June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை குழப்பிய சாவுக்கிராக்கி/நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

The driver scolded Kannayira /Comedy Story / Tabasukumar

27.10.2023
கண்ணாயிரம் அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு சுற்றுலா பஸ்சில் ஏற ஓடி வந்தபோது மழை கொட்டியது. அப்போது தேன் பாட்டில் உருண்டோட அதை எடுக்க முயன்றபோது தடுமாறி கீழே விழுந்து சேறும் சகதியுமாக கண்ணாயிரம் பஸ்சுக்கு சென்ற நிலையில் அவரை குளித்துவிட்டு வரும்படி பூங்கொடி விரட்டினார்.
அதனால் பாறையிலிருந்து கொட்டியமழைநீரில் கண்ணாயிரம் நீந்தி குளித்தபோது அவரைப்பார்த்த ஒருவர் என்ன டிக்கெட் எடுத்துவிட்டாயா என்று கேட்க கண்ணாயிரம் திகைக்க ஆற்றில் மூழ்கி செத்துபோவாய் என்று அவர் விளக்கம் சொல்ல கண்ணாயிரம் பயந்துபோய் அடி ஆத்தாடி என்றவாறு அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினார்.
சுற்றுலா பஸ் நின்ற இடத்தை தேடியபோது அந்த இடத்தில் பஸ்சை காணாமல் என்ன ஆச்சு.. பஸ்சை காணம் விட்டுட்டு ஓடிட்டாங்களா என்று அங்கும் இங்கும் பார்த்தார். அய்யோ பாண்டிச்சேரிக்கு ஒத்தையில எப்படிபோவே… காசுகூட பூங்கொடிக்கிட்டத்தான் இருக்கு என்று அழுவாத குறைக்கு கண்ணாயிரம் வந்துவிட்டார்.
அப்போது ரோட்டின் மறு பக்கத்தில் சுற்றுலா பஸ் வெகு தூரத்தில் நிற்க.. பூங்கொடி கண்ணாயிரத்தைப் பார்த்து.. வாங்க..வாங்க என்று கையை அசைத்தார்.
மனைவியின் வளையல் கரங்களை பார்த்த கண்ணாயிரம்.. பதிலுக்கு உற்சாகத்தில் கையை அசைத்தார்.
கொட்டும் மழையில் நனைந்தவாறு..வந்துட்டேன்…என்று கூவியவாறு கண்ணாயிரம் சுற்றுலா பஸ்சை நோக்கி ஓடினார்.
ரோட்டின் மறு பக்கத்தில் நின்ற பஸ்சை பிடிக்க கண்ணாயிரம் ஒண்..டூ..திரி..என்று சொல்லியபடி ரோட்டை கடந்து ஓட.. எதிரே வந்த அரசு பஸ் டிரைவர்… உஷாராகி சடன் பிரேக் போட்டார்.
கண்ணாயிரம்..பயந்து நடுங்கியபடி.. நிற்க.. அரசு பஸ்டிரைவர் கோபத்தில் யோவ்.. வீட்டிலே சொல்லிட்டு வந்தியா என்று சத்தம் போட்டார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம்..அரசு பஸ்டிரைவரை பார்த்து.. யோவ் வீட்டிலே சொல்லிட்டு வந்தியான்னு கேட்கிறீய.. உனக்கு அறிவு இருக்கா.. வீட்டுல யாராவது சொல்லிட்டுவருவாங்களா.. வீடு.. மனிதனா… சுவரு.. அதுக்கிட்ட சொன்னா.. அதுக்கு கேட்குமா..விவரம் தெரியாம கேட்கிறீய.. உன்ன யெல்லாம் எப்படிதி்தான் டிரைவர் வேலைக்கு சேத்தாங்களோ… என்று எகிறினார்.
அதைக்கேட்டதும் அரசு பஸ் டிரைவர் தலையில் கைவைத்தபடி.. ஏய்யா..நான் விவரம் இல்லாம கேட்கிறனா.. இப்படி பஸ்சுக்கு குறுக்கே ஓடி வர்ரேயே..வீட்டில பொண்டாட்டிக்கிட்ட சொல்லிட்டு வந்தியா என்று கேட்டார்.
கண்ணாயிரத்துக்கு பொசுக்கென்று கோபம் வந்தது. என்ன.. மறுபடியும் விவரம் தெரியாம கேட்கிறீய..நான் சுற்றுலா வந்திருக்கேன். பொண்டாட்டிக்கிட்டு சொல்லிட்டு நான் மட்டும் தனியா வரமுடியுமா.. நானும் என் மனைவியும் சேர்ந்துதான் சுற்றுலா வந்திருக்கிறோம்.. புரியுதா.. அதனால பொண்டாட்டிக்கிட்ட சொல்லிட்டுவந்தியான்னு கேட்காதீங்க.. பொண்டாட்டி சொல்லப்போயிதான்.. நான் ரோட்டை கிராஸ் பண்ணி சுற்றுலா பஸ்சை நோக்கிஓடினேன். இது தெரியாம பஸ்சை நிறுத்திட்டு டிட்டேய்ல்-ஸ் கேட்கிறீய டிட்டெய்ல்ஸ்.. கொஞ்சம் அசந்தா ஆளை குரங்காக்கிடுவீங்க போல என்று நெஞ்சை நிமிர்த்தினார்.
கண்ணாயிரத்தைப் பார்த்த அரசு பஸ் டிரைவர்..தலையை குலுக்கியவாறு ..எந்த ஊரய்யா நீ..பஸ் குறுக்கே பாய்ந்து போறீய..நான் உஷாரா பிரேக் போடலன்னா..செத்து தொலைஞ்சிருப்பிய.. அதனால்தான் வீட்டிலே சொல்லிட்டு வந்தியான்னு கேட்டேன். போ..பாத்துப்போ என்றவாறு பஸ்சை ஸ்டாட் பண்ணினார்.
கண்ணாயிரம்..ஆ என்னது எல்லாரும் அபசகுனமா பேசுறாங்க….யோவ்..பஸ்சை நீஒழுங்கா ஓட்டிட்டு போய்யா..இப்படி சட்டன் பிரேக் போட்டு மக்களை பயமுறுத்தாதேபோ..போ.. என்று டிரைவருக்கு அறிவுரை சொன்னார்.
அரசு பஸ்டிரைவர். ம் இன்னைக்கு யார் முகத்திலே முழிச்சேன்னு தெரியல..என்றவாறு ஹாரன் அடித்தபடி பஸ்சை ஓட்டிச்சென்றார்.
பஸ்சில் இருந்தவர்கள்..கண்ணாயிரத்தை பார்த்து சாவுகிராக்கி என்று ஏசி விட்டு செல்ல.. கண்ணாயிரம் மறுபடியும் டென்சன் ஆனார்.
என் பெயர் தெரியலன்னா சும்மா பேசாம போகணும்.. என் பெயரு கண்ணாயிரம்..அதைச் சொல்லாம இது என்ன புதுசா சாவுகிராக்கின்னு சொல்லுறது.. ஒரு நாகரிகம் வேண்டாமா.. என்க.. அரசு பஸ் கண்ணாயிரத்தை கடந்து வேகமாக சென்றது.ம்..ஏசுனாத்தான் மதிக்காங்க..ஆமா..என்னைப் பாத்து சாவுகிராக்கின்னு ஏன் சொன்னாங்க.. சாவுகிராக்கின்னா என்ன..எதுவும் இருந்திட்டு போகட்டும்.. பூங்கொடிக்கிட்டு கேட்டிக்கிடுவம்..என்றவாறு கண்ணாயிரம் ரோட்டைத் தாண்டி ஓடினார்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *