மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு மாற்றம்; புதிய அமைச்சராக அர்ஜுன் ரா மேவால் நியமனம்
1 min read
Change of Union Law Minister Kiren Rijiju; Arjun Rao Mewal appointed as the new minister
18.5.2023
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை மந்திரியாக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறைக்கு மாற்றபட்டுள்ளார். சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அர்ஜூன் ராம் மேக்வால் கலாச்சாரத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த நிலையில் அவர் சட்டத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிரண் ரிஜிஜுவுக்கு பின்னடைவு
இந்த அதிரடி அமைச்சரவை பொறுப்பு மாற்றம் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு ஒரு உயர்வு தான் என்றாலும், அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கிரண் ரிஜிஜுவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
கிரண் ரிஜிஜு, நீதிபதிகளை நியமிக்க தற்போது நடைமுறையில் உள்ள கொலிஜீயம் முறைக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அதே நேரத்தில், ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் தேசவிரோத குழுக்களின் பகுதியாக இருப்பதாக கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இந்த அதிரடி மாற்றம் குறித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தனது டுவிட்டர் பக்கதில் மத்திய அரசை தாக்கியுள்ளார். அவருடைய பதிவில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல்,”இந்த மாற்றம் மகாராஷ்டிரா தீர்ப்பின் அவமானத்தினாலா? அல்லது மோதானி – செபி விசாரணையா?” என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அல்கா லாம்பா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில்,”சில காலமாக சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து தெரிவித்து வந்த கருத்துக்களும், நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட்டு வந்ததும் மோடி அரசுக்கு பிரச்சினையை உருவாக்கி வந்தது. மத்திய அரசு அதன் சட்ட அமைச்சரை பலிகொடுத்து தனது இமேஜை காப்பற்றியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.