திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் நடத்தப்பட்டது-பல்லக்கை பக்தர்கள் தூக்கி வீதிஉலா வந்தனர்
1 min readPatna Pravesam was held in Thiruvavaduthurai Atheenam-devotees carried palanquins and strolled through the streets.
30.1.2023
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறையில் 24 வது ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியா சுவாமிகளின் பட்டணப்பிரவேசம் நடந்தது. இதையொட்டி அவர் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
பட்டணப்பிரவேசம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழமை வாய்ந்த திருவாடுதுறை ஆதீனம் உள்ளது.
இங்கு ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை விழா மகர தலைநாள் குருபூஜை விழாவாக ஆண்டுதோறும் தை மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குருபூஜை விழா கடந்த 19- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. பத்தாம் நாளான 28- ந் தேதி சனிக்கிழமை சிகர விழாவான பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.
சிறப்பு பூஜைகள்
விழாவையொட்டி திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டு ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார் தொடர்ந்து சிறப்பாக சமயப் பணியாற்றிய 10 பேருக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் விதம் மொத்தம் ஒரு லட்சம் அருட்கொடையாக வழங்கி ஆசி வழங்கினார்.
பின்னர் திருவாவடுதுறை ஆதீனம் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து பவளமணி. கொண்டைமணி.பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து தம்பிரான் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார்.
வீதிஉலா
தொடர்ந்து பல்லக்கில் முன்னே 10 ஆடும் குதிரைகள் ஆட்டத்துடன் மேளதாளம் முழங்க பக்தர்கள் பல்லக்கை சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது. வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.
இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு.6 துணை போலீஸ் சூப்பிரண்டு.9 இன்ஸ்பெக்டர்கள்.உள்ளிட்ட 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.