அயோத்தி ராமர் கோவில் பூசாரிக்கு மாத சம்பளம் ரூ.32,000 ஆக உயர்வு
1 min read
Ayodhya Ram temple priest’s monthly salary increased to Rs.32,000
12/10/2023
அயோத்தி ராமர் கோவில் பூசாரிக்கு மாத சம்பளம் ரூ.32,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
ராமர் கோவில்
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்படுகிறது. அடுத்த வருடம் ஜனவரியில் இக்கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான பலன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமக்கு கிடைக்கும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது.
இதற்கு கோவில் ஊழியர்கள் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பது பா.ஜ.க.வின் எண்ணமாக உள்ளது.
இச்சூழலில் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்க, அக்கோவிலை கட்டிவரும் ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை, உத்தர பிரதேச அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கோவில் தலைமை அர்ச்சகரின் மாத சம்பளம் ரூ.25,000 ஆக உள்ளது. இது ரூ.32,500 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்குமுன் ரூ.15,520 என்றிருந்த அவர்களது மாத சம்பளம் இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 6 மாதங்களில் அவர்களுக்கான ஊதியம் இரண்டு மடங்கு உயர்கிறது.
இரண்டு மடங்கு உயர்கிறது.
இதுபோல் உதவி அர்ச்சகர்களுக்கு கடந்த ஏப்ரலில் ரூ.20,000 என்றிருந்த சம்பளம் ரூ.31,960 ஆகவும், இதர உதவியாளர்களுக்கு ரூ.8,940 என்றிருந்த ஊதியம் இனி ரூ.24,440 ஆகவும் உயர்த்தி தரப்படும். ராமர் கோவிலின் மற்ற பணியாளர்களுக்கும் இதேபோல் ஊதிய உயர்வு கிடைக்கும். வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் இதுபோல் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளது.
இதற்காக 16 பேர் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையில் அனைவரது சம்பளம், இதர படிகள் மற்றும் சலுகைகளை உயர்த்தலாம் என அறிவுறுத்தியது. இதையடுத்து இதன்படி சம்பள உயர்வு அளிக்கலாம் என உத்தரபிரதேச அரசுக்கு காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையையும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
வாரணாசி அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரமும் இதர பணியாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.47 ஆயிரம் வரையும் சம்பளம் கிடைக்கிறது. ஊதிய உயர்வுக்கு பிறகு அனைவரின் சம்பளம் இரு மடங்கை நெருங்கும் என கூறப்படுகிறது. இக்கோவிலில் அர்ச்சகர்களுடன் சேர்த்து சுமார் 150 பேர் பணியாற்றுகின்றனர். இக்கோவிலில் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரமும் அளிக்கப்பட உள்ளது. உத்தர பிரதேச அரசின் இந்த முடிவுக்கு எதிர்வரும் மக்களவைத் தேர்தல் காரணமாக கூறப்படுகிறது.