November 14, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் லிப்ட் கொடுக்காததால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்ற வாலிபர் கைது

1 min read

Youth arrested in Nellai for attempting to attack a Special Sub-Inspector after being denied a lift

12.11.2026
நெல்லையை அடுத்த மூன்றடைப்பு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிப்பாண்டியன் தலைமையில், தலைமைக்காவலர்கள் மாரியப்பன், சுந்தரபாண்டி ஆகியோர் பாணான்குளம் கிராமப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாணான்குளம் – சிங்கிகுளம் சாலையில் உள்ள பூலம் விலக்கு பகுதியில், சிங்கிகுளம் தெற்குத் தெருவைச் சேர்ந்த வானுமாமலை என்ற குறளி வானுமாமலை (வயது 38) என்பவர் கையில் நீளமான அரிவாளுடன், அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை மிரட்டி வழிமறிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், வானுமாமலையைப் பிடிக்க முயன்றனர். அப்போது, “என்னைத் தொட்டால் என் அரிவாள்தான் பேசும்” என மிரட்டிய அவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிப்பாண்டியனை அரிவாளால் வெட்ட முயன்றார். இதில் அவர் விலகியதால் உயிர் தப்பினார். தொடர்ந்து போலீசார் வானுமாமலையைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

விசாரணையில், தன் மீதான வழக்கு தொடர்பாக வழக்கறிஞரைச் சந்திப்பதற்காக நெல்லை மாநகரப் பகுதிக்குச் செல்ல புறப்பட்டதாகவும், வழியில் வாகனங்களிடம் லிப்ட் கேட்டபோது யாரும் நிறுத்தாததால், அவர்களை மிரட்டுவதற்காக அரிவாளைக் காட்டி வழிமறித்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வானுமாமலை மீது கொலை முயற்சி, ஆயுதத் தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *