இயக்குனர் திலகம்….யார்?/ சொல்லாராய்ச்சி/ முத்தமணி
1 min readIyakkunar thilagam / Tamil Ilakkiyam by Muthumani
1/9/2021
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன், திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் எல்லோரையும் நாம் அறிவோம். திலகம் வரிசையில் இயக்குனர் திலகம் யார் என்று தெரியுமா? சிலர் அறியாமல் இருக்கலாம். இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்… கற்பகம், கை கொடுத்த தெய்வம், குறத்தி, மகன் பணமா பாசமா, உயிரா மானமா, குலமா குணமா…. போன்ற படங்களை இயக்கியவர்.. காட்சியில் வசனங்களில் அனல் தெறிக்கும்..
அதுசரி அவருக்கும் நம் கட்டுகரைக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?. இயக்குனர் திலகம் என்று எழுதலாமா? என்று, திடீரென்று ஒரு கேள்வி எழுந்தது. அதனால் இப்படி சிந்தனை போயிற்று.
பள்ளியில் படிக்கிற போது, கட்டுரை ஏட்டில் விடுப்பு விண்ணப்பம் எழுதும்போது. ‘அனுப்புனர்’ என்று எழுதி என் பெயரைக் கீழே எழுதிவிட்டு பெறுனர்… என எழுதி, அதன் கீழே வகுப்பாசிரியர் என்று எழுதினேன்.
தமிழாசிரியர் அவற்றைச் சிவப்பு மையால் அடிக்கோடிட்டு, இரண்டு சொற்களும் தவறென்று சுட்டிக்காட்டி, கீழ்க்கண்டவாறு திருத்திக் கொடுத்தார்.
அனுப்புநர்
பெறுநர்
நான் எழுதியது என்ன குற்றம்? அல்லது ஆசிரியர் சொல்வதில் என்ன இலக்கணம் இருக்கிறது என்பதெல்லாம் அப்போது தெரியவில்லை. ஆசிரியர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று எண்ணி,தொடர்ந்து அப்படியே எழுதி வந்தோம். அதாவது ‘ன’ போடாமல்’ ந ‘ போடப் பழகினேன். நம்மில் பலர் இன்றளவும்
அனுப்புனர்
பெறுநர்….
இப்படி எழுதுவதும் உண்டு…
அனுப்பு
பெறு
என்னும் சொற்கள் ஏவல் வினைச் சொற்கள்.. ஏவல் வினைச்சொல்லைப் பெயர்ச்சொல்லாக மாற்றும் முயற்சியில் நர்… என்னும் விகுதியை மட்டுமே சேர்க்க வேண்டும் நர் என்பது… ஆளைக் குறிக்கும்.. கடிதத்தை அனுப்புகிறவன் அனுப்புநர் . பெறுகிறவன் பெறுநர்
அனுப்புநர்…. எனில் அல்லது அனுப்புகிறவன் எனில் Applicant , Sender என்னும் பொருள் தரும்.
பெறுநர் என்பது பெறுபவன் Recipient, என்னும் பொருள் தரும்.
இதைப்போல எந்த வினைச்சொல்லை பெயர்ச் சொல்லாக மாற்றினாலும் விதிமுறை மாறுவதில்லை.
அப்படி இருக்கையில் நாம் பல்வேறு இடங்களில் இதை மாற்றி எழுதிவிடுகிறோம்..
இயக்குனர் என எழுதுவது தவறு…. இயக்குநர்… என்னும் சொல்லே சரியானது.. அதைப்போல
ஓட்டுநர்… ஓட்டும் தொழிலைச் செய்பவன்
நடத்துநர்…
நடத்தும் தொழிலைச் செய்பவன்.
பயிற்றுநர்…
பயிற்றும் தொழிலைச் செய்பவன்
என்றே எழுத வேண்டும்….
ஓட்டுனர் நடத்துனர் பயிற்றுனர் என்பவைப் பிழையானவை..
அப்படியானால் இயக்குநர் திலகம் என்றுதானே எழுத வேண்டும்…. இயக்கும் தொழிலைச் செய்பவன்.. இயக்குநர்
செய்தனர்… என்பது பலர்பால் வினைமுற்று… செய்+ த் +த்+ அன்+ அர்.
இவ்வாறு பிரிந்து…
அர்…. என்பது பலர்பால் விகுதி ஆகும்.
தமிழ் முத்துமணி