April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

தெரிந்து கொள்வோம் தேர்தல் வரலாறு (7): 1980: மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி

1 min read

Let us know Election History (7): 1980: The MGR regime again

28/3/2021

ஏழாவது சட்டமன்றத்தேர்தல் 1982-ல் தான் நடந்திருக்கவேண்டும். ஆனால் இரண்டு ஆண்டுகள் முந்தி விட்டது. அதுதான் அரசியல்.

1977-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி மூன்று ஆண்டுகள் கூட நிறைவு செய்யவில்லை. “ஜனதா உனதா எனதா” என்ற சண்டையில் அவர்களுக்குள்ளே அடித்துக்கொண்டு ஆட்சியை கவிழ்த்து விட்டனர்.

இதனால் 1980-ல் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திராகாந்தி சுதாரித்துக்கொண்டு, நிலையான ஆட்சி தருவேன் என்றார்.

எந்த திமுக ஆட்சியை கலைத்தாரோ அதே திமுகவுடன் தேர்தல் கூட்டணி வைத்தார். நெருக்கடி கால தவறுகளுக்காக சென்னை மெரினா கடற்கரைக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் மக்களிடம் வருத்தம் தெரிவித்தார்.

அவ்வாறு அவர் கீழே இறங்கி வந்ததன் மூலம் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.

1 கோடிக்கு மேல் வாக்குகள் பெற்ற திமுக-காங் அணி தமிழ்நாட்டிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 39-க்கு 37 இடங்களை இந்தக் கூட்டணி வென்றது. அதிமுகவுக்கு கோபிச்செட்டிப்பாளையம், சிவகாசி என இரட்டை இலைக்கு இரண்டே இரண்டு இடங்கள் கிடைத்தன.

திமுக-காங். கூட்டணி வாக்குகள்: 1,02,90,515 (வாக்கு சதவீதம் 55.89)

அதிமுக-ஜனதா கூட்டணி வாக்குகள்: 73,92,655 (40.15)

தமிழ்நாட்டில் ஒரு கூட்டணி ஒரு கோடி வாக்குகளுக்கு மேல் முதல் முறையாக பெற்றது, இந்தத் தேர்தலில் தான். இந்த வெற்றியை சாக்காக வைத்து, மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாகக் கூறி, 17-2-80 அன்று அதிமுக அரசை இந்திராகாந்தி டிஸ்மிஸ் செய்தார்.

இந்த அரசியல் பின்னணியில் தான், 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழக சட்டமன்றம் தேர்தலை சந்தித்தது.

நாடாளுமன்றத்தேர்தல் போலவே வெற்றியை அடைந்து விடலாம் என்று கணக்குப் போட்டு, திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தது.

கண்ணீர் சிந்திய எம்ஜிஆர்

ஆட்சியை இழந்த எம்ஜிஆர், இரு கம்யூனிஸ்டு கட்சிகளுடன், குமரி அனந்தனின் காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ், நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து தேர்தலை சந்தித்தார்.

அவரது தேர்தல் பிரசாரத்தில், “நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என் ஆட்சியை கலைத்தார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். சில கூட்டங்களில் கண்ணீர் வடித்து நியாயம் கேட்டார்.

எதிர் அணியில் திமுகவும் காங்கிரசும் சரிபாதி இடங்களை பகிர்ந்து கொண்டாலும், யார் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதில் பிணக்கு ஏற்பட்டது. இந்திராகாந்தி தலையிட்டு, கருணாநிதி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என அறிவித்தார். என்றாலும் இந்தக் கூட்டணி சரியாக ஒட்டவில்லை. திமுக வேட்பாளர்களின் காலை வாரி விடும் வேலைகளில் காங்கிரசே ஈடுபடுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குழிபறிப்புகளுக்கு மத்தியில், ஆட்சிக்கலைப்பினால் எம்ஜிஆர் மீது மக்கள் மத்தியில் அனுதாபம் பரவியிருந்தது. இந்த அனுதாபம் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது.

கூட்டல் கணக்கு வேறு; தேர்தல் கணக்கு வேறு

2+2=4 என்பது கூட்டல் கணக்கு. ஆனால் தேர்தல் அரசியலில் 2+2=4 அல்ல; பூஜ்யம் கூட வரும் என்பதை 1980 சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் உணர்த்தின. திமுகவும், இ காங்கிரசும் கூட்டு சேர்ந்தால் ஆதாயம் என்று நினைத்துப் போட்ட கணக்கை, வாக்காளர்கள் பொய்யாக்கி விட்டனர். மத்தியில் ஒரு தீர்ப்பு; மாநிலத்திற்கு வேறு தீர்ப்பு என மாற்றி எழுதி, ஜனவரியில் வெற்றி பெற வைத்த கூட்டணியை மே மாதத்தில் தோற்கடித்து விட்டனர்.

மே 28-ல் நடந்த அந்தத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று, இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்தது.

அதிமுக 129, மார்க்சிஸ்ட் கம்யூ 11, இந்திய கம்யூ 9, கா கா தே கா 6, காமராஜர் காங்கிரஸ் 6, பார்வர்டு பிளாக் 1

அதிமுக அணியின் வாக்குகள் 93,28,839 (48.92 சதம்).

திமுக 37, காங்கிரஸ் 31, சுயே 1.

திமுக அணியின் வாக்குகள் 83,71,718 (44.43 சதம்).

தனித்துப்போட்டியிட்ட ஜனதா 2.

இந்த முறை எம்ஜிஆர் தொகுதி மாறி, மதுரை மேற்கில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வாக்கு விவரம்:

எம்ஜிஆர் 57,019

பொன்முத்துராமலிங்கம் (திமுக) 35,953

(வித்தியாசம் 21,066).

இழுபறியில் வென்ற கலைஞர்

திமுக தலைவர் கருணாநிதி 2-வது முறையாக அண்ணாநகரில் போட்டியிட்டார். கூட்டணியில் இருந்த காங்கிரசின் குழிபறிப்பு வேலைகளால் அவர் நீண்ட இழுபறிக்குப்பின் 699 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். (அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டவர், டாக்டர் ஹண்டே).

ஆட்சியைப்பறி கொடுத்த 111 நாளில் மீண்டும் தேர்தலில் வென்று, 9-6-80 அன்று மீண்டும் முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றார், எம்ஜிஆர். இந்த முறையும் அவர் முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சிசெய்ய முடியவில்லை. அடுத்த தேர்தல் 1984-லேயே வந்து விட்டது.

(1984 தேர்தல் நிலவரத்தை அடுத்து பார்ப்போம்).

-(கட்டுரையாளர்: மணிராஜ்,

திருநெல்வேலி).

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.