April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரத்தில் தாம்பரம்-செங்கோட்டை ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு

1 min read

Thambaram-Sengottai train received enthusiastic welcome at Bhavoorchatra

9.4.2023
தாம்பரம்-செங்கோட்டை ரெயிலுக்கு பாவூர்சத்திரத்தி் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தாம்பரம்-செங்கோட்டை ரெயில்

தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை ரெயில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதனை நேற்று பிரதமர் மோடி வாராந்திர ரெயிலாக தாம்பரத்தில் தொடங்கி வைத்தார். இந்த ரெயிலானது வாரம் மும்முறை ரெயிலாக வரும் ஜூன் 1-ந் தேதி முதல் இயங்க தொடங்கும்.
1904-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையாக ரெயில்கள் இயங்கிகொண்டிருந்த நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மீட்டர் கேஜில் இருந்து அகலப்பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரெயில்கள் இயக்கம் மீண்டும் தொடங்கியது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த மீட்டர் கேஜ் வழித்தடத்தில் கொல்லத்தில் இருந்து 2 தினசரி ரெயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டன. ஆனால் அகலப்பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை இந்த வழித்தடத்தில் சென்னைக்கு ரெயில்கள் இல்லாத நிலையே இருந்து வந்தது.
தற்போது தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை ரெயில் அம்பை, பாவூர்சத்திரம் வழியாக இயக்கப்படும் என்ற அறிவிப்பு அம்பை வழித்தட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் வண்டி எண் 20683 தாம்பரம்-செங்கோட்டை ரெயில் இயக்கத்தை பிரதமர் சென்னையில் தொடங்கி வைத்தார். வழக்கமான ரெயில் சேவைகள் வண்டி எண் 20683/20684 தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரத்தில் இருந்தும், 17ந் தேதி (திங்கள் கிழமை) முதல் செங்கோட்டையில் இருந்தும் வாராந்திர சேவையாக ஏப்ரல், மே என இரண்டு மாதங்கள் இயங்கும்.
ஜூன் 1-ந் தேதி முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மாதேவி அம்பை பாவூர்சத்திரம் தென்காசி ரெயில் நிறுத்தங்களுடன் செங்கோட்டையை 10.50-க்கு சென்றடையும்.
ஜூன் 2-ந் தேதி முதல் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.5-க்கு தாம்பரத்தை சென்றடையும்.
2 இரண்டடுக்கு குளிர்சாதனப்பெட்டிகள், 5 எக்கனாமிக் மூன்றடுக்கு குளிர்சாதனப்பெட்டிகள், 5 தூங்கும் வசதி பெட்டிகள், மூன்று முன்பதிவில்லா பெட்டிகள், 2 ஜெனரேட்டர் கார் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டிருக்கும். பெட்டிகள் அனைத்தும் ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட எல்.எச்.பி. பெட்டிகள் ஆகும்.

திருவாரூர்

தாம்பரம்-திருவாரூர் இடையே மின்சார என்ஜினிலும், திருவாரூர்-செங்கோட்டை இடையே டீசல் இன்ஜினிலும் இயங்கும். தாம்பரம்-செங்கோட்டை இரு மார்க்கத்திலும் பயண நேரம் 13 மணி 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

கடையத்தில் நிறுத்தம்

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரெயில் பயணிகள் கூறியதாவது:-

சென்னைக்கு நிரந்தர ரெயில்களே இல்லாத நெல்லை-தென்காசி வழித்தடத்தில் சென்னைக்கு நிரந்தர ரெயில் கிடைத்தது மகிழ்ச்சி.மேலும் கடையத்தில் ரெயில் நிறுத்தம் வழங்க வேண்டும். செங்கோட்டை-நெல்லை இடையே முன்பதிவிக்கு ஜெனரல் கோட்டா வழங்க வேண்டும். தற்போது 5 தூங்கும் வசதி பெட்டிகளும், 7 குளிர்சாதன பெட்டிகளும் கூடுதலாக 3 தூங்கும் வசதி பெட்டிகள் சேர்க்க வேண்டும். செங்கோட்டையில் மாலை 5 மணிக்கு மேல் புறப்படும் வகையிலும் காலை 9 மணிக்குள் செங்கோட்டை சென்றடையும் வகையிலும் அட்டவணை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

வரவேற்பு

நேற்று மாலை தாம்பரத்தில் புறப்பட்ட செங்கோட்டை சிறப்பு ரெயில் பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் இன்று காலை வந்தது. அப்போது பாவூர்சத்திரம் பொதுமக்கள் சார்பில் ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரெயிலை ஒட்டிய ஓட்டுநர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டு அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா, பாவூர்சத்திரம் தொழிலதிபர் சேவியர் ராஜன், சமூக அலுவலர் தங்கராஜ், கல்லூரணி ஊராட்சி தலைவர் மற்றும் ரெயில் பயணிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.