாயணம் பின்பற்றப்படுகிறது

இப்படி உலகின் பல பகுதிகளில் ஏராளமான இராமாயணங்களில்  படிக்கப்படும் இராமனின் ஒழுக்கமான வாழ்க்கை உலக மக்களால் பின்பற்றப்பட்டும் வருகின்றன. ஆனால் இந்த நூல்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைந்தது வால்மீகி வடமொழியில் இயற்றிய இராமாயணமே என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கம்பன் உட்பட பிற ஆசிரியர் அனைவரும் அவரவர் வாழும் பகுதிகளுக்கு ஏற்ப கதைப் போக்கிலும் சம்பவங்களிலும் மாற்றங்கள் சிலவற்றைத் தவிர்க்கமுடியாத வகையில் ஏற்படுத்தியிருப்பது உண்மை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.