“வீடு வாங்க ஒரே மாதிரியான விதிமுறைகள்” – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
1 min read“Uniform rules for buying a house” – Supreme Court order to the Central Government
5.10.2021
கட்டிட ஒப்பந்தாரர் மற்றும் வீடு வாங்குவோருக்கு இடையே ஒரே மாதிரியான விதிமுறைகளை கொண்டு வர மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குடியிருப்பு
குடியிருப்புகளை வாங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், கட்டுமான நிறுவனம் மற்றும் இடைத்தரகர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு சாதகமான முறையில் ஒப்பந்தம் மேற்கொள்வதால், குறிப்பிட்ட தேதியில் உரிமையாளர்களிடம் வீடுகள் ஒப்படைக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
வீடு ஒப்படைக்கும் தேதியை கட்டுமான நிறுவனம் மாற்றிக் கொண்டே செல்வது வீடு வாங்கியவரின் உரிமையை பறிக்கும் செயல் எனவும் முறையிடப்பட்டது. கட்டுமான நிறுவனங்கள், தங்களது திட்டங்களுக்கு அரசிடம் இருந்து அரசிடம் இருந்து அனைத்து அனுமதிகளையும் பெறாமல் வீடுகளை விற்பனை செய்யத் தொடங்குவதாக அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேலும் குடியிருப்பு வாங்குவதில் நுகர்வோரின் பாதுகாப்பை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கட்டுமான நிறுவனங்கள் ஏராளமான ஒப்பந்தங்களை மேற்கொள்வதால், அதன் நடைமுறைகள் குறித்து அதிக அளவில் பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தனர்.
வீடு வாங்குவோருக்கும், விற்போருக்கும் இடையே சீரான ஒப்பந்தம் இருப்பது அவசியம் என்று தெரிவித்த நீதிபதிகள், நாடு முழுவதும் கட்டிட ஒப்பந்தாரர் மற்றும் வீடு வாங்குவோருக்கு இடையே ஒரே மாதிரியான விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வீடு வாங்குவோருக்கான மாதிரி விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தால், அதனை மாநில அரசுகள் கடைப்பிடிக்க உத்தரவிட முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.