மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததில் 3 பேர் சாவு
1 min read
3 people died after drinking sanitiser mixed with alcohol
23.9.2023
கும்பகோணத்தில் அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததில் 3 பேர் இறந்தனர்.
மது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெருமாண்டி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது 48). கும்பகோணம் கருணைகொல்லை தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(43). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் (45), ஜெயகிருஷ்ணா (49). இவர்கள் 4 பேரும் கூலி தொழிலாளிகள். கடந்த வியாழக்கிழமை இரவு 4 பேரும் கும்பகோணம் காவேரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது போதை குறைவாக இருந்ததால் மதுவில் சானிடைசர் மற்றும் போதை மாத்திரைகளை கலந்து குடித்தனர்.
இதில் வீரியம் அதிகமாகி பாலகுரு, சவுந்தரராஜன் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து இறந்தனர்.
மேலும் அவர்களுடன் மது அருந்திய முருகன், ஜெயகிருஷ்ணா கதி என்ன ஆனது என்று போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே சம்பவம் நடந்த அன்று முருகன், ஜெயகிருஷ்ணா ஆகியோர் போதையில் தள்ளாடியபடி சென்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகே சாலையோரம் சுருண்டு விழுந்து கிடந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
உடனே அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று முருகன் இறந்தார். ஜெயகிருஷ்ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் கண் முழித்தால் தான் நடந்த முழு விவரங்கள் தெரியும் என்று போலீசார் கூறினர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் ரத்தக்கறையும் இருந்ததால் அது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுவில் சானிடைசர் கலந்து குடித்து 2 பேர் நேற்றுமுன்தினம் பலியான நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.