பீகார் தொழிலாளர்களுக்கு இருந்த பயம்-பீதி நீங்கிவிட்டது: ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலமுருகன் பேட்டி
1 min read
Bihar workers’ fear-panic gone: IAS Officer Balamurugan interview
7.3.2023
பீகார் தொழிலாளர்களுக்கு இருந்த பயம்-பீதி நீங்கிவிட்டது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலமுருகன் கூறினார்.
சென்னையில் பீகார் மாநில தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் அசோசியேஷன் நிர்வாகிகளை சந்தித்து பேசிய பீகார் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடமாநில தொழிலாளர்கள்
சமூக வலைதளத்தில் வந்த வீடியோ போலியானது என்பதை உறுதி செய்யும் வகையில் இங்குள்ள சூழல் காட்டுகிறது. கோவை, திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசினோம். எவ்வித குழப்பமும் இல்லை. சென்னையில் இன்று பீகார் மாநில அசோசியேஷன் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பாதிப்பு உள்ளதா என கேட்டோம். அந்த வீடியோ வந்தவுடன் தமிழ்நாடு அரசு வேகமாக செயல்பட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
எங்களுக்கு தமிழக அரசு அதிகாரிகள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ‘வீடியோ பார்த்து கொஞ்சம் பயம் இருந்தது. ஆனால் இப்போது அந்த பயம் நீங்கி விட்டது. எல்லாம் தெளிவாகிவிட்டது. அது போலி வீடியோ, நம்ப வேண்டாம் என்று தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்பதை அவர்களுக்கு தெரிவித்து இருக்கிறோம். முழு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறோம்.
நாங்கள் இந்த ஆய்வின்போது பீகார் மாநில தொழிலாளர்களிடம் பெற்ற தகவல்களை முழு அறிக்கையாக தயார் செய்து அரசுக்கு சமர்ப்பிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து பீகார் குழுவினர் தமிழக அரசு உயர் அதிகாரிகளை சந்தித்தனர். சென்னை, திருப்பூர், கோவையில் நடந்த சந்திப்பு குறித்து விளக்கி பேசினார்கள். கடந்த 3 நாட்களாக நடந்த ஆய்வுக்கு பிறகு இன்று பீகார் புறப்பட்டு செல்கின்றனர்.