April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

போலீஸ் விசாரணையில் சிக்கிய கண்ணாயிரம்/நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram caught in the police investigation/ comedy story/ Tapasukumar

31.8.2022
கண்ணாயிரம் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றபோது மணக்கும் மணப்பாறை முறுக்கு சாப்பிடுவதற்காக பஸ் திருச்சியிலிருந்து மணப்பாறை சென்றது. பஸ்நிலையம் அருகே பஸ்நின்றபோது மழை கொட்டியதால் எல்லோரும் பஸ்சைவிட்டு கீழே இறங்க யோசித்த வேளையில் வாலிபர்கள் குடை பிடித்தபடி கீழே இறங்கினர். அவர்களை பார்த்து கண்ணாயிரமும் மனைவி பூங்கொடியிடம் குடைவாங்கிக்கொண்டு கீழே இறங்கினார். குடையை அவர் விரிக்க முயல அது பாதி விரிந்து மூடிக்கொள்ள கண்ணாயிரம் கோபத்தில் வேகமாக குடையை விரிக்க முயன்ற வேளையில் சுழன்றடித்த காற்றினால் அவர் கையிலிருந்து விடுபட்டு குடை பறந்தது.
கண்ணாயிரம் மழையில் நனைந்துகொண்டு என்குடை என் குடை என்று அதை விரட்டிக்கொண்டு ஓடினார். காற்று வேகமாக வீசியதால் குடை பறந்து கொண்டே இருக்க கண்ணாயிரம் தாவி தாவி அதைபிடிக்க முயன்றார். ஆனால் அது அவருக்கு போக்குகாட்டிவிட்டு பறந்தபடி இருந்தது. கண்ணாயிரம் துண்டை எடுத்து தலையில் சுற்றிக்கொண்டு..என்ன என்னிடம் விளையாடுறியா..விடமாட்டேன் உன்னை என்று துரத்திக்கொண்டு சென்றார். மழை தொடர்ந்து பெய்ததால் ரோட்டில் தண்ணீர் பெருகி ஓட கண்ணாயிரம் அந்த தண்ணீரில் குதித்தபடி ஓடினார். குடை அவர் கையில் சிக்காததால் கண்ணாயிரம் முகத்தில் பயம் தெரிந்தது.
இந்த குடையை கொண்டு போகலன்னா பூங்கொடிக்கு என்ன பதில் சொல்லுறது என்று நினைத்தபோது அவருக்கு கதி கலங்கியது. ஓட்டப்பந்தய வீரன்போல் குடையை விரட்டிக்கொண்டு ஓடினார்.
அப்போது அந்த வழியாக குடைபிடித்தபடி வந்த ஒரு போலீஸ்காரர் பறந்துவந்த கண்ணாயிரத்தின் குடையை லபக்கென்று பிடித்தார். அதை பார்த்த கண்ணாயிரம் அப்பாட…குடை சிக்கிச்சி..என்று பெருமூச்சுவிட்ட வேளையில் போலீஸ்காரரிடமிருந்து அதை எப்படி மீட்பது என்று தெரியாமல் விழித்தார்.
குடையை தாவிபிடித்த போலீஸ்காரர் கண்ணாயிரத்தை முறைத்தபடி..யார் நீ என்று கேட்க…கண்ணாயிரம் முகத்தை துடைத்தபடி..நான் கண்ணாயிரமுங்க..இப்போதைக்கு. சொந்த ஊர் புதுவைங்க..என்று இழுத்தார்.
போலீஸ்காரர் உடனே என்ன போதைக்கு புதுவையா…என்ன சொல்லுற என்ற அதட்ட கண்ணாயிரம் உஷாராகி..அதாவது..இப்போ புதுவையிலே இருக்கோம்..எங்க பூர்வீகம் நெல்லைதான் என்று அடுக்கினார்.
போலீஸ்காரர் அவரிடம் அது இருக்கட்டும்..இங்கே எங்கே வந்தீங்க என்று கேட்க கண்ணாயிரம்..அது வந்து..மணப்பாறை முறுக்கு வாங்குறதுக்காக இங்கே வந்தோம்..என்று சொல்ல போலீஸ்காரர் கண்ணாயிரத்தை ஏற இறங்க பார்த்தபடி..நம்ப முடியலையே..முறுக்கு வாங்குறதுக்காக வந்தீங்களா..எதுக்கு வந்தீங்க..சொல்லு என்று மிரட்ட கண்ணாயிரம்..அய்யா மெய்யாலுமா..மணப்பாறை முறுக்குவாங்கதான் வந்தோம்..எங்களை நம்புங்க..நாங்க குற்றாலம் டூர் போறோம்..வழியிலே மணப்பாறை வந்தோம். எங்களை சந்தேகப்படாதீங்க..அய்யா..என் குடையை குடுங்க என்று கெஞ்சினார்.
போலீஸ்காரர் விடுவதாக இல்லை. உன் முழியை பாத்தா சந்தேகமாக இருக்க..உண்மையை சொல்லு நீயாரு என்று மீண்டும் கேட்டார். உடனே அவர்..நான் கண்ணாயிரமுங்க..எங்க ஊருல சின்னபுள்ளையை கேட்டாலும் சொல்லும்..ஆமா..நீங்க நம்பித்தான் ஆகணும்..என்று கெஞ்சிய குரலில் சொன்னார்.
கண்ணாயிரம் குரல் போலீஸ்காரருக்கே சிரிப்பைவரவழைத்தது.
ஆ..கண்ணாயிரம்..நீ கண்ணாயிரந்தானே..சுற்றுலான்னு பல இடத்துக்கு போர..பல ஆளை பார்ப்பே..என்றவாறு தன் சட்டைபையிலிருந்து ஓரு போட்டாவை எடுத்து கண்ணாயிரத்திடம் லேசா காட்டிட்டு மீண்டும் சட்டைபையில்வைத்து கொண்டார்.
கண்ணாயிரத்தை பார்த்து அந்தபடத்திலே இருக்கிறது யார் தெரியுதா என்று கேட்க கண்ணாயிரம் உடனே தெரிஞ்சுது ஆனா தெரியல என்று சொல்ல போலீஸ்காரர் எரிச்சலாகி என்னய்யா தெரிஞ்சுது..ஆனா இப்போ தெரியலன்னு சொல்லுற என்று திட்டினார்.
அதற்கு கண்ணாயிரம்..அய்யா..நீங்க போட்டாவை கொஞ்சம் காட்டினப்ப.அதிலே ஒரு ஆளு இருக்குன்னு தெரிஞ்சுது..நீங்க போட்டாவை பையிலேவச்சப்போ..அது தெரியலைன்னு விளக்கம் கொடுத்தார்.
போலீஸ்காரர்..ஓ அந்த தெரியலையா..போட்டா தெரியலைன்னு சொன்னியா..போட்டாவிலே இருக்கிற ஆளு யாருன்னு சொல்லு..சரியா என்றபடி…சட்டைபையிலிருந்த போட்டாவை எடுத்து காட்டினார்.
கண்ணாயிரம் அந்த போட்டோவை உற்றுபார்த்தபோது பகீரென்று மனதில் மின்னல் அடித்தது. ஆ..ஹா..இவன் அவனில்லா..நம்மளை ஏமாத்துனவன்ல்லா என்று நினைத்தார். இவனை தெரியுமுன்னா..எப்படி தெரியும்..எங்கே தெரியுமுன்னு நம்மள கேட்டு குடைஞ்சி எடுத்துடுவார். நம்மளை குற்றாலம் போகவிடமாட்டார்..தெரியாதுன்னு சொல்லிடவேண்டியதுதான் என்று மனதில் நினைத்து கொண்டார்.
அவர் யோசிப்பதை பார்த்த போலீஸ்காரர்..என்ன ..படத்திலே இருக்கிற ஆளு தெரியுதா என்று கேட்க..கண்ணாயிரம்..அது வந்து தெரியுது…ஆனா தெரியல என்று சொன்னார்.
அதை கேட்ட போலீஸ்காரர்..என்னய்யா குழப்புற..ஒண்ணு தெரியுமுன்னு சொல்லு..இல்லை தெரியாதுன்னு சொல்லு..அது என்ன தெரியும்..ஆனா தெரியாது ..என்று கேட்க..கண்ணாயிரம் அய்யா..போட்டாவிலே இருக்கிறவன் நல்லவன் இல்லைன்னு தெரியுது. ஆனா அவன் யாருன்னு தெரியல அப்படின்னு சொல்லுறதுக்குத்தான் தெரியும் ஆனா தெரியாதுன்னு சொன்னேன் என்றார்.
போலீஸ்காரர் விடுவதாக இல்லை.யோவ் ..ஒரு போட்டாவை பார்த்து அவன் நல்லவன் இல்லன்னு எப்படி சொன்னே..அவன்தான்..டிப்டாப்பா டிரஸ்போட்டிருக்கானே..அழகா இருக்கானே..நான் அவனை நல்லவன்னு சொல்லுறேன்..நீ என்ன சொல்லுற என்று கேட்க கண்ணாயிரம் ஒரு நிமிடம் யோசித்தபடி..அவன் டிப்டாப்பா டிரஸ் போட்டிருந்தாலும் நல்லவன் இல்லை என்று சொன்னார்.
உடனே போலீஸ்காரர் குறுக்கிட்டு அதான் ஏன்னு சொல்லு என்று போலீஸ்காரர் மடக்க…கண்ணாயிரத்தின் உள்மனம்..கண்ணாயிரம் உஷாரு…போட்டாவிலே இருக்கிறவனை தெரியுமுன்னு சொன்னா..நீ அவன் கூட்டாளியான்னு புடிச்சிட்டு போயிடுவான் ஜாக்கிரதை என்று சொன்னது.
கண்ணாயிரம் மனதை திடப்படுத்திக்கொண்டு..ஏதோ சொல்லவர…போலீஸ்காரர் மெல்ல..சொல்லு..சொல்லு என்று அவசரப்படுத்த..கண்ணாயிரம் அதுவந்து…நல்லவங்க போட்டாவைத்தான் போலீஸ்காரங்க வச்சிருக்க மாட்டாங்களே…கெட்டவங்க போட்டாவை வச்சிக்கிட்டுதான் துப்பு துலக்குவாங்க..நான் எத்தனை சினிமா படத்திலே பாத்திருக்கிறேன் என்று சொல்ல போலீஸ்காரர் ஆச்சரியம் அடைந்தார். யோவ்..நீ இங்கே இருக்கவேண்டிய ஆள் இல்ல..எங்க டிப்பாட்மெண்டிலே இருக்கவேண்டிய ஆளு.எப்படி போலீஸ்காரங்க ஒரு போட்டாவச்சிருந்தா அது கெட்டவன் படமாகத்தான் இருக்கணுமுன்னு கரேக்டா சொன்னபாரு.உண்மையிலே அவன் கெட்டவன்தான்..கள்ளநோட்டை புழக்கத்திலேவிட்ட கும்பல் தலைவன்.அவனைத்தான் நாங்க தேடிக்கிட்டு இருக்கோம்.கண்டுபிடிச்சா பரிசு கிடைக்கும்.புரியுதா..இதை நீ யாரிடமும் சொல்லாதே..இந்த டிப்டாப் வாலிபரைபார்த்தா ..உடனே ஏங்கிட்ட சொல்லு..என் போன்நம்பர் இது..குறிச்சுக்கோ என்றார்.
மழையில் நனைந்தபடி நின்ற கண்ணாயிரம்…நம்பரை எங்கே குறிக்க..நீங்க சொல்லுங்க..நான் மனசில் குறிச்சிக்கிறேன் என்று சொல்ல கண்ணாயிரம் காதில் போலீஸ்காரர் தனது செல்போன் எண்ணை ரகசியமாக சொன்னார். கண்ணாயிரமும் புரிந்ததுபோல் தலையை ஆட்டினார். சரி உன் போன் நம்பரை சொல்லு என்று போலீஸ்காரர் கேட்க..கண்ணாயிரம் அது..7878787878..என்று இழுக்க என்னய்யா..போன் நம்பரை சொல்லுறியா..இல்லை பஸ் நம்பரை சொல்லுறியா என்று கேட்க..கண்ணாயிரம் அது போன் நம்பர்தான் என்று சொல்லிவைத்தார்.
போலீஸ்காரர் கில்லாடி ஆச்சே..கண்ணாயிரம் சொன்ன நம்பருக்கு போன் செய்தார் .அது சுவிட்ச் ஆப் என்று வந்தது.என்ன சுவிடச் ஆப்புன்னு வருது என்று போலீஸ்காரர்கேட்க..கண்ணாயிரம் சார்ஜ் இறங்கி போச்சு.ஜார்ஜ் போடணும்..என்று பணிவாக சொன்னார்.
போலீஸ்காரர் சிரித்தபடி போ..போ..என்றுவிரட்ட கண்ணாயிரம் அவரிடம் சார் அந்த குடை…கொஞ்சம் கொடுங்க என்று கேட்டார்.
போலீஸ்காரர் முறைத்தபடி தான் கைப்பற்றிவைத்திருந்த குடையை கண்ணாயிரத்திடம் வீசிவிட்டு நடந்தார்.அதை கேச்பிடித்த கண்ணாயிரம் குடையை விரிக்கலாமா என்று முயன்றபோது..அது கம்பிகள் உடைந்து ஹோமா ஸ்டேஜில் இருப்பது தெரிந்தது..கண்ணாயிரம் விழிபிதுங்கி நின்றார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.தொடரும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.