கண்ணாயிரத்தை குழப்பிய பைதா/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min read
Baitha who confused the eyes/ comic story / Tabasukumar
31.10.2023
கண்ணாயிரம் அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு சுற்றுலா பஸ்சை பிடிக்க சென்றபோது மழையில் நனைய தேன் பாட்டில் உருண்டதால் அதை பிடிக்க தரையில் விழுந்து புரண்டு அந்த சேறு போக பாறையிலிருந்து விழுந்த மழை நீரில் குளித்தார்.பின்னர் ரோட்டின் மறுபக்கம் நின்ற சுற்றுலா பஸ்சை பிடிக்க குறுக்கே ஓட.. எதிரே வந்த அரசு பஸ் டிரைவர் ஏச.. கண்ணாயிரம் பதிலுக்கு ஏச ஒரே ரகளை மயம்.
அரசு பஸ்சில் இருந்தவர்கள் கண்ணாயிரத்தை சாவு கிராக்கி என்று ஏசிவிட்டு செல்ல அவருக்கு அதன் பொருள் புரியாததால்.. பூங்கொடியிடம் கேட்போம் என்று சுற்றுலா பஸ் அருகே ஓடி வர..பஸ்சில் வாசலில் நின்ற பூங்கொடி கண்ணாயிரத்தை பார்த்து கையை அசைக்க கண்ணாயிரம் உற்சாக மிகுதியால் துள்ளினார்.
கண்ணாயிரம் பஸ்சில் தாவி ஏற முயன்றபோது பூங்கொடி அவரிடம் தண்ணியிலே நனைந்தபடி பஸ்சில் ஏறாதீங்க.. ஒரே தண்ணியாயிரும்.. மழைதான் விட்டுட்டே அதனால ஈர வேட்டியை கழற்றிட்டு இந்த வேட்டியை கட்டிட்டு வாங்க என்று ஒரு வேட்டியை கண்ணாயிரத்திடம் கொடுத்தார். கண்ணாயிரம்..என்ன.. நடு ரோட்டில் நின்று எப்படி வேட்டியை மாற்ற முடியும்… பூங்கொடி எனக்கும் வெட்கம் இருக்காதா என்று சிணுங்கினார்.
அதற்கு பூங்கொடி..ம்..விளையாட்டு பண்ணாதீய..பஸ்சுக்கு பின்னால போயி மறைவாக நின்று வேட்டியை மாத்திட்டு வாங்க என்று அதட்டினார்.
கண்ணாயிரமும் ஓ.கே. என்றபடி பஸ்சுக்கு பின்னால் சென்று ஈரவேட்டியை கழற்றிட்டு வேறு வேட்டி உடுக்க.. முயல அப்போது காற்றடிக்க.. கண்ணாயிரம் வேட்டியை தூக்க அவர் கைகளால் மறைக்க போராடிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அங்கு காரில் வேகமாக வந்த சிலர்.. கஸ்மாலம் கஸ்மாலம் என்று திட்ட கண்ணாயிரம் கோபத்தில் நாமும் திட்ட வேண்டும் என்று நினைத்தவர்.. மனசுக்கு வந்த அந்த வார்த்தையை பயன்படுத்தி சாவுகிராக்கி சாவுகிராக்கி என்று தி்ட்டினார். காரில் இருந்தவர்கள்..ஓ..பலே ஆளா இருப்பான் போலிருக்கே..நாம கஸ்மாலம் என்று சொன்னா பதிலுக்கு சாவுகிராக்கின்னு சொல்லுறானே.. இவன்கிட்ட விளையாட்டு காட்டக் கூடாது என்று நினைத்து காரை வேகமாக ஓட்டிச்சென்றனர்.
கண்ணாயிரத்துக்கு சிரிப்பு தாங்க முடியல..ஓடுங்கடா..ஓடுங்க..அழகிய லைலா. இவளது ஸ்டைலா.. என்று பாடியவாறு காற்றில் தூக்கிய வேட்டியை அமுக்கி பிடித்தபடி..பஸ்சின் பின் பக்கத்திலிருந்து முன்பக்கத்துக்கு வந்தார்.
கண்ணாயிரம் கோணல் மாணலாக வேட்டியை கட்டியதால் அவர் வருவதை சுடிதார் சுதா பார்த்து ரசிக்க கண்ணாயிரத்துக்கு வெட்கம் தாங்க முடியவில்லை.
சிரித்து கொண்டே பஸ்சின் முன்பக்கம்வந்து..பஸ்சில் ஏற முயற்சிக்க பூங்கொடி ஒரு பையைக்கொடுத்து கண்ணாயிரத்திடம்.. ஈரமான வேட்டியை இந்த பையில் வையுங்க என்றார்.
கண்ணாயிரம் அந்த பையை வாங்கி ஈர வேட்டியை வைத்தபோது பஸ் டிரைவர் ரிவர்ஸ் எடுக்க..கண்ணாயிரம் பஸ்சில் ஏற முடியாமல் தடுமாறினார்.
அப்போது பஸ்சிலிருந்த பயில்வான் கண்ணாயிரம் பஸ்சக்கரத்தில் சிக்கிவிடக்கூடாது என்பற்காக.. யோவ்..பாத்து..பாத்து பைதா..பைதா என்று சத்தம் போட கண்ணாயிரமோ தன் கையில் உள்ள பையை கேட்பதாக நினைத்து நான் தரமாட்டேன்.. நான் தரமாட்டேன் என்று அடம் பிடித்தவாறு பஸ்சில் ஓடி ஓடி ஏற முயன்றார்.
சக்கரம் ஏற இருக்கும் நிலையை அறிந்த பயில்வான்..யோவ்..யோவ்..பைதா…பைதா என்று கத்தினார்.
ஆனால் கண்ணாயிரம் கண்டுகொள்ளாமல் ம் பைதான்னு கேட்டா பையை கொடுக்கமுடியுமா.. முடியாது நீங்க வேற பையை பாருங்க என்று எகிறினார்.
உடனே பயில்வான் என்னடா..பஸ்சக்கரத்தை நெல்லை சீமையில பைதான்னு சொல்லுவாங்க. அது இவனுக்கு புரிய மாட்டேங்குதே… சக்கரத்தில் சிக்கி செத்துத் தொலையப்பொறான் என்று நினைத்தவர் கண்ணாயிரத்தை பார்த்து ஏய் சாவுகிராக்கி.. பஸ் சக்கரத்துக்குள் விழுந்து செத்து தொலையப் போற. பேசாம ஒரு இடத்தில் நில்லு.. உன்னை ஏத்தாம போகமாட்டோம் என்றார்.
ஆனால் உன்னை ஏத்தாம போகமாட்டோம் என்று பயில்வான் சொல்லியதை தவறாக புரிந்து கொண்டு.. என்ன பயமுறுத்தியரியளா..ஏத்துங்க பாப்போம்.. சும்மா எங்க கை புளியங்க பறிக்க போயிடுமா..ம் தைரியம் இருந்தா பஸ்சை ஏத்துங்க பாப்போம் என்று எகிற பயில்வானுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
அடேய்.. உன்னை ஏத்தாம போகமாட்டோமுன்னு நான் சொன்னதை நீதப்பா புரிஞ்சிக்கிட்ட..பஸ்சை உன்மேல ஏத்தாம போகமாட்டேன்னு நான் சொல்லலை.. அதாவது பஸ்சிலே உன்னை ஏத்தாம போகமாட்டோம்..என்றுதான் நான் சொன்னேன்.புரியுதா என்றார்.
கண்ணாயிரத்துக்கு சற்று புரிந்தது.ம் அப்பம்சரி..ஆனா சாவுகிராக்கின்னு ஏன் சொன்னீங்க..அதுக்கு பதில் சொல்லுங்க என்று கண்ணாயிரம் கேட்க..பயில்வான்..விழித்தார்.
எல்லோரும் ஏசும்போது சாவுகிராக்கின்னு ஏசுவாங்க..அப்படித்தான் நானும் சொன்னேன்..மற்றபடி எனக்கு அதன் அர்த்தம் தெரியாது.. நீ பஸ்சிலே ஏறு..பேசிக்கிட்டே போவோம் என்க..கண்ணாயிரம் அதை ஏற்கவில்லை.
எப்படி அர்த்தம் தெரியாம சொல்லலாம் என்று கண்ணாயிரம் கேள்வி எழுப்பினார்.
உடனே பயில்வான்..யோவ்..கஸ்மாலமுன்னு யாரையோ திட்டினிய..அதுக்கு என்ன அர்த்தம்..அதைச்சொல்லு என்றார்.
கண்ணாயிரம்..ம்..அதுவந்து..என்று இழுத்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.