கண்ணாயிரத்தை குழப்பிய பத்துரூபாய் காயின்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min readTen rupees coin that confused Kannayiram/ comedy story by Tabasukumar
31.7.2022
கண்ணாயிரம் குற்றாலம் சுற்றுலா செல்லும் போது நெய்வேலிக்கு பெயர்வந்தது எப்படி என்று போட்டிவைக்க சுடிதார் சுதா நெய் அதிகமாக இருந்ததால் நெய்வேலி என்று பெயர்வந்ததாக சொல்ல பூங்கொடிக்கு பயந்து கண்ணாயிரம் பரிசு கொடுக்க மறுக்க..சுடிதார் சுதாவுக்கு ஆதரவாக இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணின் ஹைஹீல்ஸ் செருப்பை எடுத்துவீச ஒரே ரணகளமாகிவிட்டது. இந்த நிலையில் நிலைமையை சமாளிக்க துபாய்க்காரர் எழுந்து பரிசு தொகை அறிவித்த நானே பரிசு தொகை கொடுக்கிறேன் என்று சுடிதார்சுதாவுக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு கைகுலுக்க வாலிபர்களும் தங்கள் பங்குக்கு ஐநூறு ரூபாய் பரிசு கொடுத்துவிட்டு கைகுலுக்க கண்ணாயிரம்விழித்தார். பரிசுவாங்கியதில் மகிழ்ச்சி அடைந்த சுடிதார்சுதா.. இந்த பரிசுக்கெல்லாம் காரணம் கண்ணாயிரமும் துபாய்க்காரரும்தான் என்று நினைத்து கண்ணாயிரத்தின் கையை குலுக்க அவரைவிரட்டி சென்றார்.
இதைபார்த்த கண்ணாயிரம்..அய்யோ ஆபத்து என்றபடி பயில்வானை நோக்கி ஓட சுடிதார்சுதாவும் பின்தொடர்ந்து சென்றார். கண்ணாயிரம் பயில்வான் அருகில்போய் அமர்ந்துகொண்டு இரண்டு கைகளையும் மடக்கி வைத்துகொள்ள..சுடிதார் சுதா அவரிடம் கைகொடுங்க…கைகொடுங்க என்க..கண்ணாயிரம் கதிகலங்கிபோய்..வேண்டாம்..வேண்டாம்..நான் கையை காட்டமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார்.
அப்போது ஒரு முதியவர்…ஏம்பா..கண்ணாயிரந்தான் வேண்டாம் என்கிறாரே பிறகு எதுக்கு அவர்கைகுலுக்க போற…இன்னா…என்கை இருக்கு..கண்ணாயிரம் கையை குலுக்கினாலும் என்கையை குலுக்கினாலும் ஒண்ணுதான்..என்றபடி எழுந்து நின்றார்.
இதில் கோபம் அடைந்த சுடிதார்சுதா..ஏங்க..கண்ணாயிரம் பத்தாயிரம் கடன் கொடுக்கணும்…நீங்க கொடுப்பியளா..என்று கேட்க முதியவர் அப்படியே உட்கார்ந்துவிட்டார்.
அடுத்து கண்ணாயிரத்தை சுடிதார் சுதா பார்க்க…பயில்வான்சார் என்னை காப்பாற்றுங்க என்று கண்ணாயிரம் கெஞ்ச.. பயில்வானும் சரிம்மா..கண்ணாயிரம் ரொம்ப பயப்படுகிறார் விட்டுரு என்று சொல்ல சுடிதார்சுதா போகமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்க…இதை பார்த்து பற்களை கடித்து கொண்டிருந்த பூங்கொடி எழுந்து ஆ…எங்கிடி வந்து கலாட்டா பண்ணுற என்று சுடிதார்சுதா கன்னத்தில் பளார் என்று அடிக்க பாய அவள் திரும்பிக்கொள்ள கண்ணாயிரம் கன்னத்தில் பளார் என்று அறைவிழுந்தது.
அவர் அம்மாடி…கன்னம் வீங்கிபோச்சு..என்று அலற சுடிதார்சுதா இங்கிருந்தால் ஆபத்து என்று அந்த இடத்தைவிட்டு நகர்ந்து துபாய்க்காரரை நோக்கி நடந்தாள்…
சார்..உங்களுக்கு கைகொடுக்கணுமுன்னு கையை நீட்ட அவர் மனைவி முறைக்க..துபாய்க்காரர் அரண்டுபோய் சுடிதார் சுதாவை பார்த்து ..ஆளைவிடும்மா என்று கையெடுத்து கும்பிட சுடிதார் சுதா குலுங்கி குலுங்கி தனது சீட்டுக்கு போனாள்.
கண்ணாயிரம் கன்னத்தை தடவியபடி..பூங்கொடியை பார்த்து…ஏய் என்னை ஏன் அடிச்ச..என் கன்னம் வீங்கி போச்சு என்று கன்னத்தை தடவ..பூங்கொடியோ…அதை பற்றி கவலைப்படாமல்…ம்.. அவா கையை குலுக்கினா.. இவா காலை குலுக்கினான்னு வந்திங்க…தொலைச்சிடுவேன் தொலைச்சி என்று எச்சரித்துவிட்டு தன் சீட்டில்போய் அமர்ந்தார்..
கண்ணாயிரம்..அவா கையை குலுக்கினா அதுக்கு நானா பலி…ம்..அநியாயம்..அநியாயம் என்று புலம்ப சுடிதார் சுதா தன் இருக்கையில் இருந்தபடி கண்ணாயிரத்தைபார்த்து…கைகுலுக்குவது போல் சைகை செய்ய கண்ணாயிரம் அதை பார்க்காததுபோல் கையால் கண்களை பொத்திக்கொண்டார்.
பயில்வான் அவரிடம்…என் இடப்பக்கத்திலேவந்து உட்காருங்க..யாரும் வரமாட்டாங்க என்று சொல்ல கண்ணாயிரம் இடம்மாறி உட்கார்ந்தார். அப்பாட…ஜன்னலோரம் உட்கார்ந்தா அந்த சுகமே தனி..காற்று எப்படி ஜிலு ஜிலுன்னு வருது..என்று மகிழ்ச்சியில் ஆடினார். பயில்வான் மெல்ல அவரிடம்..மெதுவா..மெதுவா..ஆடாதீங்க…என்று அதட்டினார். சரி என்றபடி கண்ணாயிரம் இயற்கை காட்சிகளை ரசித்தபடி வந்தார்..
பஸ் விருத்தாசலத்தை வந்தடைந்தது. விருத்தாசலம் என்றபெயர் பலகையை பார்த்ததும் இந்த ஊருக்கு எப்படி பெயர்வந்திருக்கும் என்று யோசித்தவர் மெல்ல பயில்வான் தோளை தட்டி..என்ன ஊர் பெயரை விருத்தாசலமுன்னு வச்சிருக்காங்க…அது எப்படி வந்திருக்கும் என்று கேட்க பயில்வான் முறைத்துபார்த்தபடி..ஏய்..இப்பதான் ஒரு கன்னத்திலே அடிவாங்கி இருக்கே..அடுத்த கன்னத்திலே வாங்கபோறீயா…அமைதியா இரு என்று சொல்ல கண்ணாயிரம் அமைதியானார்.
ஆனாலும் அவருக்கு சிந்தனை சும்மா இருக்கவிடவில்லை. நமக்குன்னு ஏன் இந்த சந்தேகமெல்லாம் வருது..ச்சே..என்று மனம் நொந்தபடி இருந்தார்.
பஸ் மின்னல்வேகத்தில் வேகமாக செல்ல கண்ணாயிரம் என்ன இவ்வளவு வேகமா போறாரு…என்னா காத்தடிக்குது..ச்சே..காத்து காலமாச்சுசல்லா…தூசியா அள்ளிக்கொட்டுது…கண் எல்லாம் சிவந்துபோச்சு…ஜன்னலோரம் சீட்டுல இருந்தது தப்பாபோச்சு…இடமாறினா சரியா இருக்குமா…தெரியலலயே என்று எண்ணினார்.
கண்ணாடி கை கோல் எல்லாம் பூங்கொடி கிட்டதான் இருக்கு..அங்கேபோய் கண்ணாடி வாங்கிட்டு வரலாமா என்று எண்ணியவர் பூங்கொடிக்கு பயந்து…அங்கேயே இருந்துவிட்டார்.
பயில்வான் மெதுவாக..கண்ணாயிரம்..விரைவில் திருச்சி வந்திடும்.. அங்கே ஓட்டலில் டிபன்சாப்பிட்டு மீண்டும் கிளம்பலாம் என்று சொல்ல கண்ணாயிரம் முகத்தில் சின்னபுன்னகை எட்டிப்பார்த்தது..மாலை நேரம் மயங்கி இரவு எட்டிப்பார்க்கத் தொடங்கியது.
கண்ணாயிரம் டிபன்..டிபன்…சுவையா சாப்பிடணும்..பிரியாணி பக்கமே போகக்கூடாது..என்று நினைத்துகொண்டார். பஸ் சீறிப்பாய்ந்து செல்ல கண்ணாயிரம் ஆ..ஆ..சீக்கிரம் திருச்சி வந்திடும்…திருச்சி வந்திடும் என்று பஸ்சில் வெளியே ஏட்டிப்பார்த்தபடி இருந்தார்.
பஸ் பலதிருப்பங்களை தாண்டி திருச்சி பஸ்நிலையத்தைவந்டைந்தது. டிரைவர் பஸ்சை வேகமாக வந்து நிறுத்தினார். பயில்வான் எழுந்து ..பஸ் கொஞ்ச நேரம் நிற்கும்..எல்லோரும் டிபன் சாப்பிட்டுட்டு வாங்க என்று சொல்லவும் எல்லோரும் பஸ்சைவிட்டு இறங்க தயாரானார்கள். கண்ணாயிரமும்…வேகமாக இறங்க முயல…பூங்கொடி ஏங்க மெதுவா இறங்குங்க…ஓட்டலில்போய் கண்டதையும் சாப்பிடாதீங்க…என்று எச்சரித்தார்.
கண்ணாயிரம்.. உடனே ம்…நான் முதலிலே பாத்ரூம்போயிட்டு வந்திடுறேன்…அப்புறம் சாப்பிட்டா பிரச்சினை இருக்காது என்று சொன்னார்.
பூங்கொடி…சரி…பாத்ரூம் போயிட்டு சீக்கிரம் வாங்க என்க கண்ணாயிரம் பஸ்சைவிட்டு வேகமாக இறங்கி பாத்ரூமை நோக்கிவிரைந்தார். ஆண்கள் கட்டண கழிப்பறை முன் சென்ற கண்ணாயிரம் அங்கே கட்டணம் வசூலிக்கின்றவருக்கு ஓரு வணக்கம் போட்டார். அவரோ…யோவ் வெறும் வணக்கம் போட்டாமட்டும் உள்ளே போயிடலாமுன்னு நினைக்கியா…அது முடியாது.ஐந்து ரூபாய் கொடு..என்று அதட்ட கண்ணாயிரம் தன் சட்டைப் பையிலிருந்து மஞ்சள் நிற பத்துரூபாய் காயினை எடுத்து அவரிடம் நீட்ட அவர் யோவ்..என்னய்யா…எந்த ஊருய்யா உனக்கு….இந்த பத்து ரூபாய் காயின் செல்லாதுன்னு தெரியாதா..என்று அதட்டினார்.
அதை கேட்ட கண்ணாயிரம் என்ன செல்லாதா..பண்டுருட்டியில் செல்லும் திருச்சியில் செல்லாதா என்னய்யா நியாயம் என்று சத்தம் போட்டார். அதற்கு அவர் யோவ்…இந்த காயினை யாரும் வாங்கமாட்டேங்கய்யா..உங்கிட்ட ஏவனோ தள்ளிவிட்டுட்டான்..நீ தெரியாம வாங்கிக்கிட்ட…சரி..ஐந்து ரூபாய் இருந்தாஎடு..இல்லன்னா ஓடு என்று விரட்ட.. கண்ணாயிரம் கண்களை கசக்கியபடி எல்லோரும் என்னத்தான் ஏமாத்துறாங்க..ரூபாய் நோட்டு கிழிஞ்சிருந்தா செல்லாதூங்காங்க…பத்து ரூபா காயின் நல்லாத்தான இருக்கு..நல்லா மஞ்சளா பளபளன்னுதான் இருக்கு…பிறகு ஏன் செல்லாதுங்காங்க என்றபடி சோகமாக பஸ்சை நோக்கி நடந்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.