May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தானில் வெள்ளத்தால் 2 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிந்தன-ஐ.நா. அறிக்கை தகவல்

1 min read

Floods in Pakistan completely destroy 2 lakh houses – UN Report information

28.8.2022
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு 2 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கின்றது.

பாகிஸ்தானில் வெள்ளம்

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த 3 மாதங்களாக அங்கு கனமழை, வெளுத்து வாங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. கனமழை மற்றும் வெள்ளத்துக்கு நாடு முழுவதும் சுமார் 3.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 982 பேர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே போல் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 113 பேருக்கு பலத்த காயங்களும், 1,456 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மழை, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி, அரசு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஐ.நா.வின் மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 2.18 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிந்து உள்ளன. 4.58 லட்சம் வீடுகள் பகுதியளவு சேதமடைந்து உள்ளன என தெரிவித்து உள்ளது. இதுதவிர, 20 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 7.94 லட்சம் கால்நடைகள் உயிரிழந்து உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது. கனமழையால் பாதித்த 116 மாவட்டங்களில் 30 ஆண்டு தேசிய சராசரியை விட 2.87 மடங்கு அதிக மழைப்பொழிவும், சில மாகாணங்களில் 5 மடங்குக்கு கூடுதலாகவும் மழை பொழிந்துள்ளது என தெரிவித்து உள்ளது. 3 ஆயிரம் கி.மீ. தொலைவிலான சாலைகளும் மற்றும் 145 பாலங்களும் சேதமடைந்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவசர தேவைக்கான சுகாதார நலன், காய்கறி சந்தைகள் அல்லது பிற முக்கிய சேவைகளை தேடி செல்வதற்கும், உதவி தேவையான நபர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கான வசதிகளும் கட்டுப்பட்டுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்று, 17,566 பள்ளி கூடங்கள் சேதமடைந்தோ அல்லது முற்றிலும் அழிந்தோ போய் விட்டன. 5,492 பள்ளி கூடங்களில் புலம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.