பா.ஜ.க.வின் திசை திருப்பும் தந்திரத்தை தி.மு.க.வினர் முறியடிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
1 min read
DMK must defeat BJP’s diversionary tactics- MGA Stalin advises
13.9.2023
பா.ஜ.க.வின் திசை திருப்பும் தந்திரத்தை தி.மு.க.வினர் முறியடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சனாதனம்
எந்த ஒரு பிரச்சனையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சனைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் பா.ஜ.க.வினர் வல்லவர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். நாட்டில் நடைபெறும்-பற்றி எரியும் எந்தப் பிரச்சனைக்கும் வாய் திறக்காத பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ‘சனாதனம் குறித்து தக்க பதில் சொல்லுங்கள்’ என்று மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் உத்தரவு போடுகிறார் என்றால், அதன் மூலமாக குளிர்காய நினைக்கிறார் என்றே பொருள்.
சனாதனம் பற்றி ஒன்றிய அமைச்சர்களில் யாராவது ஒருவர் தினந்தோறும் எதையாவது வம்படியாகப் பேசி, அதையே விவாதப் பொருளாக ஆக்கி மக்கள் கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியின் தோல்விகளை மறைக்கும் தந்திரத்துக்கு நம்மவர்கள் இடமளித்து விடக்கூடாது.
வெறுப்பு அரசியல்
2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நாளும் வெறுப்பரசியலை ஊக்குவித்து, இந்தியத் திருநாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பா.ஜ.க. அரசு, அதை மறைக்க விளம்பர ஜாலத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அதைத் தான் நாம் அனைவரும் முனைப்பாக பரப்புரை செய்தாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.