June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாசின் மேலும் ஒரு முக்கிய தளபதி பலி

1 min read

Another key Hamas commander was killed in the Israeli attack

27/10/2023-
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாசின் முக்கிய தளபதிகள் 2 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கமாண்டர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவின் 2 தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாசின் டார்ஜ் தபா பட்டாலியனின் கமாண்டர் ரபத் அப்பாஸ், போர் மற்றும் நிர்வாக உதவி தளபதி தரேக் மரூப் ஆகியோர் போர் விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றும் ஹமாசின் துணை உதவியாளர் இப்ராகிம் ஜெதேவாவும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாலியன் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவாக கருதப்படுகிறது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

750 பேர் பலி

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. வடக்கு, தெற்கு மற்றும் மத்திய காசா என அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகின்றன.

24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 750 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், சிறுவர்கள் என கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை மட்டுமே குறிவைப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், தாக்குதல்களில் காசா மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படுகின்றனர். இதனால் முந்தைய போர்களில் இல்லாத அளவுக்கு உயிரிழப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை காசாவில் 6,500-க்கும் அதிகமானோர் பலியானதாக காசா சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

மேலும் சுமார் 17,500 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 1,600-க்கும் அதிகமானோர் கட்டிட இடிபாடுகளில் புதைந்து மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர்.

அதோடு தரை, கடல், வான் வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர். இதில் 1,400 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட 200-க்கும் அதிகமானோரை ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றனர்.

இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரை அறிவித்து, காசா மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது. அதன்படி கடந்த 20 நாட்களாக காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *