June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடியில் நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொலை செய்த சிறுமி

1 min read

The girl who killed her mother along with friends in Thoothukudi

27.3.3022
ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்த தாயை, நண்பர்களுடன் சேர்ந்து சிறுமி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வண்ணார் 2-வது தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முனியலட்சுமி. இவர்களுக்கு 2 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக முனியலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். முனியலட்சுமி மாநகராட்சில் தற்காலிக தூய்மை பணியாள ராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் முனியலட்சுமி நேற்று நள்ளிரவில் வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அவரது குழந்தைகள் கதறி அழுதனர்.

அவர்களது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முனியலட்சுமி உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

17 வயது மகள்

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் முனியலட்சுமியின் 17 வயது மகள் முன்னுக்கு பின் முரணாக போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

முனியலட்சுமியின் 17 வயது மகள் கல்லூரியில் படித்தபோது முள்ளக்காடு ராஜீவ் நகரை சேர்ந்த கண்ணன் (20), முத்தையாபுரம் தோப்புத்தெருவை சேர்ந்த தங்ககுமார் (22) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதில் தங்ககுமாருக்கும், 17 வயது சிறுமிக்கும் பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். மேலும் சக ஆண் நண்பர்களுடனும் சிறுமி அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார்.

கண்டிப்பு

இதனை முனியலட்சுமி கண்டித்துள்ளார். நேற்று நள்ளிரவு மீண்டும் முனியலட்சுமி, ஆண் நண்பர்களுடன் பேச கூடாது என்று சிறுமியிடம் கண்டிப்பாக கூறி உள்ளார். இந்த தகவலை சிறுமி தனது நண்பர் கண்ணன் மற்றும் காதலன் தங்ககுமார் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கண்ணன், தங்ககுமார் ஆகியோர் தங்களது மற்றொரு நண்பரையும் அழைத்து கொண்டு முனியலட்சுமியின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு சமையல் செய்து கொண்டிருந்த முனியலட்சுமியை சிறுமி, நண்பர்கள் ஆகிய 4 பேரும் சேர்ந்து கீழே தள்ளிவிட்டு அங்கு கிடந்த துணியால் கழுத்தை நெரித்துள்ளனர்.

மேலும் சமையல் அறையில் இருந்த கத்தியால் முனியலட்சுமியின் உடலிலும் கீறி உள்ளனர். இதில் முனியலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

பின்னர் சிறுமியின் நண்பர்கள் 3 பேரும் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். இந்த தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் கண்ணனை கைது செய்தனர். தலைமறைவான தங்ககுமார் மற்றும் அவரது நண்பரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *