October 12, 2024

Seithi Saral

Tamil News Channel

மூக்குப்பீறி கூட்டுறவு நகர வங்கியில் ரூ.1 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்

1 min read

A jewelery appraiser who defrauded Mookubpiri Co-operative City Bank of Rs 1 crore

25.6.2023
மூக்குப்பீறி கூட்டுறவு நகர வங்கியில் ரூ.1 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்

நகை மதிப்பீட்டாளர்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பள்ளிவாசல் தெருவில் மூக்குப்பீறி கூட்டுறவு நகர குரும்பூர் கிளை உள்ளது. இதில் நாலுமாவடி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பிரபாகரன் வங்கி தலைவராக உள்ளார். சேதுக்கு வாய்த்தானை சேர்ந்த ஜெயசிங் கிறிஸ்டோபர் மேலாளராகவும், குரும்பூர் அருளானந்தபுரத்தை சேர்ந்த ராஜசேகர் நகை மதிப்பீட்டாளராகவும் உள்ளனர்.
இந்த வங்கியில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த வங்கியில் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டுறவு சங்கங்களின் கள அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம்.

போலி நகைகள்

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரிகள் வங்கி கணக்குகளை தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நகைகளை ஆய்வு செய்தபோது 869 பேர் நகைக்கடன் பெற்றுள்ளது தெரியவந்தது. இந்த நகைகளை சோதனை செய்த போது, 869 நகை பைகளில் 36 பைகளில் 388 பவுன் போலி நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் போலி நகைகளை கொண்டு ரூ.1 கோடியே 6 லட்சம் கடன் பெற்றது தெரியவந்தது. இது தணிக்கை செய்த அதிகாரிகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இந்த மோசடி குறித்து கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் லதா, துணை பதிவாளர் சந்திரா, சார்பதிவாளர் பொன்செல்வி ஆகியோர் கடந்த 2 நாட்களாக தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது நகை மதிப்பீட்டாளர் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 36 பேரில் வங்கி கணக்குகளில் சுமார் 388 பவுன் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ. 1.06 கோடி மோசடியாக கடன் பெற்றிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக வங்கி தலைவர் பிரபாகரன், மேலாளர் ஜெயசிங் கிறிஸ்டோபர், காசாளர், நகை மதிப்பீட்டாளர் ராஜசேகர் ஆகியோரிடம் தொடர்ந்து 2-வது நாளாக விசாரணை நடத்தினர். விசாரணையில், நகை மதிப்பீட்டாளர் போலி நகைகளை கொண்டு மோசடியாக பணம் பெற்றதை ஒத்துக் கொண்டார். மேலும் இந்த பணம் முழுவதையும் உடனடியாக வங்கியில் செலுத்தி விடுகிறேன் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக நகை மதிப்பீட்டாளர் ராஜசேகர் நேற்று ரூ.50 லட்சத்தை வங்கியில் ரொக்கமாக செலுத்தினார். ரூ.49 லட்சத்துக்கு காசோலை கொடுத்துள்ளார். பாக்கி 7 லட்சத்துக்கு வங்கி ஊழியர்களின் பி.எப். பணம் பிடித்தம் செய்யப்பட உள்ளது.

நடவடிக்கை

ராஜசேகர் காசோலையாக கொடுத்த தொகை வங்கி கணக்கில் திங்கள் கிழமை செலுத்தியவுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கு உடந்தையாக இருந்த ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மோசடி சம்பவம் வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு விவசாய சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராமையா கூறியதாவது:-
விவசாயிகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கூட்டுறவு வங்கியை நம்பியே நகை அடமானமும் முதலீடும் செய்து வந்தோம். ஆனால் கூட்டுறவு சட்டங்களின் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை வங்கியில் மோசடி செய்து வருகின்றனர். கூட்டுறவு சங்க அதிகாரிகளில் பெரும்பாலான அதிகாரிகள் சரியான முறையில் தணிக்கை செய்யாததால் தான் இந்த மோசடியில் ஊழியர்கள் ஈடுபட முக்கிய காரணமாக இருக்கிறது. குரும்பூர் வங்கியில் ஒரு வருடத்திற்கும் மேலாகியும் விவசாயிகளின் நகைகளை திரும்ப வழங்கவில்லை. இந்த வங்கி தற்போது செயல்பாடுகளில் இருந்தாலும் யாரும் நகையை அடமானம் வைக்கவும், டெபாசிட் செய்யவும் முன் வராமல் கடந்த ஒரு வருடமாக வெறிச்சோடி கிடைக்கிறது. பொதுமக்கள் யாரும் நகையை அடமானம் வைக்க முன் வராததால் வங்கியில் அப்ரைசர் கூட பணியில் இல்லை. 2 பணியாளர்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர். இதனால் பரபரப்பாக செயல்பட்ட குரும்பூர் கூட்டுறவு வங்கி திறந்திருந்தும் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றது. தற்போது அடுத்த கூட்டுறவு வங்கியும் மோசடி புகாரில் சிக்கி உள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் எங்கே செல்வது என தெரியாமல் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.