April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு

1 min read

Governor calls on MK Stalin to rule

5.5.2021

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஆட்சி அமைக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.

தி.மு.க. வெற்றி

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. கூட்டணி கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து தி.மு.க.வுக்கு 133 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

புதிய ஆட்சியை அமைக்க முறைப்படி சட்டசபை தி.மு.க. தலைவரை தேர்வு செய்ய தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தை பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

ஒருமனதாக தேர்வு

பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்றார்.

கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சராக) மு.க.ஸ்டாலினை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். அப்போது அரங்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தி.மு.க. சட்டமன்ற தலைவராக (முதல்-அமைச்சராக) மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கவர்னருடன் சந்திப்பு

இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்று இருந்தனர்.

அங்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் சட்டமன்ற கட்சி தலைவராக எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார். ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். இதை கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித், மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக கூறினார். பின்னர் அங்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் கவர்னர் தேனீர் வழங்கினார்.

பதவி ஏற்பு விழா

நாளை மறுநாள் 7-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்க விரும்புவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கிண்டி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்றும் விருப்பம் தெரிவித்தார். இதையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.

133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சியமைக்க மு.க.ஸ்டாலின் உரிமை கோரிய நிலையில் கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு கடிதத்தை அவரது செயலாளர் அனந்தராவ் பட்டேல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடன் வழங்கினார்.

7ந்தேதி நடக்கும் பதவியேற்பு விழா பற்றி 20 நிமிடம் மு.க.ஸ்டாலினிடம் அனந்தராவ் பட்டேல் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.