குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்
1 min read
Aippasi Vishu Festival Flag Hoisting at Courtalam Courtalanatha Swamy Temple
9.10.2022
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குற்றாலம் கோவில்
குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா இன்று முதல் வருகிற 18-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது. வருகிற 12-ம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.13-ம் தேதி விநாயகர், முருகன், குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்மை ஆகிய நான்கு தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன. 15-ம் தேதி காலை 9.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 18-ம் தேதி காலை 10.40 மணிக்கு விசு தீர்த்த வாரியும் அதைத் தொடர்ந்து ரிஷப வாகன காட்சியும், இரவில் பஞ்சமூர்த்திகள் புறப்படும் நடக்கின்றன.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் கவிதா, கண்ணதாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.