January 22, 2025

Seithi Saral

Tamil News Channel

மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மரணம்; அமைச்சர்கள் அஞ்சலி

1 min read

Death of Meenakshi Amman Temple Thakkar Karumuthu Kannan; Tribute to Ministers

23/5/2023
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காரும், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி, நூற்பாலைகளின் தலைவருமான கருமுத்து கண்ணன் (வயது 70) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கருமுத்து கண்ணன்

மதுரை கோச்சடையைச் சேர்ந்த கருமுத்து தியாகராஜர் செட்டியார் – ராதா தம்பதியினரின் மகன் கருமுத்து கண்ணன். இவர் மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி தாளாளராகவும், தியாகராஜர் கலைக்கல்லூரி தலைவராகவும், கப்பலூரில் உள்ள தியாகராஜர் நூற்பாலை இயக்குநராகவும் இருந்தார்.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலர் குழுத்தலைவராக 2006ம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 ஆண்டுகளாக பதவி வகித்தார்.
2009ல் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை சிறப்புற நடத்தினார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் அபிமானம் பெற்றதால் ஆட்சிகள் மாறியபோதும் தொடர்ந்து தக்கார் பதவிகளில் நீடித்தார்.

திமுக ஆட்சியில் மாநில திட்டக்குழு உறுப்பினராக இருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நன்மதிப்பை பெற்றதால் இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராகவும் இருந்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடந்த பிப்.18ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தபோது கோயில் நிர்வாகம் சார்பில் தக்கார் கருமுத்து கண்ணன் முன்னின்று வரவேற்றார்.

மரணம்

பின்னர் உடல்நலக்குறைவால் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவில் ஏப்.23ல் தொடங்கிய கொடியேற்றம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலையில் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு மகன் ஹரி தியாகராஜன், 2 மகள்கள் உள்ளனர்.

இன்று கோச்சடையிலுள்ள அவரது வீட்டில் அவரது உடலுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, அமைச்சர்கள் பி.மூர்த்தி, கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், கனிமொழி எம்பி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.