May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

குடையை விரட்டிசென்ற கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram chased away the umbrella/ comedy story ByTabasukumar

24/8/2022
கண்ணாயிரம் சுற்றுலா பஸ்சில் பாட்டுப்போட்டி நடந்தபோது ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார். சீட்டு குலுக்கலில் அவர் பெயர்வந்தபோது நான் என்று தொடங்கும் பாடலை அவர் பாடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.என்ன பாட்டுபாடுவது என்று தெரியாமல் கண்ணாயிரம் விழித்தபோது அவரை முட்டாள் முட்டாள் என்று அவரது மனைவி பூங்கொடி திட்டினார். ஆனால் கண்ணாயிரமோ முட்டாள் என்று வரும் பாடலை பூங்கொடி பாடசொல்வதாக நினைத்து நான் ஒரு முட்டாளுங்க..என்ற பாடலை ரசித்து பாட மற்றவர்களோ கண்ணாயிரம் முட்டாளுன்னு பாட்டுமூலமே சொல்லிட்டாரு என்று சொல்லி சிரிக்க இதை அறியாமல் கண்ணாயிரம் எல்லோரும் தன்பாடலை ரசிப்பதாக நினைத்து ஆடிக்கொண்டே பாடினார்.
இதை பொறுக்க முடியாத பூங்கொடி நிறுத்துங்க என்று கத்தினார்.
அவ்வளவுதான் கண்ணாயிரம் ஆடிப்போனார். ஏன்..பூங்கொடி..நான் ஒரு முட்டாளுங்க நல்லாத்தானே பாடினேன்…ஏன் பாட்டை நிறுத்தச்சொன்ன என்று கேட்க பூங்கொடி கோபத்தில் மக்கு…மக்கு என்று திட்டினார். அதை கேட்டதும் கண்ணாயிரம் கோபமாக..என்ன பூங்கொடி என்ன திட்டுற நான் நல்லாத்தானே பாடுனேன் என்று சொல்ல பூங்கொடி ஆத்திரத்தில்..என்ன நல்லாபாடுனிய…நான் ஒரு முட்டாளுன்னு நல்லாவாங்க இருக்கு.. வேறபாட்டு பாடியிருக்கலாமுல்ல என்று கண்டித்தார்.
உடனே கண்ணாயிரம்..ஏன் பூங்கொடி..முட்டாள் முட்டாள் அப்படின்னு பாடும்படி நீதானே சொன்ன..இப்பம் திட்டுற என்று கேட்டார். அதை கேட்ட பூங்கொடி தலையில் அடித்துகொண்டு..நீங்க பாட்டுபாடாம விழிச்சிக்கிட்டு நின்னதாலே முட்டாள் முட்டாள் அப்படின்னு ஏசினேன். நீங்க அதை தப்பா நினைச்சுக்கிட்டிங்க.. நீங்க வீட்டிலே எப்பவும் நான் உங்க வீட்டுபிள்ளை. இது ஊரறிந்த உண்மை அப்படின்னு பாடுவீங்களே…அந்த பாட்டை பாடியிருக்கலாமுல்லா என்று சொல்ல கண்ணாயிரம் ஆமா..அது நல்ல பாட்டுல்லா..அதை பாடவா..என்றபடி பாடதொடங்கினார்.

உடனே வாலிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒரு ஆளு ஒரு பாடல் தான்பாடமுடியும்..உங்களுக்குரிய வாய்ப்பு முடிந்துவிட்டது என்று சொன்னார்கள். கண்ணாயிரம் கேட்காமல் பாடமுயன்றபோது எல்லோரும் எதிர்த்து கோஷமிட வேறுவழியில்லாமல் கண்ணாயிரம் இருக்கையில் அமர்ந்தார்.
பயில்வான் அனைத்தையும் வேடிக்கைபார்த்தபடி அமர்ந்திருந்தார்.
அடுத்து ஒரு சீட்டை எடுக்க அதில் துபாய்காரர் பெயர் இருக்கு யா என்று தொடங்கும் பாடலைபாடும்படி குறிப்பிட்டிருந்தது. துபாய்க்காரர் கம்பீரமாக எழுந்து யாருக்காக…இது யாருக்காக..
இந்த மாளிகை..வசந்த மாளிகை..
காதல் ஓவியம் கலைந்த மாளிகை…என்றபாடலை உச்சதாணியில் பாடினார். மரணம் என்னும் தூது வந்தது..அது மங்கை என்னும் வடிவில்வந்தது..
சொர்க்கமாக நான் நினைத்தது
அது நரகமாக மாறிவிட்டது..
யாருக்காக…யாருக்காக..யாருக்காக…என்று உணர்ச்சிபொங்க பாடியவர் நெஞ்சை பிடித்து கொண்டு அப்படியே உட்கார்ந்தார்.
அதை பார்த்த அவர் மனைவி..உங்களுக்கு இது தேவையா..சிவாஜிகணேசன் மாதிரி நீங்க பாடமுடியுமா..என்று நெஞ்சை தடவிவிட்டார். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்..அதான் அப்படி ஆயிட்டு என்று சொன்னார்.

யாருக்காக என்ற பாடலை உணர்ச்சிபொங்க பாடிய துபாய்க்காரருக்கு அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
கண்ணாயிரம் எழுந்துவந்து..ஏன் இப்படி..பாடுறீய..என்ன மாதிரி சாதாரணபாட்டு பாடவேண்டியதுதானே…சினிமாவில் வர்ரமாதிரியே பாடினீங்க..நானே பயந்துட்டேன்..இனி அப்படிபாடாதீங்கன்னு அறிவுரை கூறிவிட்டு சென்றார். அடுத்ததாக..வந்த சீட்டில் பயில்வான் பெயர்வர …மை என்று தொடங்கும் பாடலை பாடும்படி சொன்னார்கள்.
பயில்வான் எழுந்து மையில் தொடங்கும் பாடலா…என்னது என்று யோசித்தார். கண்ணாயிரமும் என்னபாடல் என்று புரியாமல் விழித்தபோது பயில்வான் உரத்த குரலில்..மைநேமிஸ் பில்லா…வாழ்க்கை இல்லா…என்ற பாடலை பாடினார்.
மை நைமிஸ் என்பது இங்கிலீசுல்லா…பயில்வான் எப்படிபாடுறாரு…அவருக்கு ஏத்தபாட்டுதான் என்று கண்ணாயிரம் ரசித்தபடி இருந்தார்.
பயில்வான் அரைகுறையாக பாடிவிட்டு இதுக்குமேல பாடமுடியாது என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். அடுத்ததாக எடுத்த சீட்டில் சுடிதார்சுதா பெயர்வந்தது. ம என்று தொடங்கும் பாடலைபாடும்படி குறிப்பிட்டனர். சுடிதார் சுதா எழுந்துபா
ட முற்பட்டபோது வாலிபர்கள்…மல்லிகை கை என் மன்னன் மயங்கும் பாடுங்க..என்று குரல் எழுப்பினர். சிலர் மலரே குறிஞ்சி மலரே என்று பாட சொன்னார்கள். கண்ணாயிரமும் மயக்கம் என்ன என்றபாடலை பாடலாம் என்று எழுந்து சொல்லிவிட்டு பதுங்கிகொண்டார். ஆனால் சுடிதார் சுதா அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு…மணப்பாறைமாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுதுபோடு செல்லக்கண்ணு என்றபாடலை பாடினார்.
யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. அனைவரும் தாளம்போட்டு ரசித்தனர். கண்ணாயிரமும்..ஆஹா..அருமையானபாட்டு..மணப்பாறைக்கு போயிட்டு இருக்கோம். அதுக்கேற்ற பாட்டுவந்திருக்கு..என்று மனசுக்குள் நினைத்துகொண்டார்.
அப்போது முதியவர் ஒருவர் எழுந்து ஏம்பா.. மணப்பாறை பாட்டேவந்திட்டு…மணப்பாறை எப்போதுவரும் என்று டிரைவரிடம் கேட்க…டிரைவரோ..ஏங்க..திருச்சியிலிருந்து மணப்பாறை 47 கிலோ மீட்டர்..இன்னும் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கு…சீக்கிரம் போயிடலாம் என்றார். ஆ..மணப்பாறைவரப்போகுது என்று எல்லோரும் உற்சாகமானார்கள். கண்ணாயிரமும்..நாமும் பஸ்சைவிட்டு இறங்கி முறுக்குவாங்கணும் மணப்பாறை முறுக்கை கடக்கு முடக்குன்னு தின்பேன் என்று மனதுக்குள் உற்சாகமாக சொல்லிக்கொண்டார்.
பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் பஸ் மணப்பாறை பஸ்நிலையத்தை நெருங்கியபோது இடிமின்னலூடன் மழை சோ என்று கொட்டியது. பஸ்நிலலயம் அருகே பஸ்வந்து நின்றது.மழை பெய்து கொண்டிருந்ததால் பஸ்சைவிட்டு இறங்க எல்லோரும் யோசித்தபடி இருக்க..கண்ணாயிரம்..ம் மழை இப்படி பெய்து..எப்படிநான் கீழே இறங்குவேன்..என்று கண்களை கசக்கினார். வாலிபர்கள் மழையை பொருட்படுத்தாமல் கீழே இறங்கினார்கள். சுடிதார் சுதா கீழே இறங்க முயற்சிக்க..வாலிபர்கள் அவளிடம்..வேண்டாம்..வேண்டாம்..உங்களுக்கு சளிபிடிச்சிக்கிடும்..நீங்க பஸ்சிலே இருங்க..நாங்க வாங்கிட்டுவர்ரோம் என்றபடி குடைபிடித்தபடி சென்றனர்.
கண்ணாயிரம் உடனே பூங்கொடியிடம்..அந்த குடையை எடு என்க..பூங்கொடி பைக்குள் மடக்கிவைத்திருந்த குடையை எடுத்து கொடுத்தார். ம்பார்த்து…குடையை மெதுவா விரிங்க…முரட்டுத்தனமா விரிக்காதீங்க…என்று எச்சரிக்கைவிடுத்தார்.
கண்ணாயிரம் எதையும் காதில்போட்டுக்கொள்ளாமல் தோளில் ஒரு துண்டை எடுத்துபோட்டுக் கொண்டார். பூங்கொடியிடம் குடையைவாங்கிக்கொண்டு போருக்குபோவது போல் முறுக்கு வாங்க நடந்து சென்றார் .பஸ்சைவிட்டு இறங்கியதும்.. கையிலிருந்த குடையை விரிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.என்ன இது..விரிச்சி ரொம்ப நாளானாதலா…சிக்கிக்கிட்டு..விரிய மாட்டேங்குது..என்ன செய்ய..வேகமா விரிக்காதீங்கன்னு பூங்கொடி வேற சொன்னா..நாம என்ன செய்ய..மெதுவா முயற்சி பண்ணிபார்ப்போம் என்றபடி குடையை மெல்ல மெல்ல விரிக்க முயன்றார்.
குடை பாதிவிரிந்துவிட்டு மீண்டும் மூடிக்கொண்டது. என்னது இப்படி பண்ணுது…விரியவும்மாட்டேங்குது..மடங்கவும் மாட்டேங்குது..இந்த கண்ணாயிரத்தை என்ன நினைச்சிச்கிட்டு இருக்கு.. குடையை விரிச்சிதாங்கன்னு வேறுயாருக்கிட்டேயும் கேட்க முடியுமா..நம்ம மானம் மரியாதை என்ன ஆவது என்று புலம்பினார். மழை கொட்டிக்கொண்டே இருந்தது.என்ன செய்ய..குடையை விரிக்கமுடியலன்னு பூங்கொடிக்கிட்டபோய் கொடுக்க முடியுமா..ஏசுவா..நாம இன்னொருதரம் முயற்சிபண்ணிபார்ப்போம் என்றபடி கண்ணாயிரம் வேகமாக குடையை விரித்தார்.
குடை விரிந்த அந்த நேரத்தில் வேகமாக காற்றடிக்க..குடை கண்ணாயிரம் கையைவிட்டு பறந்தது.கண்ணாயிரம் என் குடை என் குடை என்று குடைக்கு பின்னாலே ஓடினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.