மராட்டிய மாநில நிலச்சரிவு: 73 உடல்கள் இதுவரை மீட்பு
1 min read
Maratha state landslide: 73 bodies recovered so far
25.7.2021
மராட்டிய மாநிலம் கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களில் 73 பேரின் உடல்களை இதுவரை மீட்டுள்ளதாகவும், 47 பேரின் நிலைமை தெரியவில்லை என தேசிய பேரிடர் மீட்பு படை ஞாயிறன்று தெரிவித்தது.
நிலச்சரிவு
மராட்டிய மாநிலம் ராய்காட், ரத்னகிரி, சதாரா ஆகிய மாவட்டங்கள் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராய்காட்டின் தலியே கிராமம், ரத்னகிரியின் போரஸ், சதாரா மாவட்டத்தின் மிர்கான், அம்பேகர், தோகாவாலே ஆகிய இடங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக பேரிடர் மீட்பு படை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சனிக்கிழமை நிலவரப்படி மராட்டிய மாநிலத்தில் மழை மற்றும் நிலச்சரிவுக்கு 138 பேர் இறந்துள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
73 உடல்கள்
இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் எஸ்.என். பிரதான் சமீபத்திய தகவல்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதன்படி 73 உடல்களை இதுவரை மீட்டுள்ளனர். அதில் ராய்காட்டின் தலியே கிராமத்தில் மட்டும் 44 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் 47 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் நிலைமை இதுவரை தெரியவில்லை என கூறியுள்ளார்.