கடையம் அருகே விபத்து; 2 டாக்டர்கள் பலி
1 min read
Two doctors killed by accident near Kadayam
6/6/2021
கடையம் அருகே திரவியநகரில் கார் மரத்தில் மோதிய விபத்தில் 2 டாக்டர்கள் பலியானார்கள்.
விபத்து
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் ராம்குமார் (வயது 40). இங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவரும், குருவிகுளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் சிதம்பரராஜா (45), சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த டாக்டர் முத்துகணேஷ் (29), சங்கரன்கோவிலைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி கார்த்திக்குமார் (32) ஆகியோர் தென்காசியில் இன்று நடைபெற்ற டாக்டர்கள் கூட்டத்தில் பங்கேற்க தென்காசி வந்தனர்.
கூட்டம் முடிந்த பிறகு, மாலையில் கடையத்திற்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர்.
காரை டாக்டர் ராம்குமார் ஓட்டினார். திரவியநகர் அருகில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
2 பேர் சாவு
இதில் காரை ஓட்டிய டாக்டர் ராம்குமார், அருகில் இருந்த டாக்டர் சிதம்பரராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிசெல்வி, கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த முத்துகணேஷ், கார்த்திக்குமார் ஆகியோரை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விவத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
