கண்ணாயிரத்துக்கு ஆட்டோக்காரர் தந்த அதிர்ச்சி/ நகைச்சுவை கதை
1 min read
The shock that the autodriver gave to Balan/ comedy story by Thabasukumar
28.12.2021
ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆட்டோக்காரர் நூற்றம்பது ரூபாய்கேட்டதால் கண்ணாயிரம் அதிர்ச்சி அடைந்து வேறு ஆட்டோ பிடிக்க மனைவியுடன் ரோட்டுபகுதிக்கு நடந்தார். பூங்கொடி காலில் பீங்கான் குத்தியிருந்ததால் மெதுவாக நடந்துவந்துகொண்டிருந்தார். ரோட்டு பகுதி வந்ததும் வயதான ஒருத்தர் ஆட்டோவேணுமா என்று கேட்டார். கண்ணாயிரம் உடனே ஆஸ்பத்திரிக்கு போணும்..எவ்வளவு வேணும் என்றார். ஆட்டோக்காரர், ஆஸ்பத்திரிக்கா.. நூறு ரூபாகொடுங்க.. இங்கே நில்லுங்க.. ஆட்டோ ஓட்டிட்டுட்டு வர்ரேன் என்றுசொல்லிவிட்டு சென்றார். கண்ணாயிரத்துக்கு நூற்றம்பது ரூபாய் நூறுரூபாயாக குறைந்தது மகிழ்ச்சி தந்தது. தனதுசாதனையை பெரிதாக நினைத்துகொண்டு பூங்கொடியை பார்த்தார். ஆனால் அவர்பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
ஆட்டோவருகிறதா என்றுபார்த்துகொண்டிருந்தார்.முதியவர் ஆட்டோவை ஓட்டி வந்து நிறுத்தினார். வாகனத்தில் மெதுவாக ஏறுங்கள் என்று சொன்னார். கண்ணாயிரம் ஓடிப்போய் முதலில் ஏறிக்கொண்டார். பூங்கொடி இரண்டாவதாக ஆட்டோவில் ஏறி அவர் அருகில் அமர்ந்தார். ஆட்டோ செல்லலாமா என்று முதியவர் கேட்க கண்ணாயிரம் செல்லலாம் என்றார். உடனே ஆட்டோக்காரர் கைதொழுதபடி, அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு, என்ற திருக்குறள் கடவுள் வாழ்த்து பாடலைபாடிவிட்டு ஆட்டோவை ஸ்டார்ட்செய்தார். ஆட்டோ மெதுவாக புறப்பட்டது.
கண்ணாயிரத்துக்கு அவர் திருக்குறள் பாடியது வியப்பை ஏற்படுத்தியது. ஆட்டோக்காரரைப் பார்த்து நீங்க என்ன படிச்சிருக்கீங்க என்று கேட்டார். அதற்கு அவர் இரண்டாம் வகுப்போடுசரி, அப்புறம் அனுபவபடிப்புதான். ஆட்டோஓட்டகற்றுக்கிட்டேன். ஆட்டோஓட்டுகிறேன் என்றார்.
கண்ணாயிரம் உடனே உங்களுக்கு எத்தனைகுழந்தைகள் என்றுகேட்க ஆட்டோக்காரர் ஆ… ஆ.. என்று சிரித்தார். கண்ணாயிரத்துக்கு அந்த சிரிப்புக்கு அர்த்தம் புரியவில்லை. என்ன பதில்சொல்லாமல்.. சிரிக்கீங்க..என்று கேட்டார். அதற்கு ஆட்டோக்காரர்.. மீண்டும் சிரித்துவிட்டு.. எனக்குதிருமணமே ஆகல..என்றார்.
கண்ணாயிரம், அதான் இந்த சிரிப்பு.. சரி, என்றபடி உங்களுக்கு அப்பா, அம்மா இருக்காங்களா என்று கேட்டார். ஆட்டோக்காரர் மெல்ல யாரும் இல்லை என்றவாறு ஆட்டோவை ஒருவளைவில்திருப்பினார். கண்ணாயிரம்.. யாரும் இல்லைங்கிறீங்க.. சம்பாதித்து என்ன பண்ணுறீங்க என்றார்.
ஆட்டோக்காரர் மெல்ல.. சுனாமி வந்துச்சுல்லா. அப்போது. பெற்றோரை இழந்த நாலுபிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்துவர்ரேன். அவங்க வளர்ந்து பெரியவர்களாகி வேலைக்குபோயிட்டா.. எனக்கு பெரியநிம்மதி என்றார்.
கண்ணாயிரத்துக்கு யாரோ நெஞ்சில்குத்தியது போலிருந்தது. நீங்கவளர்க்கிறபுள்ளங்க என்ன படிக்கிறாங்க..இப்போ.என்று கேட்டார் கண்ணாயிரம்.
அதற்கு அவர், ஏதோ, ஐ. ஏ. எஸ் சுக்கு படிக்கிறோமுன்னு சொல்லுதுங்க..நமக்கென்ன புரியுது, ஆட்டோக்கார மாமான்னு அதுவ வாய்திறந்து கூப்பிடும் போது. அப்படியே மெய்மறந்து போறேன். அதுகளை சீக்கிரம் படிங்க.. மாமாவுக்கு வயசாகுதுன்னு சொல்லுறேன் என்றார்.
கண்ணாயிரத்துக்கு மனசுஏதோசெய்தது. ஆஸ்பத்திரியை ஆட்டோ வந்தடைந்தது. கண்ணாயிரம் ஆட்டோவிலிருந்து இறங்கியவுடன் பூங்கொடியும் மெல்ல இறங்கினார்.
ஆட்டோக்காரர் இறங்கி அவர்களுக்கு வணக்கம்செலுத்தினார். கண்ணாயிரம் அவரிடம்நூற்றம்பது ரூபாய்கொடுத்தார். ஆட்டோக்காரர், மன்னிக்கவும் ஐம்பது ரூபாய் கூடுதலாக தந்துவிட்டீர்கள். நூறுரூபாய் கட்டணத்தைமட்டும் பெற்றுக்கொள்கிறேன் என்றபடி நூறுரூபாயை எடுத்துக்கொண்டு ஐம்பது ரூபாயைதிருப்பிகொடுத்தார்
.
கண்ணாயிரம், சும்மாவைச்சுக்குங்க.. என்றார். ஆட்டோடிரைவர், கட்டணத்துக்குமேல் எதுவும் வேண்டாம். மிக்க நன்றி என்று கூறியபடி ஆட்டோவில் ஏறிசென்றார்.
அவரது ஆட்டோவின் பின்னால் அளவுக்குமீறி ஆசைப்பட்டால் ஆனந்தம் இருக்காது என்று எழுதப்பட்டிருந்தது.
கண்ணாயிரம்.. ஆ.. ஒரு ஆட்டோக்குள்ள இவ்வளவு சங்கதியா என்றபடி அந்த ஆட்டோவையேபார்த்து கொண்டிருந்தார்.
பூங்கொடி. வாங்க.. கால்வலிக்குது ஆஸ்பத்திரிக்குள் போவோம் என்று அவசரப்படுத்தினார். கண்ணாயிரம் ஆட்டோக்காரரை நினைத்தபடி ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார்.
- வே. தபசுக்குமார். புதுவை.