கண்ணாயிரத்தை அடித்த இறைச்சிகடைக்காரர்/ நகைச்சுவை கதை
1 min read
The butcher who beat Kannayiram/Stoy by Thabhasukumar
20.5.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்வதற்கு தீவிர ஏற்பாடுகளில் இறங்கினார். தன் மனைவி அயர்ன்பண்ணக்கொடுத்த சேலை சட்டையை வாங்க சென்றார். மஞ்சள் பை தங்கள் பை என்பதால் கடைபையன் கொடுத்த பையை வாங்கிக்கொண்டு வீட்டுக்குவந்தார்.வீட்டுக்குவந்தபிறகு பையை திறந்துபார்த்த அவரது மனைவி பையில் சேலை சட்டைக்கு பதிலாக சுடிதார் மற்றும் கவுன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சுடிதார் கவுனை கொடுத்துவிட்டு மஞ்சசேலை மஞ்ச சட்டை பச்சை சேலை பச்சை சட்டை வாங்கிட்டுவாங்க என்று கண்ணாயிரத்தை அவரது மனைவி பூங்கொடிவிரட்டினார். கண்ணாயிரம் சுடிதார் கவுன் இருந்த மஞ்சள்பையை எடுத்துக்கொண்டு அயர்ன்பண்ணுகிறவர் கடைக்கு ஓடினார்.
ஆனால் இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிவிட்டதால் கடை பூட்டிக்கிடந்தது.பக்கத்து கடைக்காரரிடம் விசாரித்தபோது இப்போதான் கடையை பூட்டிவிட்டு சென்றார்கள். நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கடை திறக்காது என்று சொன்னார்கள். கண்ணாயிரம் திடுக்கிட்டார். நாளை காலை குற்றாலம் புறப்பட்டு செல்லவேண்டுமே…சேலை சட்டை வாங்காமல் எப்படி வீட்டுக்கு செல்வது என்று கண்ணாயிரம் விழிபிதுங்கி நின்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் இருவர் வேகமாக வந்தனர். மோட்டார்சைக்கிள் ஓட்டியவர் பின்னால் இருந்தவரை திட்டிக்கொண்டேவந்தார். ஏய் சுடிதார் கவுன்மட்டும் கிடைக்கல …உன்னை ஒருவழிபண்ணிடுவன் என்று மிரட்டினார். மோட்டார்சைக்கிளின் பின்னால் அயர்ன்பண்ணுகிற கடைக்காரர் இருந்தார். சின்னப்பையன் ஏதோ மாத்திவச்சிட்டான்..மஞ்சபைகள் அதிகம் இருந்ததால ஏதோ மாத்திப்புட்டான் போலிருக்கு…நீங்க கவலைப்படாதீங்க…ஏப்படியும் சுடிதாரு கவுனை பிடிச்சிடலாம்…என்றபடி மோட்டார்சைக்கிளிலில் இருந்து இறங்கினார்.
மோட்டார்சைக்கிள் ஓட்டிவந்தவர் கடை முன் மஞ்சள்பையுடன் நின்ற கண்ணாயிரத்தை முறைத்துபார்த்தார். யாருய்யா நீ என்று கண்ணாயிரத்தைப்பார்த்து கேட்டார். கண்ணாயிரம் நடுங்கியபடி நான் கண்ணாயிரமுங்க…பை …இல்ல..சேலை மாறிப்போச்சுங்க…அதைவாங்க வந்தேங்க என்றார்.
மோட்டார்சைக்கிளில் வந்தவர் மீசையை தடவியபடி …கொடு அந்த பையை என்று பறித்தவர்..அதில் சுடிதார் மற்றும் கவுன் இருப்பதை பார்த்து…ஏண்டா..நீதான் இந்த சுடிதார் கவுனை தள்ளிட்டுபோனியா..உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று சொல்லியவாறு கண்ணாயிரம் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தார்.
கண்ணாயிரம் பையை மாறிப்போச்சு என்று சொன்னதை அவர் கேட்கவில்லை. தான் மஞ்சள்பையில் கொண்டுவந்த சேலை சட்டையை அயர்ன் பண்ணுகிறவரிடம் வீசிவிட்டு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார்.
கண்ணாயிரம் வலிதாங்காமல்…அயர்ன்பண்ணுகிறவரிடம் …யாருய்யா..இவர்..என்ன அடிக்கிறாரு..நான் இப்ப சிலம்பம் படிச்சிக்கிட்டு இருக்கேன்..படிச்சு முடிச்சிட்டேன்னா..அடி விளாசிடுவேன்…என்று சொல்ல அயர்ன்பண்ணுகிறவர்…ம்..சத்தம்போடாதீங்க…திருப்பிவந்து அடிப்பாரு…மெதுவா என்று எச்சரித்தார்.
நம்ம பகுதிக்கு புதுசா வந்த இறைச்சிக்கடைக்காரர்…..அவரது சம்சாரமுன்னு சொல்லிக்கிட்டு ஒரு பொண்ணை கூட்டிட்டு அலையுறாரு…குற்றாலத்துக்கு போறாராம்..அதுக்குத்தான் சுடிதார் கவுனை அயர்ன்பண்ண வந்தாரு..நல்லவேளை…நீங்க கொண்டுவந்தீங்க..இல்லன்னா என்னை அடிபின்னியிருப்பாரு..நான் தப்பிச்சேன்…சரி…இறைச்சிகடைக்காரர் போட்டுட்டுபோன சேலை சட்டை உங்களுடையதுதானான்னு பாருங்க என்று கொடுத்தார்.
கண்ணாயிரம் அதை வாங்கிப்பார்த்துவிட்டு…ஆ…இதுதான் ..என்னுடைய சேலை சட்டை ..கொடுங்க..என்றுவாங்கி தன் மஞ்சள்பையில் போட்டுக்கொண்டார்.
அப்பாட தப்பிச்சோம் என்றபடி கண்ணாயிரம் சேலை சட்டைகளுடன் வீட்டுக்கு புறப்பட்டார். கண்ணாயிரம் வேகமாக வீட்டுக்கு சென்றார். என்ன…இந்த இறைச்சிகடைக்காரர் என்ன ஏதுன்னு கேட்காம அடிக்கிறாரு..தினம் இறைச்சி சாப்பிடுவார் போல…என்ன அடி..நான் என்பதாலே தாங்கினேன்…மற்ற ஆட்களுன்னா சுருண்டு விழுந்திருப்பாங்க…என்று புலம்பியபடி வீட்டை அடைந்தார். அவரைப்பார்த்ததும்..என்னங்க..சேலையைவாங்கினளா இல்லையா…ஒருவேலையையும் உருப்படியாய்செய்யமாட்டியளே என்ற கத்த கண்ணாயிரம் சேலை சட்டை இருந்த மஞ்சள்பையை பூங்கொடியிடம் நீட்டினார். அவர் அதைவாங்கி பார்த்துவிட்டு என்னங்க சேலை அயர்ன்பண்ணுனமாதிரியே தெரியல..பிரிச்சுப்பார்த்தமாதிரி இருக்கு…என்க..கண்ணாயிரம் மெல்ல…சேலைகிடைச்சதே பெரியவிசியம்..ஏன்ய்யா பிரிச்சிப்பாத்தன்னு கேட்டா..என்ன பிரிச்சிமேஞ்சிருப்பான்..இப்போ கன்னத்தோட தப்பிச்சு…என்று தனக்குத்தானே முணங்கியபடி..உள்ளே போனார்.
பூங்கொடி குற்றாலம் டூரிலே குறியா இருந்தார். ஏங்க..காலையிலே எட்டு மணிக்கெல்லாம் பஸ்வந்திருமாம்..சாப்பாடு நம்ம சொந்த செலவிலே சாப்பிட்டுக்கிடணுமாம்..குற்றாலத்திலே ரூம்போட்டிருக்காங்களாம்..அங்கே தங்கிக்கிடலாம்…என்று பூங்கொடி அடுக்கிக்கொண்டே போனார்.
என்னங்க..நான் சொல்லுற எதுக்கும் தலையை ஆட்டாம…இருக்கிய…உங்க..துணிகளையெல்லாம் எடுத்து வையுங்க…காலையிலே எழுந்து அதைக்காணம் இதைக்காணம் என்று சொல்லக்கூடாது..என்றார்.
கண்ணாயிரம் சரி…சரி..என்று சொன்னார். ஆனால் இறைச்சிக்கடைக்காரரும் குற்றாலம் வந்துவிடுவாரோ என்ற பயம் அவர் வயத்தை கலக்கியது…அப்படியே போய் கட்டிலில் படுத்தார். ஏங்க…சாப்பிடலய்யா என்று பூங்கொடி கேட்க…கண்ணாயிரம் பசி இல்லை காலலயிலே சாப்பிடுறேன் என்று இழுத்து மூடி படுத்துக்கொணாடார். இறைச்சிகடைக்காரர் அரிவாளுடன் வந்து போனார்.(தொடரும்.)
-வே.தபசுக்குமார்.புதுவை.