கோவில்பட்டியில் இளம்பெண் கொலை-உறவினர்கள் சாலை மறியல்
1 min read
Teen murder-relatives roadblock at Kovilpatti
15.6.2022-
கோவில்பட்டியில் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியான அவரது கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் பிணம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா (24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜின் வீடு கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டு இருந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுஜித், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கார்த்திகா அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
மேலும் அவரது உடலில் காயங்களும் இருந்தது. இதையடுத்து போலீசார், கார்த்திகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் தங்கராஜ், கார்த்திகாவை அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என்றும், இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகி இருக்கலாம் என்று தெரிகிறது. தங்கராஜ் தனது குழந்தைகளுடன் தலைமறைவாகி உள்ளதால், அவர் பிடிபட்ட பின்னரே கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தூத்துக்குடி தாளமுத்துநகரில் உள்ள காா்த்திகாவின் பெற்றோர் பொன்னுச்சாமி, லதா ஆகியோர் கோவில்பட்டிக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து லதா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராஜை வலைவீசி தேடிவருகிறார்கள்.
மறியல்
இதற்கிடையே கார்த்திகாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள், தங்கராஜை உடனடியாக கைது செய்யக்கோரி கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு புது ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கொலையாளியை கைது செய்ய தனிப்படை அமைத்து உள்ளோம். விரைவில் அவரை கைது செய்துவிடுேவாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.