May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தெரிந்து கொள்வோம் தேர்தல் வரலாறு(6):1977: எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார்

1 min read

Let us know the history of elections (6): 1977: The MGR regime
Liked

1971-77க்கு இடையிலான காலகட்டம், தமிழ்நாட்டு அரசியலில் கட்சி ரீதியாகவும்,
ஆட்சி ரீதியாகவும் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தி இருந்தது.
1972-ல் திமுகழகம் பெரும் பிளவை சந்தித்தது. எம்ஜிஆர் கட்சியை விட்டு
வெளியேற்றப்பட்டு அதிமுகவை தொடங்கினார். இதனால் ஆட்சியை

சேதாரமின்றி காப்பாற்றிய முதல்-அமைச்சர் கருணாநிதியால் கட்சிக்கு ஏற்பட்ட
சேதாரத்தை தடுக்க முடியவில்லை. திமுகவின் வாக்கு வங்கி கடுமையாக
சரிந்தது.
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜாங்கம் மறைவினால் வந்த
இடைத்தேர்தலில் இது வெளிப்பட்டது. எம்ஜிஆர் நிறுத்திய மாயத்தேவர்,
இரட்டை இலைச்சின்னத்தில் 1.41 லட்சம் வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று
வெற்றி பெற்றார். காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் 2-வது இடத்தில் வந்தது.
திமுக 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. வாக்கு விவரம்:
மாயத்தேவர் (அதிமுக) 2,60,824
என்எஸ்வி சித்தன் (ஸ்தாபன காங்) 1,19,032
பொன்முத்துராமலிங்கம்(திமுக) 93,496
சீமைச்சாமி(இந்திரா காங்) 11,423.
முப்பெருந்தலைவர்களை இழந்த தமிழகம்
திராவிட கட்சிகள் இரண்டாகப்பிரிந்து யுத்தம் நடத்திய இந்த சூழலில்
தமிழகத்தின் முதுபெரும் தலைவர்கள் மூவர் மறைந்தனர்.
மூதறிஞர் என போற்றப்பட்ட ராஜாஜி 1972 டிசம்பர் 25&ந் தேதி மறைந்தார்.
கொள்கை அளவில் அவருக்கு எதிரியாகவும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய
நண்பராகவும் விளங்கிய தி.க. தலைவர் தந்தை பெரியார், அடுத்த ஆண்டில்
டிசம்பர் 24&ந் தேதி மறைந்தார். இருவருக்குமே மறையும் போது வயது 94
என்பதும், அடுத்தடுத்த நாளில் அவர்கள் மறைந்ததும் குறிப்பிடத்தக்கது.
3&வதாக பெருந்தலைவர் காமராஜர், 1975 அக்டோபர் 2&ந் தேதி காந்தி
ஜெயந்தியன்று மரணம் அடைந்தார். அதே ஆண்டில் ஜூன் 26&ந் தேதி பிரதமர்
இந்திராகாந்தி நாடு முழுவதும் நெருக்கடி நிலையை (எமர்ஜென்சி)
அமல்படுத்தினார். அப்போது முதலே “தேசம் போச்சே தேசம் போச்சே” என்று
தலையில் அடித்துக்கொண்ட காமராஜர், தேசத்தலைவர்கள் மிசா சட்டத்தின்கீழ்
கைது செய்யப்படுவது கண்டு பதறினார். ஆனால் இந்திரா பிடிவாதமாக இருந்தார்.

தேசத்தின் மீது அளவற்ற பற்றும், ஜனநாயகத்தின் மீது அசைக்கமுடியாத
நம்பிக்கையும் கொண்டிருந்த காமராஜர் அடுத்த 3 மாதங்களில் மறைந்து விட்டார்.
திமுக ஆட்சி டிஸ்மிஸ்
இதற்கு மத்தியில் திமுகழக அரசு, நெருக்கடி நிலையை எதிர்த்து கடுமையாக
போராடியது. இந்திராகாந்தி கேட்டுக்கொண்டபோதும் கருணாநிதி தனது எதிர்ப்பு
நிலையை கைவிடவில்லை.
இதன் பலனாக, 1976 ஜனவரி 31&ந் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி
ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் 1977-ம் ஆண்டின் ஆரம்பம் வரை நீடித்த நெருக்கடி
நிலைக்குப்பின், நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த இந்திரா காந்தி முன்வந்தார்.
ஆனால் அவருக்கு எதிராக வீசிய கடும் கோப அலையின் காரணமாக
இ.காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்திரா ஆட்சியை இழந்தார்.
ரேபரேலியில் அவரே தோற்றுப்போனார். எதிர்க்கட்சிகள் ஜனதா என்ற குடையின்
கீழ் ஒருங்கிணைந்து ஆட்சி அமைத்தன.
ஆனால் அதே தேர்தலின் முடிவுகள் தமிழகத்தில் தலைகீழாக இருந்தன.
தமிழகத்தில் இ.காங்கிரசும் அதிமுகவும் கூட்டு சேர்ந்து 35 இடங்களை வென்றன.
திமுகவும் ஜனதாவும் கூட்டணிஅமைத்து 4 இடங்களைப் பிடித்தன. இதில்
வேடிக்கை என்னவென்றால், திமுகவுக்கு ஒரேஒரு இடமும் (வடசென்னை),
ஜனதா கட்சிக்கு 3 இடமும் (மத்திய சென்னை, வேலூர், நாகர்கோவில்) கிடைத்தது
தான்.
நான்கு முனைப்போட்டி
அடுத்த சில மாதங்களில் தமிழக சட்டமன்றத்தேர்தல் நடத்தப்பட்டது. பிரதான
கட்சிகள் அனைத்தும் தனித்தனியே களம் கண்டதால் 4 முனைப்போட்டி
நிலவியது.
இதில் அதிமுக 130 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்தது.
அதனுடன் கூட்டு சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 13 இடங்களைப்பிடித்தது.

திமுகழகம் 48 இடங்களில் வெற்றி பெற்றது.
காமராஜர் மறைவுக்குப்பின் சிவாஜிகணேசன் உள்பட பழைய காங்கிரசின் ஒரு
பிரிவினர் இந்திரா காங்கிரசில் இணைந்து விட்டனர். இன்னொரு சாரார் ஜனதா
கட்சியாக இயங்கினர்.
கருப்பையா மூப்பனார் தலைமையில் இயங்கிய இ.காங்கிரஸ் இந்தத் தேர்தலில்
27 இடங்களைப்பிடித்தது. அதன் தோழமைக்கட்சியான இந்திய கம்யூனிஸ்டு 5
இடங்களில் வெற்றி பெற்றது.
ஜனதா கட்சிக்கு 10 இடங்களில் வெற்றி கிடைத்தது.

சென்னையிலும், தஞ்சையிலும் சாதனை
நிகழ்த்திய திமுகழகம்
இத்தேர்தலில் திமுகழகம் மீண்டும் ஆட்சியைப்பிடிக்க முடியாமல் போனாலும்
கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது.
எமர்ஜென்சியை எதிர்த்ததால் ஆட்சியை இழந்து, ஏற்கனவே கட்சியின் வாக்கு
வங்கியின் பெரும் பகுதியும் எம்ஜிஆர் பக்கம் சென்ற நிலையில்,
திமுகழகத்தலைவர் கருணாநிதி கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில்
கட்சியை வழிநடத்திச்சென்றார்.
அவரது ஆட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு
சர்க்காரியா கமிஷனை நியமித்தது. இன்னொரு பக்கம் எம்ஜிஆருக்கு திரண்ட
கூட்டம். இப்படி பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் சட்டமன்றத் தேர்தலை

திமுக தன்னந்தனியே எதிர்கொண்டது. அதற்கு தோழமையாக ஒரு கட்சி கூட
அன்று ஆதரவு தரவில்லை.
அப்படி இருந்தும் திமுக 48 தொகுதிகளை கைப்பற்றியது. அதிலும் குறிப்பாக,
சென்னையில் இருந்த 14 தொகுதிகளில் 13-ஐ திமுக வென்றெடுத்தது.
ராதாகிருஷ்ணன்நகர் (ஆர்கே நகர்) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட
சிரிப்பு நடிகர் ஐசரிவேலன் மட்டும் 1,488 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
பெற்றார்.
சென்னைக்கு அடுத்து, ஒருங்கிணைந்த தஞ்சையிலும் (இன்றைய நாகை,
திருவாருர், மயிலாடுதுறை சேர்ந்தது) திமுகவின் சாதனை பரவி இருந்தது. அங்கு
மொத்த தொகுதிகள் 20. அவற்றில் 12 தொகுதிகள் திமுகவுக்கு கிடைத்தன.
அதிமுக 3, இ.காங்கிரஸ் 2, இந்திய கம்யூனிஸ்டு 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1
என தொகுதிகளை கைப்பற்றின.
திமுக தலைவர் கருணாநிதி, சைதாப்பேட்டையில் இருந்து மாறி, அண்ணாநகர்
தொகுதியில் போட்டியிட்டு 16,438 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஜி.
கிருஷ்ணமூர்த்தியை தோற்கடித்தார்.

எம்ஜிஆர், பரங்கிமலையில் இருந்து மாறி அருப்புக்கோட்டையில் போட்டியிட்டு
29,378 வாக்கு வித்தியாசத்தில் ஜனதா கட்சி வேட்பாளர் முத்துவேல் சேர்வையை
தோற்கடித்தார்.
30.4 சத வாக்குகளைப்பெற்ற (51,94,876) அதிமுகவின் ஆட்சி எம்ஜிஆர்
தலைமையில் அமைந்தது.
24.9 சத வாக்குகளைப்பெற்ற (42,58,771) திமுகழகம் எதிர்க்கட்சி வரிசையில்
அமர்ந்தது. எதிர்க்கட்சித்தலைவராக கருணாநிதி பதவி வகித்தார்.
(அடுத்த தேர்தல் 2 ஆண்டுகள் முந்தி 1980-ம் ஆண்டிலேயே நடைபெற்றது. அந்த
விவரங்களை அடுத்து காண்போம்).

-(கட்டுரையாளர்: மணிராஜ்,
திருநெல்வேலி).

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.