கவர்னரை மதிக்காதவர்கள், ஜனாதிபதியை மதிக்கவில்லை என முதலை கண்ணீர் வடிக்கிறார்கள்; தமிழிசை ஆவேசம்
1 min readThose who don’t respect the governor, cry crocodile tears as they don’t respect the president; Tamilisai Soundararajan is obsessed
25.5.2023
கவர்னரை மதிக்காத மாநில அரசுகள், ஜனாதிபதியை மதிக்கவில்லை என முதலை கண்ணீர் வடிக்கிறது என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
டெல்லியில் சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து, கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி அதற்கான அடிக்கல்லை நாட்டினார். புதிய கட்டிடம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில் அமைந்து உள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தன. மக்களவை செயலகமும் இதனை உறுதிப்படுத்தியது. இதன்படி, இந்த நிகழ்ச்சி வருகிற 28-ந்தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறும். எனினும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரால் அல்ல என்றும் ராகுல் காந்தி சமீபத்தில் கூறினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பிரதமர் மோடி தலைமையிலான அரசை சாடினார். இதேபோன்று, ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் மனோஜ் குமார் ஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி. ராஜா, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி உள்ளிட்டோரும் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டனர்.
தமிழிசை
இந்த சூழலில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்கும் முடிவில் உள்ளன. இந்த முடிவை திரும்ப பெறும்படி மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டு கொண்டார். இந்நிலையில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கூறும்போது, “தங்களது மாநில கவர்னர்களை மதிக்காத மாநில அரசுகள், புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடக்க விழாவுக்கு அரசியல் சாசன தலைவர் அழைக்கப்படவில்லை என முதலை கண்ணீர் வடிக்கிறார்கள். தெலுங்கானா புதிய செயலக தொடக்க விழாவின்போது எனக்கு தகவல் தெரிவிக்கவோ அல்லது அழைக்கவோ கூட இல்லை” என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா சமீபத்தில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 2014-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் மற்றும் அசாமில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல்-மந்திரிகள், சட்டசபை கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்கள். அதில், கவர்னர் அழைக்கப்படவில்லை. 2018-ம் ஆண்டில் ஆந்திர பிரதேச முதல்-மந்திரி, புதிய சட்டசபை கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். கவர்னர் அழைக்கப்படவில்லை. 2020-ம் ஆண்டில் சத்தீஷ்கார் சட்டசபை கட்டிடத்திற்கான அடிக்கல்லை சோனியா காந்தி நாட்டினார். கவர்னர் அழைக்கப்படவில்லை. 2023-ம் ஆண்டில் தெலுங்கானா முதல்-மந்திரியால் சட்டசபை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. கவர்னர் அழைக்கப்படவில்லை” என்று தெரிவித்து உள்ளார்.