நடிகர் சோனு சூட் ரூ. 20 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை பரபரப்பு
1 min read
Actor Sonu Suite Rs. 20 crore tax evasion – income tax scandal
வருமான வரி ஏய்ப்பில் நடிகர் சோனு சூட் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
ஆம் ஆத்மி கட்சியில் சோனு சூட் இணையவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த அதிரடி சோதனை நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.
அருந்ததி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிகராக நடித்த சோனு சூட் கடந்த ஒன்றாரை ஆண்டுகளாக கொரோனாவில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பெரும் உதவிகளை செய்து சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றார். இந்நிலையில், அவர் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மும்பையில் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் வரி ஏய்ப்பு செய்திருப்பது உறுதியாகி உள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் கிரவுட் ஃபண்டிங் மூலமாக கொரோனா உதவி செய்வதற்காக உலக நாடுகளில் இருந்து பலரிடமும் பணம் வாங்கி வந்த நிலையில், தற்போது அவரது இல்லத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறையினர் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளனர்.
லக்னோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் கூட்டு வைத்து இந்த மோசடியில் நடிகர் சோனு சூட் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து ஒரே நேரத்தில் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களிலும் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ரியல் எஸ்டேட் நிறுவனம் 65 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சமீபத்தில் நடிகர் சோனு சூட் சந்தித்திருந்தார். அந்த கட்சியில் சோனு சூட் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் தான் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை என பாஜனதா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சுமார் 20 கோடி வரையிலான வரி ஏய்ப்பு நடைபெற்றது தொடர்பான ஆதாரங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றிய நிலையில், இது தொடர்பாக நடிகர் சோனு சூட்டிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமான வரித்துறையினர் சோதனை குறித்து நடிகர் சோனு சூட் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விளக்கத்தையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.