May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு சூட்டிய புகழ் மாலைகள்

1 min read

Others about actor Tilak Shivaji Ganesan

21.7.2021
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவுதினம் இன்று.. அன்று இவரை பற்றி நினைவு கொண்ட சிலர் சொன்ன புகழ்மாலை இது…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகத்தான நடிகர். அவர் சிறந்த நடிகர் என்பதால் மட்டும் அவருக்கு பெருமை அல்ல. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் சிவாஜி கணேசனை வலது கைக்கு கொடுப்பது வலது கைக்கே தெரியாது. ஆம் அவர் கொடுத்தது அவருக்கே தெரியாது. குறிப்பாக நாட்டுக்கு அவர் செய்தது மகத்தானது.
அவரை பற்றி மற்றவர்கள் சொன்ன புகழுரைகளை இங்கே காண்போம்..
ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ

‘என்னைப் போல் சிவாஜி நடிப்பார்- ஆனால், என்னால்தான் சிவாஜியைப்போல் நடிக்க முடியாது!

எம்.கே.தியாகராஜ பாகவதர்:

‘அம்மா’ என்கிற ஒற்றை வார்த்தையை உச்சரித்ததில் திரைஅரங்கையே கை தட்டவைத்தவர் சிவாஜி ஒருவர்தான்.

நடிகர் சிவகுமார்:

சிவாஜியின் மிகப்பெரிய சொத்து, அவரது ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்தக் கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்.

நடிகர் வி.கே. ராமசாமி:

சிவாஜிக்கும் எனக்குமான நட்பு 1945-ல் யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் மதுரை பாலகான சபாவிலிருந்த போதே நாடகங்களில் நடிக்கும் போதே சிவாஜி ஏற்காத பாத்திரமில்லை. பெண் வேடமிட்டு கதாநாயகியாக ஒரு நாடகம் முழுவதும் அசத்துவார். மறுநாள் ராஜாவாக கம்பீரமாக நடை போடுவார். இந்த காலகட்டத்தில் ‘இழந்த காதல்’ என்ற நாடகத்தில், ஜெகதீஷ் என்ற வில்லன் பாத்திரமும், ‘கள்வர் தலைவன்’ நாடகத்தில் விஷ வைத்தியனாக நடித்ததும் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தன.

நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள்: ‘பராசக்தி’யை படமாக எடுக்கும் போது குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜிதான் நடிக்க வேண்டுமென பெரிதும் முயற்சி செய்து , திண்டுக்கல்லில் நாடகமொன்றில் நடித்துக்கொண்டிருந்தவரை அழைத்து வந்து ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் முன் நிறுத்தினார்.

பராசக்தியின் படப்பிடிப்பு ஏ.வி.எம்மில் நடக்க ஆரம்பித்தபோதே சினிமா உலகில் அவரது நடிப்பைப்பற்றி ஒரே பேச்சாக இருந்தது. மற்ற ஃப்ளோர்களில் நடித்துக்கொண்டிருந்தவர்களெல்லாம் பெருந்திரளாக வேடிக்கைப் பார்க்கக்கூடி விடுவார்கள்.
ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அப்போதைய சவுண்ட் என்ஜினீயராக இருந்த ஜீவா நானும் எத்தனையோ நடிகர்களின் குரல்களையெல்லாம் பதிவு செய்திருக்கிறேன், இவரது நடிப்பும் குரலும் சிம்ம கர்ஜனையாக இருக்கிறது என்று மனந்திறந்து பாராட்டினார். 1952 தீபாவளியன்று வெளியான பராசக்தியின் வசனகள் கிளப்பிய வேட்டுச்சத்தம் திரை உலகில் என்றைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

நடிகர் நம்பியார்:

உலகின் தலைசிறந்த நடிகர்களில் எல்லாம் அவர் தலை சிறந்தவர். எந்த வேடமாக இருந்தாலும் மற்றவர்களைவிட திறமையாக செய்யக்கூடியவர். உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்துக்குப் பிறகும் சிவாஜி வில்லனாக நடித்திருந்தால், எனக்கெல்லாம் வேலை இல்லாமல் போயிருக்கும்.

நடிகை மனோரமா:

சிவாஜியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நடிப்பு மட்டுமல்ல நேரம் தவறாமையும்தான். அத்தனை பெரிய நடிகர் ஷூட்டிங்கில் எவரையும் காக்க வைத்ததில்லை. எந்த இயக்குனரின் படமாக இருந்தாலும், ஒரு புதுமுக நடிகரைப் போல் முழு ஒத்துழைப்பையும் தருவார். வாத்தியாரைப்போல் சொல்லித் தரவேண்டியவர் மாணவனைப்போல் கற்றுக்கொள்வார். அவருடன் பல படங்களில் நடித்திருந்தாலும், ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அவர் அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம்.

நடிகை சௌகார்ஜானகி

: சிவாஜி ஒரு பிறவிக் கலைஞர். அவருடன் பணிபுரிந்த அந்தக்கால நாட்களை நினைத்தால் மனதுக்குள் எப்போதும் சிலிர்ப்பான அனுபவம்தான். அவரது தொழில்பக்தியையும் காலந்தவறாமையையும் வேறு எவரிடமும் நம்மால் பார்க்க முடியாது. திரையுலகின் தந்தை தாதாசாஹேப் ஆயுள் முழுவதும் சினிமா நன்றாக வளரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரை பிரிட்டிஷ் அரசாங்கம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதேப் போல் நமது அரசாங்கமும் சிவாஜியைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காலதாமதமாகவே தாதா சாஹேப் விருதை வழங்கியது.

கவிஞர் கண்ணதாசன்:

எதை எழுதுவது, எதை விடுவது ? இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால் நியாயமாக இருக்கும் ? கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி ? சிவாஜி ஒரு மலை, சிவாஜி ஒரு கடல்.

கண்களின் கூர்மையைச் சொல்வேனா ? அல்லது கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ? ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாகக் காட்டும் உன்னத நடிப்பைச் சொல்வேனா ? அவரைப்போல் இதுவரை ஒருவர் பிறந்த தில்லை; இனி பிறப்பார் என்பதற்கும் உறுதி இல்லை ! இது உண்மை. உலகறிந்ததே !

கவிஞர் வைரமுத்து

‘பராசக்தி‘ வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகுதான் நான் பிறக்கிறேன். நீங்கள் விருட்சமாய் வளர வளர நான் விதையாய் முளைத்திருக்கிறேன். உங்கள் படங்களைப் பார்க்கப் போனபோது மட்டுந்தான் கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு போன கடலைகளைத் தின்னாமல் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறேன். ‘மனோகரா‘ பார்த்துவிட்டு அந்த உணர்ச்சியில் சிறிதும் சிந்தாமல் அப்படியே வீட்டுக்கு வந்து சங்கிலிக்குப் பதிலாக தாம்புக் கயிற்றால் என்னைப் பிணைத்து இருவரை இழுத்துப் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு புளிய மரத்தைப் புருஷோத்தமனாக்கி என்னை வசனம் பேச வைத்தவர் நீங்களல்லவா? கட்டபொம்மன்‘ பார்த்துவிட்டு சோளத்தட்டையில் வாள் செய்து என்னைச் சுழற்ற வைத்தவர் நீங்களல்லவா? உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது. இந்தியா சினிமா வரலாற்றில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகத்திற்கு அதிமுக்கிய பங்கிருக்கிறது. நீங்கள் நடித்ததால் பல தமிழ்ப் படங்கள் உலகத் தரம் பெற்றன !

எழுத்தாளர் சுஜாதா:

ராஜராஜ சோழன், சிவாஜி கணேசனாக நடித்த,”ராஜராஜ சோழன்” படம் பார்த்தேன்! (தமிழ்நாடு பாட நூல் நிறுவன 3 -ம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் ராஜராஜ சோழன் பாடத்தில் சிவாஜிசாரின் படமே இடம் பெற்றிருந்தது).

வியாட்நாம் வீடு சுந்தரம்:

இந்திய சிறந்த நடிகர்களுக்கான விருது, இந்தியாவின் சிறந்த நடிகருக்கு வழங்கப்படவே இல்லை. இப்படி பல தரப்பட்ட பாராட்டுக்கள் இருந்தாலும், சிவாஜி நடிப்பை ‘ஓவர் ஆக்ஸன்’ என்று சொல்லும் சில விமர்சனச் சேவல்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிவாஜி ஷப்ட்டிலாக நடித்த (அண்டர் ஆக்ட்) அநேகப் படங்களை இந்த வகையினர், ரொம்ப சௌகரியமாகக் கண்டு கொள்ளமாட்டார்கள். தங்கள் வாதத்துக்குத் துணையாக எம்.ஆர். ராதா, ரங்கராவ், நாகேஷ், சந்திரபாபு, டி.எஸ். பாலையா, எஸ்.வி.சுப்பையா ஆகியோர் நடிப்பைத் துணைக்கழைத்துக் கொள்வார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ரங்கராவ் தானுண்டு, ஒரு சந்திரபாபுதானுண்டு. ஆனால், சிவாஜிக்குள் இவர்கள் எல்லோருமே உண்டு.

நன்றி : இணையதளம்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.