தமிழ்நாடு சட்டசபை தேர்தல் செலவு ரூ.744 கோடி
1 min read
Tamil Nadu Assembly election expenditure Rs 744 crore
2.7.2021
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை நடத்த ரூ.744 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தல்
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெற்றது. அதில், திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
கொரோனா தொற்று பரவல் நேரத்தில் தேர்தல் நடத்தபட்டதால், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளுடன், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. ஓட்டுப்பதிவு மையத்தை தயார் செய்வது, ஓட்டு எண்ணிக்கை, பயணங்கள், அலுவலக செலவுகள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதியம் என தேர்தல் பணிகளுக்கு பல கோடி ரூபாய் செலவானது.
கொரோனா பரிசோதனை, கிருமி நாசினி, வாக்காளர்களுக்கு கை கிளவுஸ் போன்றவைகளும் வழங்கப்பட்டன.
ரூ.744 கோடி செலவு
இந்த நிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ரூ.744 கோடி செலவிடப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேர்தலுக்கு ரூ.618 கோடியும், தொலைபேசி, எரிபொருள், வாடகை வாகனம், விளம்பரம் உள்ளிட்ட செலவினமாக ரூ.126 கோடியும் செலவிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.