சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம்
1 min read
Aadithapasu Derotam at Sankaranarayanasamy Temple in Sankarankovi
8.8.2022
தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தலங்களில் சங்கரன்கோவிலில் சங்கரநாராயண கோவிலும் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராட நன்னாளில் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா கொடியேற்றம் கடந்த ஜூலை 31-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான இன்று காலை நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் திருநாளான நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மாலை 5.30 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தவசு காட்சி கொடுக்கிறார். இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார். 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா நடைபெற உள்ளதால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலும் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் ஏ.டி.எஸ்.பி சார்லஸ் கலைமணி, டி.எஸ்.பி. சுதீர் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேரோட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.